search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy rains"

    • சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
    • இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் பாதிக்கப்படக்கூடும்.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை என்பது பெய்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை நின்றது.

    இதனால் விவசாயிகள் தங்கள் நெல் பயிர்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    குறிப்பாக திருவாரூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமானது முதல் கன மழை என்பது பெய்து வருகிறது.

    இந்த மழையின் காரணமாக சம்பா நெல் பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெய்த மழையின் கார ணமாக நெல் பயிர்களில் மழை நீர் தேங்கி இருந்ததால் நெல் பயிர்கள் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகி இருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை என்பது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இந்த மழை தொடர்ந்து பெய்தால் ஒட்டுமொத்த நெல் பயிர்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படவில்லை.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏழு மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த மழை நாளை காலை 8.30 மணி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இதனால் 250 பேர் கொண்ட 10 தேசிய மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கனமழை காரணமாக கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    • திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • எச்சரிக்கை அறிவிப்புகள் வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சுழி, உடையனாம்பட்டி, கிருஷ்ணாபுரம், புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்றில் பல ஆண்டு களுக்கு பின்னர் மழை நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் உடையனாம்பட்டி தரைப் பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    வெள்ள அபாயத்தை உணராத பொதுமக்கள் தரைப்பாலத்தின் மேல் நடந்தும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்தும் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாலத்தை கடந்தும் வேறு வழியின்றி தங்களது ஊருக்கு செல்கின்றனர்.

    மேலும் தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் வழியாக உடையனாம்பட்டி, சென்னி லைக்குடி, தாமரைக்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் குண்டாற்றில் வெள்ளம் செல்வதால் அதனை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    மேலும் தற்போது வைகை அணை 69 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் விவசாயத்திற்காக விரை வில் தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் தரைப் பாலங்களில் தண்ணீரின் வேகம் அதிகரிக்க கூடும்.இதனால் தரைப்பா லங்களில் ஆற்றை கடக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ள தாகவும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளை சுற்றியுள்ள தரைப்பாலங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Heading

    Content Area

    • கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்துக்கு தற்போது மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டியதால் இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட வராகநதிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளார். நேற்று இரவு தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதில் முருகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ராஜதானி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இரவு நேரமானதால் முருகனை மீட்க முடியவில்லை. இன்று காலை தடுப்பணையில் முருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் மழை பொய்யாவிட்டாலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக அணைப் பகுதிகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேப்போல் நம்பியூர், கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை பவானி போன்ற பகுதிகளும் பலத்த மழை பெய்து வருகிறது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், இருகாலூர், எலத்தூர் போன்ற பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நம்பியூர் இருகாலூர் அடுத்த கொளந்தபாளையம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதேபோல் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. கோபி அரசூர்-தட்டாம்புதூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிக தரைப்பாலம் பலத்த மழையால் நேற்று 2-வது நாளாக நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் 6 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய உள்ளது. இதனால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர்.

    இதேபோல் பவானி சாகர், கொடுமுடி, குண்டேரிப்பள்ளம், தாளவாடி, சத்தியமங்கலம், வரட்டுப்பள்ளம், கொடிவேரி, பெருந்துறை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் அடுத்த காவிளிப்பாளையம் அருகே உள்ள முல்லை நகரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளை சேர்ந்த மக்கள் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதேப்போல் புளியம்பட்டி பவானிசாகர் பகுதியில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புளியம்பட்டியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    புளியம்பட்டி அருகே பவானிசாகர் சாலை கணக்கரசம்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் விடிய விடிய பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பெருசபாளையம் குட்டை நிரம்பியுள்ளது.

