search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தாரம்மன் கோவில்"

    • எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான்.
    • கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.

    திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

    10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

    இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.

    அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். 

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.

    அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    11-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். 

    கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

    கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

    4.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன், வேடம் அணிந்த பக்தர்களும் காப்பு களைவார்கள். பின்னர் விரதத்தை பக்தர்கள் முடித்து கொள்வார்கள். இதற்காக ஏற்கனவே திரண்ட லட்சக்கணக்கானோர் மட்டுமல்லாது இன்றும் பக்தர்கள் அலைஅலையாய் திரண்டு வருகிறார்கள்.

    இதனால் குலசேகரன்பட்டினம் குலுங்கியது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். நாளை (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    • தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும்.

    இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.

    கோவிலில் கொடியேறியதும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புகளை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூலித்து வந்தனர்.

    தங்களது ஊர் பெயரில் தசரா குழுக்கள் அமைத்து ஊரில் தசரா குடில் அமைத்து, காவடி, கரகம், நையாண்டி மேளம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, தாரை தப்பட்டையுடன் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மாலை முதல் இரவு 9 மணி வரை சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை, வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அம்மன் பெயரில் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலில் கொண்டு பக்தர்கள் சேர்ப்பதற்கு வசதியாக கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து 1,500-க்கு மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளனன. 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை செல்லும்போது கடும் விரதம் இருந்து காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள்.

    கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்வார். பின்னர் சிங்கமுகமாக மாறி எதிர்கொள்வான். 3-வது எருமை தலையுடனும், 4-வது சேவல் உருவத்திலும் மாறிமாறி வருவான். 4 உருவத்தையும் அன்னை முத்தாரம்மன் அழிப்பார்.

    அதன்பின் முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளி அபிஷேகம், பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில், அதன்பின்பு கோவில் கலை அரங்கத்தில் எழுந்தருளி அபிஷேகம் நடைபெறும்.

    நாளை 25-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா சென்று விட்டு நண்பகல் சுமார் 3 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.

    அதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், நாளைமறுநாள் (26-ந்தேதி) பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.

    சூரசம்ஹாரத்தை காண இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் குலசை பகுதி முழுவதுமே பக்தர்களின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும் தசரா பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. 

    வேடமணிந்து காணிக்கை செலுத்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.

    வேடமணிந்து காணிக்கை செலுத்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.

    குலசையில் இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரை இருப்பதால், மேற்கு பக்கம் உடன்குடி வழியாகவும் வடக்கு பக்கம் திருச்செந்தூர் வழியாகவும் தெற்கு பக்கம் மணப்பாடு வழியாக மட்டுமே வாகனங்கள் வந்து செல்ல முடியும்.

    அதனால் திருச்செந்தூரில் இருந்து மணப்பாடு வரையிலும் மற்றும் உடன்குடி சுற்றுபுற பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக மணப்பாடு உவரி செல்லும் அனைத்து வாகனங்களும் பரமன்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    இதைப்போல நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மணப்பாடு வழியாக செல்வதற்கு சாத்தான்குளம் பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    மாவட்ட வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
    • பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது

    தென்தாமரைகுளம் :

    வடக்குதாமரைகுளம் ஸ்ரீஞானமுத்தீஸ்வரர் முத்தா ரம்மன் கோவிலில் 9-வது ஆண்டு தசரா விழா நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    2-ம் நாள் விழாவான நேற்று காலை நையாண்டி மேளம், ஆற்றங்கரை விநாயகர் சன்னதியில் இருந்து ரத வீதி வழியாக பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தினை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, வடக்குதாமரைகுளம் ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள் மகேந்திரன், அய்யப்பன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜ லட்சுமி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
    • தசரா குழுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    8-ம் நாளான இன்று காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள், மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜ லட்சுமி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    ஏராளமான தசரா குழுவினர் கூட்டம் கூட்டமாக வந்து காப்பு கட்டினர்.

    இன்று காலையிலே தசரா குழுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள்.

    அனைவரும் 10-ம் நாளான நாளை மறுநாள் (24-ந்தேதி) கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கடற்கரையில் நடைபெறுகிறது.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து அரசு துறையினருடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர். 

    • முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா.

    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்ச்சியில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் பத்திரகாளி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவிலில் தினமும் முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நான்காம் திருநாளான நேற்று முன்தினம் இரவு மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் பக்தர்களுக்கு எல்லாநலமும்கிடைக்கும் என்பது ஐதீகம். ஐந்தாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு, ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது.
    • குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது. இதன் அடிப்பாகத்தை கூர்ந்து கவனித்தால் யானையின் பாதம் போல் இருக்கும். இருமனம் இணைந்து திருமணம் நடக்கும்போது உடனே வாரிசு வர வேண்டும் என்று வேண்டுதல் செய்து இந்த மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

    திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டியபடி நிறைவேற்றி அருள்புரியும் அன்னையின் அருள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்வதால்தான் ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின் கூட்டமும் அலைமோதுகிறது.

    • ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெரும் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

    மைசூருக்கு அடுத்தப்படியாக இங்குதான் தசரா திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழாவையொட்டி நேற்று காலை காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது. கொடி ஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடந்தது.

    தசரா திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். கோவிலில் தினசரி காலை, மதிய நேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

     திருவிழா தொடங்கியதையொட்டி பல்வேறு இடங்களில் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கயிற்றை வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடமணிந்து, வீடுவீடாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருவார்கள்.

    இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். வருகிற 24-ந் தேதி 10-ம் திருநாள் அன்று தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை பக்தர்கள் கோவில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி மற்றும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து செல்வார்கள்.

    அங்கு மகிஷாசூர சம்காரம் முடிந்த பின், அம்மன் கடற்கரை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில், முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பின்பு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் ஊர் பவனி சென்று விட்டு மாலையில் கோவிலுக்கு வந்ததும், முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கும் காப்பு அவிழ்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். மறுநாள் 12-ம் திருநாள் அன்று பகல் 12 மணிக்கு பால் அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.

    தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    11-ம் நாளான 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 12-ம் நாளான 26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராக திகழ்ந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது ஆணவத்தால் அவரை மதிக்க தவறியதோடு அவமரியாதையும் செய்தார் வரமுனி. இதனால் மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்.

    வரமுனி எருமைத்தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசூரனாக மாறினார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி மகிஷாசூரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டார். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை அன்னை வதம் செய்யும் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    வேடம் அணியும் பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் சாதியை குறிக்கும் கொடிகள், ரிப்பன்கள் கொண்டு வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41, 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள்.
    • தனி நபராகவும், தசரா குழுக்களாக வந்தும் முன் ஆர்டர் செய்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 24-ந்தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

    பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதில் பல்வேறு நோய்கள், தொழில் முடக்கம், குடும்ப பிரச்சினைகள் தீர அம்மனுக்கு நேர்த்தி கடனாக காளி, அம்மன், சிவன், கிருஷ்ணன், விநாயகர், முருகன், பண்டாரம், குரங்கு, கரடி ,புலி, சிங்கம், குறவன், குறத்தி, பெண், போலீஸ் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பிரித்து அம்மனுக்கு செலுத்துவார்கள்.

    இதில் சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41, 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள். திருவிழா தொடங்க இன்னும் 2 வாரமே இருப்பதால் வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் கடலில் குளித்து மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர்.

    பல்வேறு சுவாமி வேடத்திற்கான கீரிடம், சடை முடி, சூலாயுதம், நெற்றி பட்டை, கண்மலர், வீரபல் போன்றவை கடந்த சில மாதங்களாக உடன்குடியில் தயாராகி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த பொருட்கள் தயார் செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் அதிகம் பேர் இருப்பதால் உடன்குடி பகுதியில் தயார் செய்யப்படும் சுவாமி வேடப்பொருட்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.

