search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dussehra festival"

    • தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு

    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. விழாவையொட்டி கடற்கரையில் குவிந்த பக்தர்கள் புனிதநீர் எடுத்து சென்று வழிபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 9.21 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டனர். தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், தயிர், குங்குமம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

     விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால் ராஜேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்களின் கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் அணிவித்தனர். தசரா குழுவினர் மொத்தமாகவும் காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு வழங்கினர்.

    காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துவார்கள். தசரா குழுவினரும் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவ்வாடை அணிந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசரா பிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். கோவிலில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

    இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகளும், இரவில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தக்கார் சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஒரு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கோவில் சப்பரம் மட்டும் வரவில்லை.
    • விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    நெல்லை:

    குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாநகா் பாளையில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுக்க சூரசம்ஹாரம் நடைபெறும்.

    11 சப்பரங்கள்

    அதன்படி இந்த ஆண்டு தசரா விழாவின் தொடக்கமாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் பாளையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயிரத்தம்மன், ஸ்ரீ பேராத்துசெல்வி, ஸ்ரீ தூத்துவாரி முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன் என 11 கோவில்களில் உற்சவா் அம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வந்தார்.

    ஒரு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கோவில் சப்பரம் மட்டும் வரவில்லை. மேலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீ ஆயிரத்தம்மன் தலைமையில் 8 ரதவீதிகளிலும் வீதி உலா வந்தனா். சப்பரத்திற்கு முன்பு கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பக்தர்களுக்கு காட்சி

    தொடர்ந்து இன்று காலையில் ராஜகோபால சுவாமி கோவில் முன்பு 11 சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து சப்பரங்களுக்கும் ஆரத்தி நடைபெற்று தங்கள் கோவில்களுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

    இன்று முதல் 11 கோவில்களிலும் அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது. வருகிற விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலாவும், அதனை தொடா்ந்து சூரசம்காரமும் நடைபெறுகிறது.

    இன்று 11 கோவில்களில் இருந்தும் எவ்வித பிரச்சினையும் இன்று சப்பரங்கள் எடுத்து வரப்பபட்டது. இதற்காக மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    • முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி.
    • அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் சேர்ப்பர்.

    அன்னை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி. அதனால்தான் ஏராளமான கோவில்களில் முளைப்பாரி நேமிசம் நடைபெறும். 8 நாள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சுத்தமாக இருந்து அன்னை முத்தாரம்மனின் திருநாமத்தை மனதில் நிலை நிறுத்தி, அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் கொண்டு சேர்க்கின்றனர்.

    பயிறு விதை போட்டவர்கள் பல நூறு கோடி பயன்பெறவும்

    எள்ளு விதை போட்டவர்கள் என்னாளும் வாழ்ந்திடவும்

    கானம் விதை போட்டவர்கள் கஷ்டங்கள் விலகிடவும்

    கடலை அவரை விதை போட்டவர்கள் அன்னை முத்தாரம்மனை நினைத்திடவும்

    என்று நவதானியத்திற்கு உரிய பாடல்களை பாடி அம்மனை நோக்கி ஆலயத்திற்கு வந்து அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர்.

    • ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம்.
    • கொடியேற்றத்திற்கு பின்னர் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள் வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன் சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.

    காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள்.

    கொடியேற்றத்திற்கு பின்னர் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள். தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீரபற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்ராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள். இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும்.

    • சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம்.
    • குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ்பெற்றது.

    அசுரர்கள் எனும் ஆணவசக்தி தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தும் போதெல்லாம் இறைசக்தி புதிய அவதாரம் எடுத்து, அவற்றை அழிக்கும். இதற்கு சம்ஹாரம் என்று பெயர். சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம்.

    உலகம் முழுவதும் தமிழர்களுக்கு, சூரசம்ஹாரம் என்றதும் திருச்செந்தூர் தலத்தில் கடலோரத்தில் நடக்கும் சூரசம்ஹாரம் தான் நினைவுக்கு வரும். மேலும் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ் பெற்று உள்ளது.

