search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants"

    • யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதம்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 60 காட்டுயானைகளை வனத்துறையினர் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டியிருந்த நிலையில், அவை மீண்டும் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிக்கு திரும்பின.

    இந்த நிலையில், சானமாவு காட்டில் 40 யானைகள் மற்றும் 20 யானைகள் என 2 குழுக்களாக 60 யானைகள் பிரிந்துள்ளன.

    மேலும் இவை தனித்தனியாக அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து நடமாடும் அபாயம் உள்ளது. எனவே, சானமாவு, போடூர், ஆழியாளம், ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும், யானைகளை கோபப்படுத்தும் விதமாகவோ, பொதுமக்கள் செல்பி எடுக்க முயற்சிக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆழியாளம் கிராமத்திற்குள் 40 யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை-மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியுள்ளது. ஆனால் ஆறுகளில் நிலையான நீர்வரத்து இல்லாததால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து அமராவதி அணை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.

    மேலும் யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
    • சாலையின் பல்வேறு இடங்களில் யானைகள் அடிக்கடி கடந்து செல்வதோடு குட்டிகளுடனும் உலா வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மறையூர், மூணாறு ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவு சென்று வந்த வண்ணம் உள்ளது. மேலும் மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கும், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த ரோடு ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகம் மற்றும் கேரள மாநிலம் சின்னாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது. மலைப்பகுதிகளில் மழைபொழிவு அதிகரித்துள்ள நிலையில் யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

    சாலையின் பல்வேறு இடங்களில் யானைகள் அடிக்கடி கடந்து செல்வதோடு குட்டிகளுடனும் உலா வருவதால், சுற்றுலா பயணிகள்- பொதுமக்கள் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். தொடர் விடுமுறை காரணமாக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இந்த சாலையில், வாகனங்களை நிறுத்தக்கூடாது. காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகளை கண்டால், வாகனங்களை நிறுத்தி விட வேண்டும். ஹாரன் அடிப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்டேன் மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக 17 காட்டு யானைகள் சுற்றி வந்தது.
    • வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஸ்டேன் மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக 17 காட்டு யானைகள் சுற்றி வந்தது.

    இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டின் ஜன்னல் கதவு, சுவர் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தின.

    குட்டியானை ஒன்று வீட்டிற்குள் சென்று சமையல் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்களை வெளியே வீசி எறிந்தது. தீபாவளி நாள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்தனர்.

    இதனால் உயிர் சேதம் இன்றி அவர்கள் தப்பினர். அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வால் பாறை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.

    காட்டு யானைகள் வீட்டை உடைத்த விவரம் அறிந்து வீட்டின் உரிமையாளர்கள் வந்து பார்த்து வேதனை அடைந்தனர். இச்சம்பவம் அறிந்த வார்டு உறுப்பினர் பாஸ்கர் நேரில் வந்து வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தி.மு.க. நகர செயலாளர் சுதாகர், நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார், வெங்கடேஷ், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

    மேலும் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் மக்கள் அச்சம்
    • குடியிருப்பு அருகில் தீ மூட்டி பாதுகாப்பு பணி

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி வருகிறது, வால்பாறைக்கு அருகே உள்ள கருமலை எஸ்டேட், ஐயர்பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட், ஆகிய இடங்களில் 22 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் 22 காட்டு யானைகள் நேற்று இரவு வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் சுவரை இடித்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் யானைகளை நீண்ட போராட்டத்திற்கு பின்பு வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு அருகில் தீ மூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையில் அதிகப்படியான பணியாளர்களை நியமித்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பருப்பு, முட்டை, அரிசியை தின்று சேதப்படுத்தி விட்டு சென்றது
    • யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் வால்பா றை அருகே கருமலை எஸ்டேட் பகுதிக்கு நேற்று இரவு வனத்தில் இருந்து வெளியேறிய 9 யானைகள் கூட்டமாக வந்தது.

    ஊருக்குள் சுற்றி திரிந்த யானைகள் கூட்டம், அங்குள்ள நடுநிலைப்பள்ளியின் அருகே சென்றது. பின்னர் அங்குள்ள சத்துணவு மையத்தின் ஜன்னல் கதவை உடைத்து, உள்ளே இருந்த பருப்பு, முட்டை, அரிசி, போன்றவைகளை சாப்பிட்டு சத்துணவு மை யத்தை சேதப்படுத்தியது.

    மேலும் பொருட்களையும் துதிக்கையால் தூக்கி வீசி சேதப்படுத்தி சென்றது.

    தகவல் அறிந்து வந்த வால்பாறை வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • ரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரில் நேற்றிரவு புகுந்து அட்டகாசம்
    • வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வருகின்றன.

    அவ்வாறு வரும் யானைகள், வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் பாரதிதாசன் நகர் பகுதியில் நேற்றிரவு 11 காட்டு யானைகள் புகுந்தன.