    தனி நபராகவும், தசரா குழுக்களாக வந்தும் முன் ஆர்டர் செய்கின்றனர். சிலர் இடுப்பு ஒட்டியாணம், தலை கீரிடம், கை பட்டை போன்றவற்றிற்கு முன்னதாக அளவு கொடுத்து முன்பதிவு செய்வதாகவும் இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் உள்ள பெண்கள் போல வேடம் போடும் பக்தர்கள் இரட்டை ஜடை, ஒத்த ஜடை என்று பல்வேறு அலங்காரத்தில் தலை முடிவைப்பார்கள். இதுபோன்று ராஜா, ராணி வேடம் போன்ற பல்வேறு பொருட்களும் உடன்குடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதால் தற்போது உடன்குடியில் தசரா பொருட்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.
    • விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா விழாவுடன் தொடங்கியது. சனிக்கிழமை சிறுமிகளின் புஷ்பாஞ்சலி நடை பெற்றது. ஞாயிற்றுக்கிழமை 1,503 பெண்கள் பங்கு பெற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை யொட்டி காலை பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், பூ வளர்த்தல், பால்குடம் எடுத்தல், உச்சிகால பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் அக்னி குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தனர். இதில் பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் பக்தி பரவசத்துடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.

    விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கு தர்மகர்த்தா வும், முன்னாள் எம்.பி.யுமான ராமசுப்பு தலைமை தாங்கினார். திருவிழா வையொட்டி ஆலங்குளம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    • வாகனம் காத்த விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    • நாளை பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆவணி திருவிழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு குலசை முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம் காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பின்பு அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்றனர். அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நையாண்டி மேளத்துடன் அம்பாள் வீதியுலா வந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படை கஞ்சி வார்த்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழாவையொட்டி வில்லிசை, கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (31-ந்தேதி) பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது
    • 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடம் போடும் திரு.கந்தசாமி

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற வித, விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், "முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு" என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை.

    அதற்கு இன்று நம்மிடையே உதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கந்தசாமி.

    குலசேகரன்பட்டினம் காவடி பிறைத் தெருவில் வசித்து வரும் இவர் நாடார் மைனர் தசரா குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். குலசை ஆலயத்துக்கு வேடமிடும் பக்தர்களில் இவர் அளவுக்கு, இத்தனை ஆண்டுகள் வேடமிட்டவர் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய கந்தசாமியிடம் இருந்துதான் வேடம் போடுவது, வேடம் போடுவதற்கான பொருட்கள் தயாரிப்பது உள்பட பல விஷயங்கள் மற்ற ஊர் தசரா குழுவினரிடம் பரவியதாக சொல்கிறார்கள்.

    நல்ல ஆஜானுபாகுவான, கட்டான உடலமைப்புடன் கம்பீரமாக காணப்படும் கந்தசாமி தன் உயிர் இறுதி மூச்சு உள்ள வரை குலசை முத்தாரம்மனுக்காக வேடமிட சபதம் எடுத்துள்ளதாக கூறினார். எப்படி உங்களால் 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடமிட முடிந்தது? என்றதும், கந்தசாமி மலரும் நினைவுகளில் மூழ்கியபடி சரளமாக மடை திறந்த வெள்ளமென சொல்லத் தொடங்கினார்.,

    எனக்கு அப்போது 10 வயது இருக்கும். குலசேகரன்பட்டினம் முழுவதும் காலரா பரவி இருந்தது. நிறைய பேர் சிகிச்சை எடுக்க வழியில்லாமல் செத்துப் போனார்கள். எங்கள் குடும்பத்தில் எனக்கு உள்பட என் அக்கா & தம்பி 7 பேருக்கு காலரா பாதித்தது. 7 பேரும் பிழைப்பார்களா? என்று எல்லாருக்கும் சந்தேகம் வந்து விட்டது. அப்போது எனது தாயார், குலசை முத்தாரம்மனை நோக்கி கும்பிட்டப்படி, "தாயே 7 பேருக்கும் குணமாகி விட வேண்டும். அதற்கு காணிக்கையாக என் மகன் கந்தசாமி அவன் ஆயுள் முழுவதும் வேடம் அணிந்த தர்மம் எடுத்து உடன் சன்னதிக்கு வருவான்" என்று வேண்டி கொண்டார்.

