search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Facebook"

    • பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டுள்ளனர்.
    • மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சுமார் 5 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர் மார்கடிங் பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் தெரிவித்துள்ளார். இவரது பதிவு மட்டுமின்றி, மேலும் பலர் வெளியிட்டு இருக்கும் பதிவுகளில் இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

    கடந்த மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார். செலவீனங்களை குறைக்கும் நோக்கில் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அங்கமாகவே தற்போதைய பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்கடிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் 11 ஆயிரம் பேர், அதாவது 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் முதல் முறையாக அறிவித்து இருந்தது.

    • இஸ்லாமாபாத் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
    • பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த 9-ந் தேதி அந்த நாட்டின் துணை ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

    மேலும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அவற்றுக்கான தடை தொடருவதாக தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.

    • பணம் பறிக்க முயற்சி
    • சைபர் கிரைம் போலீசில் புகார்

    குடியாத்தம்,

    குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு ள்ளது.

    அதன் மூலம் நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களுக்கு நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் கேட்பது போல் பணம் தேவை என தகவல் அனுப்பி உள்ளனர்.

    உடனடியாக இந்த மோசடி சம்பவம் குறித்து சவுந்தர்ராஜன் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தியிடம் புகார் அளித்தார். வேலூரில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்க உள்ளார்.

    மோசடி நபர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து முக்கிய நபர்களின் பெயர்களில் முகநூல் பக்கங்களை தொடங்கி பணம் கேட்டு மோசடிகளையும் அரங்கேற்றி வருவது தெரியவந்தது.

    இந்த போலியான பேஸ்புக் மோசடிகள் குறித்து போலீசார் கூறியதாவது

    குடியாத்தம் பகுதி பொதுமக்கள் இதுபோல் மோசடியான பேஸ்புக்கில் வரும் பணம் சம்பந்தமான பதிவுகளுக்கு சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்னர் பணத்தை அனுப்புமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அவசர உதவி எண் 1930 என் உள்ளது இந்த எண்ணை தொடர்பு கொண்டு இணையவழி குற்றத்தடுப்பு குறித்து ஆலோசனை கேட்டுப் பெறலாம் மேலும் இதுபோல் ஏமாற்றப்பட்டவர்கள் உடனடியாக இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளன

    • மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    மதுரை

    மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது.

    ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமாரின் பேஸ்புக் பக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பரப்பியது தெரிய வந்தது.

    இதையடுத்து மனைவி யின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டது.
    • மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.

    பிப்ரவரி மாத வாக்கில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்தது. வெரிஃபைடு கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக எலான் மஸ்க்-இன் டுவிட்டர் தளத்தில் இதே போன்ற கட்டண முறையிலான வெரிஃபிகேஷன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தற்போது அமெரிக்காவிலும் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டு வருகிறது. மெட்டா வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் 11.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    இந்தியாவிலும் இந்த சேவைக்கான வெயிட்லிஸ்ட் ஒன்றை மெட்டா பிளாட்ஃபாரம் துவங்கி இருப்பதாகவும், விரைவில் சந்தா கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், மெட்டா வெரிஃபைடு சந்தா முறைக்கான இந்திய கட்டணம் மொபைலில் மாதம் ரூ. 1,450 என்றும் வலைதளத்திற்கு மாதம் ரூ. 1,099 என்றும் தெரிவித்து இருக்கிறது.

    மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. வெரிஃபைடு சந்தா செலுத்துவோர் ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொடுத்து அக்கவுண்ட்-ஐ வெரிஃபை செய்து கொள்ளலாம். சந்தா செலுத்துவோருக்கு நேரடி வாடிக்கையாளர் சேவை, பதிவுகளை அதிக நபர்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பலன்களை வழங்குகிறது.

    இந்தியாவில் இந்த சேவை தற்போதும் பீட்டா டெஸ்டிங்கிலேயே உள்ளது. மெட்டா வெரிஃபைடு சந்தாவில் இணைய பயனர்கள் வெயிட்லிஸ்ட்-இல் இணைய வேண்டும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது. மெட்டா வலைதளத்தில் இருந்தபடி பயனர்கள் வெயிட்லிஸ்ட்-ஐ இயக்க முடியும்.

    • டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டாக முடக்கப்பட்டிருந்தது.
    • முடக்கப்பட்ட டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார்.

    தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். அவரது பேச்சையடுத்து ஜனவரி 6-ம் தேதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன.

    இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    சமூக வலைதள பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்டு டிரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' என பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.

    வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார்.
    • விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    காஞ்சிபுரம்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன். இவர் நடிகர் ஒருவரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கினார்.

    பின்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட பெண்ணிடம் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.