    இதைத்தொடர்ந்து நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டையும் நிரம்பியது. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாழைகள் நீரும் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-123, பவானி சாகர்-92, கொடுமுடி-62, குண்டேரிப்பள்ளம்-56.30, தாளவாடி-44.20, சத்தியமங்கலம்-43, வரட்டுப்பள்ளம்-21.20, கொடிவேரி-12, கோபி-10.20, பெருந்துறை-9, மொடக்குறிச்சி-1. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 503 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை. ஆனால் இரவு 9 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் இரவு இரவு நேரத்தில் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 9 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மாநகர் பகுதியில் அகில் மேடு வீதி, பஸ் நிலையம், பெரிய வலசு, வீரப்பன் சத்திரம், ரெயில் நிலையம், கருங்கல்பாளையம், நாடார் மேடு, வில்லரசம்பட்டி, அசோகபுரம், திண்டல் உள்பட பல்வேறு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு மோசிகீரனார் வீதியில் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுது மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். வீட்டுக்குள் விஷ பூச்சிகள் நுழைந்ததால் குழந்தைகள் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு நாடார் வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஈரோடு அன்னை சத்யா நகர், மல்லிநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    அங்குள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் செடி, கொடிகள் அடைத்து இருந்ததால் மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் இப்போது மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    சில மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வாலியால் கொண்டு வெளியே இறைத்து ஊற்றினர். மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

    ஈரோடு ரங்கபாளையம் கே.கே.நகர் பாலத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு 4 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 124 மில்லி மீட்டர் அதாவது 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையம், கொடிவேரி, சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானி சாகர், வரட்டுப்பள்ளம், நம்பியூர், பெருந்துறை, அம்மாபேட்டை, கொடுமுடி, தாளவாடி, சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இரவு நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    நேற்று இரவு பலத்த மழையால் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் டவுன் பஸ்சில் பயணிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைப்பிடித்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானி-124, குண்டேரிப் பள்ளம்-86.20, ஈரோடு-80.30, கவுந்தப்பாடி-80.20, கோபி-49.20, கொடிவேரி-44, சென்னிமலை-42, மொடக்குறிச்சி-40, பவானிசாகர்-36, வரட்டுப் பள்ளம்-32, நம்பியூர்-30, எலந்தகுட்டைமேடு-29.40, பெருந்துறை-25, அம்மாபேட்டை-28.80, கொடுமுடி-22, சத்திய மங்கலம்-14, தாளவாடி-4.

    • பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    இரவு முழுவதும்

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு சென்றனர்.

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தொடர் மழையின் காரணமாக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
    • தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நாளை வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    கோத்தகிரி பகுதியில் விடிய, விடிய பெய்த மழைக்கு கீழ்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை அருகே 5 இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    பர்லியார்-கல்லாறு சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் பெயர்ந்து சாலையில் விழுந்தது.

    தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மரங்களை வெட்டி அகற்றி, மண்சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் எருமாடு அருகே ஆண்டவன் சிறாவில் உள்ள வீரேந்திரன் எனபவரின் வீடு சேதம் அடைந்தது.

    பந்தலூர் பகுதியில் பெய்யும் தொடர்மழைக்கு பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி மெதுவாகவே சென்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து மிதந்து கொண்டிருந்தன. பொதுமக்கள் பத்திரமாக தேவையான பொருட்களை உயரத்தில் வைத்து கொண்டனர்.

    இன்னும் பல இடங்களில் குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    முழங்கால் அளவையும் தாண்டி தண்ணீர் சென்றதால் மக்களால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை உருவானது.

    மேட்டுப்பாளையம் நகராட்சி 20-வது வார்டு மாதையன் லே-அவுட், அன்பு சீரணி நகர், நகராட்சி அண்ணா வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    குறிப்பாக மாதையன் லே அவுட் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. காட்டாறு போல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதோடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் குடியிருப்புக்கு அருகேயும் குளம் போல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

    இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சி 6-வது வார்டில் வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காரமடை நில வருவாய் அலுவலர் ரேணுகாதேவி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.
    • ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

    விடிய, விடிய பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் முழுவதும் மூடியபடி கிடந்தது.

    கல்லாறு-அடர்லி பாதையிலும் மண்சரிவும், மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்ட தகவல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்து இன்றும், நாளையும் என 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலைரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவில் கன மழையாக கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள் அங்கு செல்லவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனையடுத்து அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    தொடர் மழை காரணமாக ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் முழு கொள்ளளவை எட்டி அதில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. வரத்து 1565 கன அடி. திறப்பு 511 கனஅடி. இருப்பு 3629 மி.கன அடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.12 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4658 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 366 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடி. அணைக்கு வரும் 129 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடி.

    பெரியாறு 27.4, தேக்கடி 11.2, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 11.4, சண்முகாநதி அணை 6.6. போடி 5.8, வைகை அணை 30, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 46, பெரியகுளம் 25, வீரபாண்டி 22.6, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 34.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதோடு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×