    மறுநாளே மருந்து, மாத்திரை இல்லாமல் நாங்கள் 7 பேரும் பிழைத்து கொண்டோம். இதனால் மறு ஆண்டு முதல் நான் வேடம் போட தொடங்கினேன். என் 19வது வயதில் சீதாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 1 மகன், 2 மகள்கள் பிறந்தனர். யாரும் நான் வேடம் போடுவதை தடுக்கவில்லை. மாறாக ஆண்டு தோறும் உற்சாகப்படுத்தினார்கள். 1986ம் ஆண்டு மகன் மரணம் அடைந்ததால் அந்த ஆண்டு மட்டும் என்னால் வேடம் போட இயலவில்லை. இத்தனை ஆண்டுகளில் 6 ஆண்டுகள் ராஜா வேடம், 7 ஆண்டுகள் பெண் வேடம், 6 ஆண்டுகள் குறத்தி வேடம் போட்டேன்.

    கிருஷ்ணர் வேடத்தை அதிகபட்சமாக 14 ஆண்டுகள் போட்டேன். 10 ஆண்டுகள் கர்ணன் வேடம், 4 ஆண்டுகள் எமதர்மர் வேடம் போட்டேன். 3 ஆண்டுகள் இசக்கியம்மன் வேமணிந்தேன். 2 ஆண்டுகளாக இந்திரன் வேடம் போட்டேன். நான் போடும் வேடங்களுக்குரிய பொருட்களை மிகவும் அழகாக நானே தயாரித்து கொள்வேன்.

    வேடப்பொருட்களை தசரா குழுவினரே தயாரித்துக் கொள்ளும் பழக்கத்தை நான்தான் ஏற்படுத்தினேன். என்னிடம் கற்றவர்கள் மற்ற ஊர்களில் அதை பரப்பினார்கள். என் பேரனுக்கு இப்போது 17 வயதாகிறது. முத்தாரம்மன் அருள் பெற வேடம் போடு என்று சொன்னேன். கல்லூரியில் படிப்பதாலோ., என்னவோ, அவன் வெட்கப்படுகிறான். என் காலத்துக்கும், இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    நான் சிறுவனாக இருந்த போது 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள். அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள். ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தர்மம் எடுத்து அதை ஆலயத்தில் சேர்ப்பதிலும் ஒழுங்கு இல்லை. 7 வீடுகளில் தர்மம் எடுத்தாலே போதும் என்று முத்தாரம்மன் கூறி இருக்கிறாள்.

    அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது. இதெல்லாம் ரொம்ப தப்பு. காளி வேடும் போடும் சிலரும் விதியை மீறுவது மனதுக்கு வேதனை தருகிறது. சூரசம்ஹாரம் முடிந்து விட்டால் அம்மன் சாந்தம் ஆகி விடுவாள். ஆனால் அதன் பிறகும் காளி வேடம் போட்டு இருப்பவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை ஏற்க இயலாது. நான் வாலிப வயதில் இருந்த போது வேடம் போடுவதற்கு நிறைய செலவு செய்ய மாட்டோம். மாட்டு வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு கிரீஸ் மையை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தகர டப்பாவை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு வீடு, வீடாக சென்று தர்மம் எடுப்போம்.

    "அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்போம். காதில் கம்மலுக்கு பதில் வததலை கட்டி அணிந்திருப்போம். எங்களது இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள். குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள். இப்போது காணிக்கை கேட்டால் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மற்றபடி முத்தாரம்மனுக்குரிய பணிகள் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாகவே நடக்கிறது. அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் அன்று போல இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஒரு தடவை நான் இலங்கை செல்ல ராமேசுவரம் சென்றிருந்தேன். கள்ளத்தோனி ஏற முயன்ற சமயத்தில் ரோந்து பணியில் உள்ள போலீஸ்காரர்கள் வந்து விட்டனர். அப்போது நான் சட்டை பைக்குள் வைத்திருந்த குலசை முத்தாரம்மன் படத்தை தொட்டப்படி அம்மா நீதான் என்னை காப்பாத்தணும் என்று வேண்டினேன். அம்மன் அருளால்தான் அன்று நூலிழையில் தப்பினேன்.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் ஒரு வாய் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று குபேரனாக இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான் என்றார்.

    ×