என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - வனத்துறையினர் எச்சரிக்கை
- மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
- சாலையின் பல்வேறு இடங்களில் யானைகள் அடிக்கடி கடந்து செல்வதோடு குட்டிகளுடனும் உலா வருகின்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மறையூர், மூணாறு ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவு சென்று வந்த வண்ணம் உள்ளது. மேலும் மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கும், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த ரோடு ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகம் மற்றும் கேரள மாநிலம் சின்னாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது. மலைப்பகுதிகளில் மழைபொழிவு அதிகரித்துள்ள நிலையில் யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
சாலையின் பல்வேறு இடங்களில் யானைகள் அடிக்கடி கடந்து செல்வதோடு குட்டிகளுடனும் உலா வருவதால், சுற்றுலா பயணிகள்- பொதுமக்கள் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். தொடர் விடுமுறை காரணமாக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இந்த சாலையில், வாகனங்களை நிறுத்தக்கூடாது. காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகளை கண்டால், வாகனங்களை நிறுத்தி விட வேண்டும். ஹாரன் அடிப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