    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.

    சூரபத்மன் எனும் அரக்கனை ஒழிக்கவே முருக அவதாரம் நிகழ்ந்தது. அது போல மகிஷாசுரனை அழிக்க அம்மன் முத்தாரம்மனாக அவதரித்தார். முருகப் பெருமானுக்கு வலுவூட்டும் வகையில் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்தில் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம். அது போல அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் அதாவது புரட்டாசி அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையில் இருந்து 9 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம்.

    சஷ்டி அன்று திருச்செந்தூரில் முருகன் தேரில் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார். குலசையிலும் முத்தாரம்மன் கடற்கரையில் தேரில் எழுந்தருளி மகிஷனை சம்ஹாரம் செய்வாள்.

    முருகன் சம்ஹாரம் செய்யும் முன்பு சூரன் விதவிதமான வேடங்களில் வருவான். அதுபோல குலசையிலும் மகிஷன் மூன்று வடிவங்களில் வருவான். திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை தம் வேலால் முருகன் சம்ஹாரம் செய்வார். குலசையில் மகிஷனை சூலத்தால் அம்மன் சம்ஹாரம் செய்வாள். சம்ஹாரம் நடப்பதற்கு முன்பு திருச்செந்தூரில் வேலுக்கும் குலசையில் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவையெல்லாம் இரு தலத்திலும் உள்ள ஒற்றுமையான சம்ஹார தகவல்களாகும்.

    ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் திருச்செந்தூரில் சூரபத்மன் முருகனால் சம்ஹாரம் செய்யப்படும் நிகழ்வுகள் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷன் அழிக்கப்படும் நிகழ்வு மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும். மற்றொரு வித்தியாசம் திருச்செந்தூரில் மாலை நேரத்தில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். குலசையில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகனை குளிர்விக்க அபிஷேகம் செய்வார்கள். குலசையிலும் அம்மனுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் 90 சதவீத பக்தர்கள் புறப்பட்டு சென்று விடுவார்கள். ஆனால் குலசையில் விடிய, விடிய தசரா குழுக்களின் ஆடல் நிகழ்ச்சி நடைபெறும். குலசை சூரசம்ஹாரத்தை திருச்செந்தூர் சம்ஹாரத்தில் இருந்து மிகவும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இதுதான். மற்றப்படி இரு சூரசம்ஹாரத்துக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடைக்காத இத்தகைய சிறப்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.

    • மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார்.
    • நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.

    கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழாவைப் பற்றி இங்கு காண்போம்.

    பார்வதி தேவியை வேண்டினர்

    விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வெற்றி கொண்ட நாள் தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது மகிஷாசூரன் என்ற கொடூர அரக்கன் மக்களை கொடுங்கோல் ஆட்சியால் வாட்டி வதைத்து வந்தான். அதையடுத்து மக்கள் தங்களை காக்க வேண்டி காவல் தெய்வமான பார்வதி தேவியை வேண்டினர். அதன்பேரில் அவர் சாமுண்டீஸ்வரி அம்மனாக பிறந்தார். பின்னர் விஜயதசமி நாளன்று சாமுண்டீஸ்வரி அம்மன், படைகளுடன் சென்று மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார். அதைத்தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது. மேலும் இது நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.

    மகிஷாசூரன் என்கிற பெயரில் இருந்து தான் மகிசூர் என்ற பெயர் தோன்றியதாகவும், பிற்காலத்தில் அது மருவி மைசூரு என வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மைசூரு தசரா விழா 400-ம் ஆண்டு தசரா விழா ஆகும்.

    தனியார் தர்பார்

    கர்நாடக மக்களின் கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழா விஜயநகர பேரரசர்களால் 15-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் `இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்' என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருவை ஆண்ட உடையார் வம்ச அரசர் ராஜ உடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டணாவில் (மண்டியா மாவட்டம்) கொண்டாடினார்.

