search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முத்தாரம்மன் கோவில் அமைப்பு
    X

    முத்தாரம்மன் கோவில் அமைப்பு

    • கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள்.
    • முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடி மரமண்டபம், பிரகாரம், தேர்மண்டபம். கலையரங்கம் போன்ற அமைப்புக்களுடன் காணப்படுகிறது.

    கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள். அம்மன், சுவாமி இருவரின் சுயம்புவாகத் தோன்றிய பாறை வடிவங்களும் அவற்றின் பின்புறம் பீடத்தின் மேல் இருவரின் உருவச் சிலைகளும் அமைந்துள்ளன.

    கருவறையினை அடுத்து அர்த்தமண்டபமும் அதன் இருபுறமும் வழிபாட்டுக்குரிய பொருட்கள் வைக்கும் அறைகள் இரண்டும் அமைந்துள்ளன.

    அர்த்த மண்டபத்தினை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபம் கம்பித் தடுப்பால் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பிரிவில் பேச்சியம்மனும் கருப்பசாமியும் இரண்டாவது பிரிவில் பைரவரும் காணப்படுகின்றனர்.

    மகாமண்டபத்தை அடுத்துக் கொடிமர மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் மூன்று அடி உயரத்தில் பலிபீடமும் அதன் பின்புறம் கொடிமரமும் உள்ளன. பலிபீடத்தின் முன்பு சிம்மவாகனம் ஒன்று கருவறையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐந்து அடி உயரச் சூலம் ஒன்று தரையில் பதிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் மகா வல்லப விநாயகரும் வாயிலின் இருபுறங்களிலும் இரு பூதத்தார்களும் உள்ளனர்.

    கொடிமர மண்டபத்தின் நடுவில் பலிபீடத்தை அடுத்து முப்பத்திரண்டு அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் பொதியப்பட்டுக் காட்சியளிக்கிறது. அடிப்பாகச் செப்புத் தகட்டில் வடபுறம் அம்மனும் சுவாமியும் தென்புறம் சூலமும் கீழ்ப்புறம் விநாயகரும் மேற்குப் பகுதியில் பாலசுப்பிரமணியரும் உருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளனர்.

    கொடிமரம் சந்தனமரத்தால் ஆனது. இது பதினெட்டுப் பாகங்களைக் கொண்டது. பதினெட்டு ஆகமங்கள் என்பதன் அடையாளமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

    முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் முன்பக்கம் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கோவில் மண்டபங்களின் கிழக்கு, தெற்கு, மேற்குச் சுவர்களில் அர்த்தநாரீசுவரர், மீனாட்சியம்மன், துர்க்கை அம்மன் ஆகியோரின் புடை சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பிரகார மண்டபத்தில் அழகிய தெய்வங்களின் ஓவியங்களும் துர்க்கையம்மன், மீனாட்சியம்மன் சிலைகளும் உள்ளன. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகருக்கெனத் தனிச் சந்நிதி உள்ளது.

    கருவறையின் மேல் சிறிய விமானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது முப்பத்தைந்து அடி உயரமாகும். இதில் அம்மன், சுவாமி சிற்பங்களும் காவல் தெய்வங்கள், சிம்மம் ஆகியவற்றின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் உச்சியில் மூன்று கும்பங்கள் உள்ளன.

    கோவில் முன்மண்டபத்தின் மேலே சிறிய மூன்று கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் அம்மன், சுவாமி உருவங்கள், மகிசாசுரமர்த்தினி, முருகன், விநாயகர், காவல் தெய்வங்கள், காளி, யானை, சிம்மன் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலுக்கு வடபுறம் சிறிது தொலைவில் மேற்கு நோக்கிய வண்ணம் தேர்மண்டபம் தேர் ஒன்று உள்ளது. விழா நாட்களில் அம்மன் இந்தத் தேரில் வீதி உலா வருகிறாள். இத்தேர் தவிர, சூரனைச் சுமந்து செல்வதற்குரிய சப்பரம் ஒன்றும் உள்ளது.

    தேர் விலை உயர்ந்த தோதகத்தி மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இரு குதிரைகள் தேரினை இழுத்துச் செல்லும் தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சாரதியாகப் பிரம்மனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறமும் இரு மங்கையர் உருவங்கள் கவரி வீசுவது போன்று அமைக்கப்பட்டுள்ளன. அழகிய சிறிய தூண்களும் சிறிய கோபுர அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலின் மேற்கில் கிழக்கு நோக்கிய வண்ணம் கலையரங்கம் ஒன்று உள்ளது. இதனைக் கட்டிய நன்கொடையாளரின் பெயரால் 'சௌந்திர பாண்டிய நாடார் கலையரங்கம்' என்று இது வழங்கப்படுகிறது. இக்கலையரங்கில் கோவில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிளக்குப் பூசையும் தசரா விழாவில் சூரனை வதம் செய்த பிறகு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. தவிர பொதுமக்கள் திருமணம், சடங்கு, பிறந்தநாள் விழாப் போன்ற தம் இல்ல நிகழ்ச்சிகளை இக்கலையரங்கில் குறைந்த வாடகையில் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

    முத்தாரம்மன் கோவிலுக்குக் கீழ்ப்புறம் மேற்கு நோக்கி வண்ணம் பெரிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பல தூண்களுடன் கூடிய இம்மண்டபத்தின் உட்சுவரில் பார்வதியின் திருக்கல்யாணக் காட்சி அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இது திருமண மண்டபமாகவும் ஒவ்வொரு மாதப் பவுர்ணமியன்றும் திருவிளக்குப்பூசை நடத்துவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    தசரா விழாவின் போது சூரனைச் சம்ஹாரம் செய்வதற்காக முத்தாரம்மன் இம்மண்டபத்திலிருந்தே புறப்பட்டுச் செல்கிறாள்.

    கோவிலுக்கு வரும் மேற்குத்திசைச் சாலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தோரண வாயில் ஒன்று காணப்படுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு முழுமையாக ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது.

    Next Story
    ×