என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரிஜம் ஏரியில் முகாமிட்டுள்ள யானைகள்.
3-வது நாளாக முகாம் : பேரிஜம் ஏரியில் யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்
- 3 நாட்களாக பேரிஜம் ஏரியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாததால் தடை தொடரும் என தெரிவித்தனர்.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான பேரிஜம் ஏரியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே பயணம் செய்து கொண்டே இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இங்கு சென்று வருகின்றனர்.
பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இங்கு பேரிஜம் ஏரி மட்டுமல்லாது தொப்பி தூக்கும்பாறை, அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் காட்டுயானைகள் பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். 3 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட முடியாததால் தடை தொடரும் என தெரிவித்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கொடைக்கானலின் குளுமையும், அடர்ந்த வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் பேரிஜம் ஏரி செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. யானைகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டாமல் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுக்காமல் யானைகள் வரும்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை என்றும், அவை தானாக அங்கிருந்து வெளியேறியதும் அனுமமதி அளித்து வருகின்றனர். இதனால் ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் யானைகள் படையெடுத்து வருகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






