search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர் எச்சரிக்கை"

    • கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை-மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியுள்ளது. ஆனால் ஆறுகளில் நிலையான நீர்வரத்து இல்லாததால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து அமராவதி அணை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.

    மேலும் யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர்.
    • விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே 4 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் மேலும் யானைகள் வந்துள்ளன. இதனால் அப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதிகாலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும்.

    இந்நிலையில் இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து, நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் சென்றன.

    அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி, ஆழியாளம் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிர்கள் சேதப்படுத்தியுள்ளன. இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சானமாவு வனப்பகுதியில் சுமார் 60 யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளன. அதனால் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனால் விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆழியாளம் உள்பட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • கிளி வளர்ப்பு மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
    • 400-க்கும் மேற்பட்ட கிளிகள் பராமரிக்கப்படுகின்றன.

    கோவை,

    கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கிளி வளர்ப்பு மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், பச்சை கிளிகள் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1948-ன் படி, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், 4-வது இடத்தில் உள்ளது.

    எனவே, பச்சை கிளிகளை வளர்ப்பதும் விற்பதும் குற்றம். ஆனால், சமீபகாலமாக ஆன்லைனிலும், நேரடியா கவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளிகளை குஞ்சு பருவத்தில் இருந்தே வீட்டில் வளர்த்தால், பேசும் திறன் பெற்று அன்பாக பழகும்.

    இதன் காரணமாகவே கிளிகளை வளர்க்க விரும்புகின்றனர். இதற்காக கிளிகளை பிடித்து, இறகுகளை வெட்டி, துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி, 2 ஆயிரம் முதல், 5 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து, கோவை வனச்சரகர் அருண்குமார் கூறும்போது,

    கோவை மாவட்ட வன அலுவலகத்தில் பறவை மறு வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மீட்கப்பட்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளிகள் பராமரிக்கப்படுகின்றன.இதில், 300-க்கும் மேற்பட்டவை வீடுகளில் வளர்க்கப்பட்டவைதான். வளர்ப்பவர்களிடம் விசாரித்தால், இது குற்றம் என்பதே எங்களுக்கு தெரியாது என்கின்றனர்.

    எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைனிலும், நேரடியாகவும் கிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால், 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.

    ×