search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyclone Mandous"

    • புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது.
    • உழைப்பு, உழைப்பு உழைப்புதான் நமது மூலதனமாக இருக்கணும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு இல்ல திருமண விழா இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    மணமக்கள் திலீபன் ராஜ்-ஐஸ்வர்யா திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து பேசியதாவது:-

    இன்றைக்கு நான் பொறுப்பேற்று பணியாற்றி கொண்டிருக்கிற இந்த ஆட்சி ஒரு திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    இந்த ஆட்சியை பற்றி பலர் பேசும் போது இங்கே குறிப்பிட்டு சொன்னார்கள். 2, 3 நாள் பெய்த மழையை பற்றி குறிப்பிட்டார்கள். மழை-புயல் அதை எப்படி எல்லாம் சமாளித்தோம். அதில் என்ன பெயர் நமக்கு கிடைத்தது. பார்க்கிறவர்கள் எல்லாம் இதை தான் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

    நாம் ஆட்சிக்கு வந்த போது என்ன நிலைமை? ஒரு பெரிய கொடிய தொற்று நோய் கொரோனா. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு முதல்-அமைச்சரில் இருந்து எல்லா அமைச்சர்களும் ஹெல்த் மினிஸ்டராக மாறினோம். அதனால் தான் கட்டுப்படுத்த முடிந்தது.

    அது முடிவதற்கு முன்னாலே வெள்ளம் வந்துவிட்டது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்தோம். வெற்றி கண்டோம்.

    இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்றால் இதை தான் கலைஞர் சொல்லி விட்டு சென்றார். உழைப்பு, உழைப்பு உழைப்புதான் நமது மூலதனமாக இருக்கணும். அதை நான் ஸ்டாலினிடம் பார்க்கிறேன் என்று சொன்னார்.

    அந்த உழைப்பை பயன்படுத்தி தான் நான் மட்டுமல்ல அமைச்சர்கள் மட்டுமல்ல சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல உள்ளாட்சி பிரதிநிதிகள் நம்முடைய கழக தோழர்கள் இந்த இயக்கம் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று ரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து போராடி கொண்டிருக்கிற கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன் பிறப்புகளாக விளங்கி கொண்டிருக்கிறவர்கள். அவர்களும் இதில் இணைந்து கொண்டு பணியாற்றிய காரணத்தால் தான் இன்று கம்பீரமாக மக்களிடத்தில் செல்ல முடிகிறது.

    நேற்றில் இருந்து போனை வைக்கவே முடியல. எல்லோரும் போன் பண்ணி ரொம்ப சிறப்பா பண்ணிட்டீங்க என்று பாராட்டினார்கள். எல்லா இடத்தில் இருந்தும் பாராட்டுகள் தான் வந்து கொண்டிருக்கிறது.

    நான் கூட பேசும் போது சொன்னேன். நம்பர்-1 முதல்-அமைச்சர் என்று பாராட்டினார்கள். நம்பர்-1 முதல்-அமைச்சர் என்பதில் எனக்கு அதிகமாக பெருமையோ, பாராட்டோ நினைக்கலை. என்றைக்கு நம்பர்-1 தமிழ்நாடு என்று வருகிறதோ அன்றைக்குதான் எனக்கு பெருமை.

    அதையும் நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் இல்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதனால் அதையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

    மணமக்களை வாழ்த்துகிறபோது அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய முறை. இன்றைக்கு மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் குடும்ப கட்டுப்பாட்டுக்காக எவ்வளவோ பல கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு தெரியும்.

    முன்பெல்லாம் குடும்ப கட்டுப்பாடு எந்த நிலையில் இருந்தது என்றால், நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னார்கள்.

    அது படிப்படியாக குறைந்து நாம் இருவர் நமக்கு இருவர் என மாறியது. இப்போது என்னவென்றால் நாம் இருவர் நமக்கு ஒருவர். நாளைக்கு இதுவும் மாறலாம். நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை? அப்படி கேட்கிற நிலை வந்தாலும் வரலாம். காரணம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கிறது.

    ஆகவே நீங்கள் பெற்றெடுக்கிற குழந்தை அளவோடு பெற்றாலும் அந்த குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஏனென்றால் தமிழுக்கு தலைவர் கலைஞர் எப்படி எல்லாம் சிறப்பு சேர்த்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இன்று இந்த திருமணம் சுயமரியாதை உணர்வோடு நடக்கிறது என்றால் இது வெறும் சுயமரியாதை, சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல தமிழ் திருமணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது.
    • பெரும்பாலான நேரங்களில் சாரல் மழை தூறிக்கொண்டே உள்ளது.

