என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆவடியில் 3 தளத்துடன் ரூ.36 கோடி செலவில் நவீன வசதியுடன் மாறும் பேருந்து நிலையம்
- ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
- கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
ஆவடி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய நிலையமாக உள்ளது. தற்போது இந்த பஸ்நிலையம் 1.93 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கிருந்து கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தொலைதூரப் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில் இங்குள்ள பஸ்நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இட நெருக்கடியில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஆவடி பஸ்நிலை யத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆவடி பஸ் நிலையத்தை 3 தளங்களுடன் ரூ.36.06 கோடி செலவில் நவீன வசதியுடன் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
65 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்தில் உணவுத் திடல், ஷாப்பிங் பகுதி, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறைகள் மற்றும் பஸ்களை நிறுத்து வதற்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட தரைத்தளம், ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
ஆவடி பஸ் நிலையம் சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஆவடி ரெயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. ஏற்கனவே ஆவடி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதனை இந்த ஆண்டு ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது ஆவடி பஸ்நிலைய பணிகளும் நடந்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து எதிரே உள்ள ரெயில் நிலையத்திற்கு பயணிகள் சாலையை கடக்காமல் எளிதாக செல்லும் வகையில் பஸ்நிலையம்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர் மட்ட பாதை அமைக்க வேண்டும் என்று பொது மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