    தசரா கொண்டாட்டங்களில் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தினர்களும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்கேற்றனர். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின்போது தனியார் தர்பார் நடந்து வருகிறது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரசரின் வாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் ஒட்டகங்களும், குதிரைகளும் பங்கேற்கும்.

    தங்க அம்பாரி

    முதலில் மைசூரு மன்னர்கள் மற்றும் அரண்மனை சார்பில் கொண்டாடப்பட்ட தசரா விழா பின்னர் கர்நாடக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். அதாவது சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருள 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கொண்டு யானைகள் புடைசூழ செல்ல, அதனை தொடர்ந்து மற்ற யானைகள் அணிவகுத்து வரும். யானைகளுக்கு முன்னர் பல்வேறு கலைக்குழுவினர், அலங்கார வண்டி அணிவகுப்புகள் நடைபெறும்.

    மேலும் பீரங்கிகளும் முழங்கும். ஒட்டகங்கள், குதிரை படைகள், போலீசாரின் இசைக்குழு ஆகியவற்றுடன் ஜம்பு சவாரி ஊர்வலம் களைகட்டும். ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கி பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும். இந்த சந்தர்ப்பத்தில் வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு ரசிப்பார்கள்.

    தீப்பந்து விளையாட்டு மைதானத்தை அடைந்ததும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாணவேடிக்கை நடைபெறும். முன்னதாக பன்னி(வன்னி மரங்கள்) வெட்டும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை அந்த மரத்தில் தான் மறைத்து வைத்திருந்தார்கள் என்றும், அதனால் தான் பன்னி மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அரசர்கள் இந்த மரத்தை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

    மின்விளக்கு அலங்காரம்

    இதுஒருபுறம் இருக்க தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை வண்ண, வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும். அதுபோல் தற்போது மைசூரு நகரம் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள், பல்வேறு வீரர்களின் சாகசங்கள், லேசர் கதிர்கள் மூலம் ஒளி வாயிலாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

    முன்னதாக மன்னர் குதிரை சவாரி செய்து ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இது ராஜாவிடம் இருக்கும் படை பலத்தை வெளிக்கொண்டு வந்து மக்களின் மனதில் தங்களை ராஜா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை விதைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    • ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெரும் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

    மைசூருக்கு அடுத்தப்படியாக இங்குதான் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழாவையொட்டி நேற்று காலை காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது. கொடி ஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடந்தது.

    தசரா திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். கோவிலில் தினசரி காலை, மதிய நேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

     திருவிழா தொடங்கியதையொட்டி பல்வேறு இடங்களில் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கயிற்றை வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடமணிந்து, வீடுவீடாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருவார்கள்.

    இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். வருகிற 24-ந் தேதி 10-ம் திருநாள் அன்று தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை பக்தர்கள் கோவில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி மற்றும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து செல்வார்கள்.

    அங்கு மகிஷாசூர சம்காரம் முடிந்த பின், அம்மன் கடற்கரை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில், முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பின்பு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் ஊர் பவனி சென்று விட்டு மாலையில் கோவிலுக்கு வந்ததும், முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கும் காப்பு அவிழ்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். மறுநாள் 12-ம் திருநாள் அன்று பகல் 12 மணிக்கு பால் அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.

    தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறும்.
    • கோவிலில் தினசரி காலை மற்றும் மதியநேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 11 காளி பூஜை நடக்கிறது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கிவிட்டனர். இன்று மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறும்.

    கொடிஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று தசரா திருவிழா தொடங்குகிறது.

    திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளிஅருள் வழங்குகிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

    கோவிலில் தினசரி காலை மற்றும் மதியநேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    திருவிழா தொடங்கியதையொட்டி விரதம் இருந்துவந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கயிற்றைவலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடமணிந்து, வீடுவீடாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருவார்கள்.