    அப்பெண்ணின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வாங்கிக் கொண்ட அலாவுதீன் அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், குடும்பத்தினருக்கும் தெரிவித்து விடுவதாகவும் கூறி மிரட்டி சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் பறித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி ஈரோடு பிபி. அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அலாவுதீன், அவருக்கு உதவியாக இருந்த சகோதரர் வாகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இவர்களிடம் விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அலாவுதீன், வாகித் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஊழியர்களில் பெரும்பாலானோரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது.
    • நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து இருந்தது.

    ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது.

    நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில், தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய டெக் நிறுவனமாக இருக்கும். இதுபற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்டுகிறது.

    இந்தமுறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மெட்டா பதில் அளிக்கவில்லை.

    • கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.
    • தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டம், ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வம்சி. ஆட்டோ டிரைவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் வம்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருப்பதி அருகே உள்ள முஸ்லிம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவர் தனது ஆட்டோவை வம்சிக்கு வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனால் அன்வர் வம்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது வம்சியின் மனைவிக்கும் அன்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.

    கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவி அன்வருடன் குடும்பம் நடத்தி வருவது வம்சிக்கு தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வம்சி உள்ளூரில் வசிக்க பிடிக்காமல் பெங்களூருக்கு சென்று ஆட்டோ ஓட்டி வந்தார்.

    அப்போது அன்வர் வம்சியின் மனைவியுடன் இருக்கும் போட்டோக்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. இதனை கண்ட வம்சி இருவரும் இறந்துவிட்டதாகவும் உங்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும் ரிப்ஸ் என பதிவிட்டு இருந்தார்.

    இதனை கண்டு ஆத்திரமடைந்த அன்வர் கடந்த மாதம் 8-ந் தேதி பெங்களூருக்கு சென்று வம்சியை கடத்தி திருப்பதிக்கு கொண்டு வந்தார். மறுநாள் திருப்பதி அருகே உள்ள ராயலாபுரத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று வம்சிக்கு மொட்டை அடித்தார்.

    வம்சிக்கு மொட்டை அடிக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் வம்சிக்கு மொட்டை அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கருதி ஆட்டோ டிரைவர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வம்சி பெங்களூரில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பிரீமியம் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • முதற்கட்டமாக கட்டண முறை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாக இருக்கிறது.

    டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் புளூ சந்தா முறையை அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. புதிய டுவிட்டர் புளூ சந்தாவில் வெரிஃபிகேஷன் புளூ டிக் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான சேவைகள் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராம் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா புதிய கட்டண முறையை அறிவித்து இருக்கிறது. இந்த சந்தா மெட்டா வெரிஃபைடு என அழைக்கப்படுகிறது. புதிய மெட்டா வெரிஃபைடு மூலம், மெட்டா நிறுவனம் போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை குறைக்க செய்வது மற்றும் இதர பலன்களை வழங்குகிறது.

    மெட்டா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் கட்டண முறையை அறிவித்தது. மெட்டா வெரிஃபைடு கட்டண முறை வலைத்தளத்திற்கு மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வலைத்தளங்களில் மாதம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கட்டண முறையின் கீழ் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. புதிய முறை மெட்டா சேவைகளின் கீழ் தனித்துவம் மற்றும் செக்யுரிட்டியை வழங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வாரம் வழங்கப்படுகிறது.

    இதை் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மெட்டா வெரிஃபைடு சந்தாதாரர்களுக்கு வெரிஃபைடு பேட்ஜ், கூடுதல் செக்யுரிட்டி மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது.

    • எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார்.
    • டிரம்ப் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அவரது கணக்கு முடக்கப்படும்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்கை முடக்கின. இந்த சூழலில் கடந்த ஆண்டு டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார். இதனையடுத்து நவம்பர் மாதம் முதல் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது.

    இந்த நிலையில் டுவிட்டரை தொடர்ந்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா டிரம்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. டிரம்ப் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அவரது கணக்கு ஒரு மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை முடக்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் டிரம்ப் அவற்றை பயன்படுத்துவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் அவர் தனக்கென பிரத்தியேகமாக 'டுரூத் சோஷியல்' என்கிற சமூக வலைத்தளத்தை உருவாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
    • உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடக தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாரகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று திடீரென ஆயிரக்கணக்கான பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் தான் அதிக அளவு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயனர்கள் புதிய டுவிட்டுகளை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

    அவர்களுக்கு நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டிவிட்டீர்கள். அதனால் டுவிட் செய்ய முடியாது என குறுஞ்செய்தி வந்தது. இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல பேஸ்புக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளும், 7 ஆயிரம் இன்ஸ்டாரகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறும்போது "சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். இதற்காக மன்னிக்கவும், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்து உள்ளது.

    உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    ×