    அந்த யானைகள் குடியிருப்பு பகுதியிலேயே சில மணி நேரங்கள் சுற்றி திரிந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ராஜன் என்பவருடைய வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து தூக்கி எறிந்து சென்றது. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதிகளில் அண்மைக் காலங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் இங்கு கண்காணிப்பு பணி மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனப்பகுதிக்கு செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் முகாம்
    • குடியிருப்பு பகுதிக்கு வருமோ என பொதுமக்கள் அச்சம்

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக்கிராமப் பகுதிகளுக்கு வந்து முகாமிட்டு உள்ளன. அந்த யானைகளில் சில யானைகள் அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.

    இந்நிலையில் வனப்ப குதியில் இருந்து வெளி யேறிய ஆண் காட்டு யானை ஒன்று குஞ்சபானை பகுதி யில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக முள்ளூர் கிராமப்பகுதிக்கு வந்ததுடன், திரும்பி வனப்பகுதிக்கு செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டு உலா வருகிறது.

    முள்ளூர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் யானை குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுமோ என பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் முன்பு, வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்கு ஒற்றை காட்டு யானையை விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • யானைகளை விரட்ட 4 கும்கிகள் வரவழைப்பு
    • டிரோன் மூலமாகவும் வனத்துறை தேடுதல் வேட்டை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட எண்ணற்ற வனவிலங்குகள் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்புபாலம் இன்கோ பள்ளம் பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று இரவு 2 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. பிளிறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த பொதுமக்களையும் காட்டு யானைகள் ஆக்ரோசமாக விரட்டின. அதன்பிறகு அவை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்றுவிட்டன.

    பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தனர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் பந்தலூா் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்காக முதுமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து வசீம், விஜய், பொம்மன், சீனிவாஸ் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. அவை பந்தலூர் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் வனத்துறையினர் ட்ரோன் காமிரா வழியா கவும் காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

    பந்தலூர் குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகளை கும்கிகள் உதவியுடன் நடுவழியில் தடுத்து நிறுத்தி மீண்டும் வனத்துக்குள் திருப்பி அனுப்பும் பணிகள் மும்முரம் அடைந்து உள்ளன. இதற்காக அங்கு வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பொது மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், யானைகளை விரட்டும் பணியில் யாரும் ஈடுபட கூடாது, ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென காட்டு இலாகா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக தொலைபேசி எண்களும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

    • 3 நாட்களாக பேரிஜம் ஏரியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாததால் தடை தொடரும் என தெரிவித்தனர்.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான பேரிஜம் ஏரியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே பயணம் செய்து கொண்டே இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இங்கு சென்று வருகின்றனர்.

    பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இங்கு பேரிஜம் ஏரி மட்டுமல்லாது தொப்பி தூக்கும்பாறை, அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் காட்டுயானைகள் பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டு வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். 3 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாததால் தடை தொடரும் என தெரிவித்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கொடைக்கானலின் குளுமையும், அடர்ந்த வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    ஆனால் பெரும்பாலான நேரங்களில் பேரிஜம் ஏரி செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. யானைகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டாமல் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுக்காமல் யானைகள் வரும்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை என்றும், அவை தானாக அங்கிருந்து வெளியேறியதும் அனுமமதி அளித்து வருகின்றனர். இதனால் ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் யானைகள் படையெடுத்து வருகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில வாரங்களாக பள்ளத்து க்கால்வாய் பகுதியில் காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது.
    • ரேஷன் கடைக்கு யானை குட்டியுடன் சென்று கடை யில் உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து ரேஷன் அரிசி மூடைகளை தூக்கி சேதப்படுத்தின.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பெரியூர், பெருங்கானல், பள்ளத்துகால்வாய், சேம்படி ஊத்து உள்ளிட்ட வனப்பகுதி களில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின்றன. இவை தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

    இங்கு தொடர்ந்து காட் டுயானை கள் அட்டகாசம் அதிகரி த்துள்ளது. தோட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை அவை சேதப்படுத்தி விடுகின்றன.

    பின்னர் தோட்டங்களு க்குள் புகுந்து காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. சில நேரங்க ளில் காட்டுயானைகளின் தாக்கு தலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பலியாகி விடுகின்றனர். கடந்த சில வாரங்களாக பள்ளத்து க்கால்வாய் பகுதியில் காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது.

    நேற்று பள்ளத்து க்கால்வாய் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு யானை குட்டியுடன் சென்று கடை யில் உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து ரேஷன் அரிசி மூடைகளை தூக்கி சேதப்படுத்தின.

    பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றன. செல்லும் வழியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி சென்றது. இது குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறை யினர் அங்கு விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • யானைகள் காலை 6 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
    • ஊருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டம் மாங்கரை மற்றும் தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று தடாகம் அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.

    இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த பகுதியிலேயே சுற்றி வந்த யானைகள் காலை 6 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. ஊருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    ×