    24 -ந் தேதி 10-ம் திருநாள் அன்று தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை பக்தர்கள் கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள், 24 -ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி மற்றும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள், அங்கு மகிஷாசுரசம்காரம் முடிந்த பின்னர் அம்மன் கடற்கரை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில், முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பின்பு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் பவனி சென்று மாலையில் கோவிலுக்கு வந்ததும், முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்த்து பின்பு பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். நள்ளிர்ரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    மறுநாள் 12-ம் திருநாள் அன்று பகல் 12 மணிக்கு பால் அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    11-ம் நாளான 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 12-ம் நாளான 26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராக திகழ்ந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது ஆணவத்தால் அவரை மதிக்க தவறியதோடு அவமரியாதையும் செய்தார் வரமுனி. இதனால் மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்.

    வரமுனி எருமைத்தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசூரனாக மாறினார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி மகிஷாசூரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டார். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை அன்னை வதம் செய்யும் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    வேடம் அணியும் பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் சாதியை குறிக்கும் கொடிகள், ரிப்பன்கள் கொண்டு வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தம் செய்வதற்காக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திரு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுமார் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்காக 72 ஏக்கர் பரப்ப ளவிலான பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 144 அடிஉயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க ப்பட உள்ளது. குலசேகரன் பட்டினம் தருவைகுளம், கருங்காளி அம்மன் கோவில் சன்னதி தெரு சந்திப்பு, கியாஸ் குடோன் அருகே, மணப்பாடு செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள முட்செடிகள் அகற்றப்பட்டு, தரைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் அன்புமணி ஆலோச னையின் பேரில் கோவில் செயல் அலுவலர்கள் ராம சுப்பிரமணியன், வெங்க டேஸ்வரி ஆகியோர் மேற்பா ர்வையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • பாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் தசரா விழா நடைபெறும்.
    • கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால் நாட்டுதல் விழா நடைபெற்றது.

    நெல்லை:

    தென்மாநிலங்களில் பிரசித்தி பெற்ற திரு விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் பாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் நடைபெறும்.

    கால் நாட்டுதல்

    தசரா விழாவின் போது பாளை பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்தும் மின்விளக்கு அலங் காரத்தில் உருவாக்கப்பட்ட சக்கரங்களில், சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி மகிஷாசுர சம்காரம் நடைபெறும். இந்த பிரசித்தி பெற்ற விழாவின் தொடக்க நிகழ்வான கால் நாட்டு வைபவம் இன்று பாளை பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களிலும் விமர் சையாக நடைபெற்றது.

    இந்த 12 அம்மன் கோவில்களிலும் மூல தெய்வமாக கருதப்படும் பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் பொறித்த கொடி மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால் நாட்டுதல் விழா நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபா ராதனை நடை பெற்றது. இதனை தொடர்ந்து பாளை வடக்கு முத்தாரம்மன், தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன், தூத்துவாரி அம்மன் உள்ளிட்ட 12 கோவில் களிலும் கால் நாடுதல் வைபவமும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    மகிஷாசூரசம்ஹாரம்

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 12 அம்பாள் திருவீதி உலா வருகிற அக்டோபர் 24-ந் தேதியும், மறுநாள் (25-ந் தேதி) மகிஷாசூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    • முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்.
    • பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

    இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடமும், இந்தியாவில் 2-வது இடமும் வகிக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி மகிசா சூரசம்காரம் நடக்கிறது.

    இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள். இதற்காக பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 7 நாள், 11 நாள், 21 நாள், 31 மற்றும் 41 நாள் என கணக்கிட்டு விரதத்தை தொடங்கு வார்கள். முன்னதாக குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கு வந்து, படிகம், பாசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை தேர்வு செய்து அதை வாங்கி கடலில் கழுவி, குளித்து விட்டு, கோவிலுக்கு வந்து வணங்கி, சிலர் கோவிலில் பூஜை செய்து பூசாரி கையினால் அல்லது தன்னைவிட வயது கூடுதல் உள்ள பெரியவர்கள் கையினால் மாலையை கழுத்தில் அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.

    இதற்காக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஏராளமான பாசிமாலை கடைகள் உருவாகி உள்ளன. பக்தர்களும் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்துவிட்டு பின்பு கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினரும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றனர்.

    ×