search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவடி"

    ஆவடியில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி:

    ஆவடி வசந்தம் நகரில் யமுனை தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (32). சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக பணிபுரிகிறார்.

    கடந்த வாரம் தனது சொந்த ஊரான ஊட்டிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறையில் இருந்த பீரோவை பார்த்தார்.

    அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

    ஆவடி:

    ஆவடி நகராட்சியில் ஆவடி, பருத்திப்பட்டு, விளிஞ்யம்பாக்கம், திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, அண்ணனூர், பட்டாபிராம், கோவில்பாதாகை, மிட்டின மல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன.

    இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் நகராட்சி பகுதிகளில் சுமார் 140 டன் குப்பைகள் சேர்கின்றன.

    இவ்வாறு நகராட்சி முழுவதும் 4200டன் குப்பைகள் மாதந்தோறும் சேருகின்றன. குப்பைகளை 170 நகராட்சி ஊழியர்கள் மற்றும் 700 ஒப்பந்த ஊழியர்கள் அள்ளி வருகின்றனர். மேலும், அந்த குப்பைகளை ஊழியர்கள் சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரி வர அள்ளப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “முக்கிய சாலைகள், தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகிறது.

    அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அச்சாலைகளில் வேகமாக வாகனங்கள் செல்லும் போது குப்பைகள் காற்றில் பறந்து கடைகள், வீடுகளுக்குள் விழுகிறது.

    சாலை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகிவருகிறது.

    தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாகவே உள்ளனர். இது தொடர்பாக பொது நலச்சங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

    எனவே, நகராட்சி உயர் அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆவடியில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, மாடர்ன்சிட்டி 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ். ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவியும், மகளும் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மாலை லோகேஷ் இரவு பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதேபோல் அருகில் பூட்டி இருந்த கோபி என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் 3 கிலோ வெள்ளிப் பொருட்களை சுருட்டி சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். கோபி மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.

    மேலும் அதே பகுதி 5-வது தெரு, 6-வது தெருவில் உள்ள மொத்தம் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. அந்த வீடுகளில் ஆட்கள் இருந்ததால் மர்ம கும்பலின் கொள்ளை திட்டம் நிறைவேறவில்லை.

    இதுகுறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளை நடந்த லோகேஷ் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பழுதாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகவில்லை.


    தாய் மற்றும் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநின்றவூர்:

    ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் அருண்பாண்டியன். ஊசி, பாசி மணி மற்றும் பொம்மை பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (வயது 22). இவர்களது 3 வயது மகள் சுஜாதா.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருண்பாண்டியன் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டார். வீட்டில் ரோஜாவும், அவரது மகள் சுஜாதாவும் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் ரோஜாவும், சுஜாதாவும் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அதே பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த காட்பாடியைச் சேர்ந்த கைரேகை ஜோதிடர் வீரகுமார் (21) என்பவர் ரோஜாவை கற்பழித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் இதனை பார்த்த ரோஜாவின் 3 வயது மகள் சுஜாதாவின் தலையிலும் கல்லைப் போட்டு கொடூரமாக கொன்று உள்ளார்.

    இதையடுத்து வீரகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நான் நரிக்குறவர் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து அடிக்கடி தங்குவேன். அப்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ரோஜா மீது ஆசை ஏற்பட்டது.

    நேற்று இரவு உறவினர் வீட்டில் தூங்கியபோது மது போதையில் இருந்தேன். ரோஜாவின் கணவர் வெளியூர் சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியளவில் அவளது வீட்டுக்குள் ஏறிக் குதித்து சென்றேன். அங்குள்ள அறையில் ரோஜாவும், அவரது மகள் சுஜாதாவும் தூங்கிக் கொண்டு இருந்தனர். ரோஜாவை நெருங்கியபோது அவர் கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டார்.

    உடனே அருகில் கிடந்த கல்லால் அவளது தலையில் தாக்கினேன். இதில் ரோஜா மயங்கினார். பின்னர் அவரை கற்பழித்தேன்.

    இதற்குள் சத்தம் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த ரோஜாவின் மகள் சுஜாதா எழுந்து விட்டாள். இதனால் என்னை அடையாளம் காட்டி விடுவாள் என்று நினைத்து சிறுமி சுஜாதா மீது கல்லை போட்டு கொன்றேன். மேலும் ரோஜா மீது மீண்டும் கல்லைப் போட்டு கொன்று விட்டு தப்பி சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தாய்-மகள் கொலை குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது கொலையாளி வீரகுமார் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் எதுவும் நடக்காதது போல் தூங்கிக் கொண்டிருந்தார்.

    ரோஜா மீதான வீரகுமாரின் நடவடிக்கை குறித்து சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நள்ளிரவில் வீரகுமார் அப்பகுதியில் சுற்றியதை சிலர் பார்த்து இருந்தனர்.

    இதனை வைத்து வீரகுமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். முதலில் கொலை செய்ததை மறுத்த அவர் பின்னர் 2 பேரையும் கொன்றதை ஒப்புக் கொண்டார். மேலும் மோப்ப நாய் ஜான்சி வீரகுமாரை கவ்வி பிடித்தது.

    கைதான வீரக்குமார் மீது பீர்க்கண்கரணை போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. இந்த கொலையில்அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.

    ரோஜாவின் கணவர் அருண்பாண்டியன் வியாபாரம் சம்பந்தமாக திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு மனைவி, மகள் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை மவுண்ட்- பூந்தமல்லி, ஆவடி சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த வீடு மற்றும் கடைகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மவுண்ட்- பூந்தமல்லி, ஆவடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

    இந்த சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதன்படி 6 வழிப்பாதையாக அகலப்படுத்துவதற்கு தனியார் பட்டா நிலங்களை நில ஆர்ஜிதம் செய்திட மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி காட்டுப்பாக்கம் பகுதியில் ரோட்டை ஒட்டிய கடைகள், வீடுகள், காலியிடங்களை அரசு கையகப்படுத்த உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்டோரது வீடு, கடைகள், திருமண மண்டபம், கோவில்கள் இடிக்கப்பட உள்ளது.

    இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்புபவர்கள் 30 நாட்களுக்குள் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்கப்படும் விளக்கங்கள் அதிகாரிகளால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

    ஆட்சேபனைதாரர்கள் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் ஆகஸ்டு 17-ந்தேதி டி.ஆர்.ஓ. முன்னிலையில் ஆஜராகியும் விளக்கம் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×