    சென்னை:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியதால் சென்னையில் மட்டும் 400 மரங்கள் சாய்ந்தன. மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மரங்கள், சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

    சூறைக்காற்றுடன் மழையும் கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. காற்றில் சாய்ந்த மரங்கள் இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்பட்டன. சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை தூக்கி நிறுத்தி சீரமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றன. இதையடுத்து மின் வினியோகம் சீரானது.

    மாண்டஸ் புயல் ஓய்ந்த நிலையிலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை ஓயவில்லை. விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடக்க தொடங்கிய புயல் அதிகாலையில் கரையை கடந்து முடித்தது. இப்படி புயல் கரையை கடந்த பிறகும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இரவிலும் அது நீடித்தது.

    இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் சாரல் மழை தூறிக்கொண்டே உள்ளது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் கரையை கடந்த போதிலும் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். விட்டு விட்டு மழை பெய்யும். புயல் கரையை கடந்திருந்தாலும் வடகிழக்கு திசையை நோக்கி வீசும் காற்று நீடிக்கிறது. இதுவே மழை நீடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. நாளை மறுநாளில் (13-ந் தேதி) இருந்து மழை படிப்படியாக குறையும்.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    • சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை சரிசெய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
    • புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவநேரி மீனவர் பகுதி "மாண்டஸ்" புயலால் அதிகளவில் சேதமடைந்த கடலோர பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் இன்று மாலை நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

    அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அருகில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டது.
    • மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

    சென்னை:

    வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினார்கள்.

    10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

    சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு உயர்ந்தது.
    • கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கத்தில் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சித்தேரி நிரம்பியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு மற்றும் அழிஞ்சிவாக்கம் ஓடைகளில் அதிகளவில் மழை பெய்யும்போது நீர் நிரம்பி அதன் உபரி நீர் திறக்கப்படுவதால் அந்த நீரின் மூலம் போளிவாக்கம் பெரிய ஏரியும் சித்தேரியும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் மழை காரணமாக நேற்று பெய்த கனமழையால் போளிவாக்கத்தில் உள்ள சித்தேரி நிரம்பி உபரி நீர் வெளியேறிய நிலையில் போளிவாக்கம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் தொழிற்சாலை வாகனங்கள், தனியார், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் போன்ற இதர வாகனங்களும் இரு புறமும் மெதுவாக இயக்கப்படுகின்றன.

    இதனால் போளிவாக்கம் தரைப்பாலத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நீடிக்கும்பட்சத்தில் தரைப்பாலத்தில் நீர் அதிகமாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

    இந்த சித்தேரியை ஆழப்படுத்தி மேலும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    இதன் வழியாக மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்று வர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்து விட்டனர்.

    இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று அதிகாலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீட்டர் மழை பெய்தது. திருத்தணி 16.2 செ.மீ., கும்மிடிப்பூண்டி 13.4 செ.மீ., சோழவரம் 12.9 செ.மீ., பள்ளிப்பட்டு 12.7 செ.மீ., ஊத்துக்கோட்டை 12.4 செ.மீ., செங்குன்றம் 12.1 செ.மீ., பொன்னேரி 11.2 செ.மீ., ஜமீன் கொரட்டூர் 11.6 செ.மீ., திருவள்ளூர் 11.4 செ.மீ., பூந்தமல்லி 11 செ.மீ., பூண்டி 10.5 செ.மீ., தாமரைப்பாக்கம் 9.6 செ.மீ., திருவாலங்காடு 8.8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    குறைந்தபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 6.6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • கல்லூரியில் கூலி வேலை பார்க்கும் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவில் உத்தண்டி குப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
    • ஊருக்குள் நுழைந்த அவர் ஊருக்குள் முட்டளவுக்கு கடல் நீர் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னை:

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாமல்லபுரம் அருகேயுள்ள உத்தண்டி குப்பம் பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் ஊருக்குள் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் கல்லூரியில் கூலி வேலை பார்க்கும் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவில் உத்தண்டி குப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். ஊருக்குள் நுழைந்த அவர் ஊருக்குள் முட்டளவுக்கு கடல் நீர் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடல்நீர் வீட்டுக்குள் புகுந்ததால் தனது கணவரின் நிலைமை என்ன ஆனதோ, அவர் எங்கே போனாரோ தெரியவில்லை என பதறியடித்தபடி கண்ணீர்விட்டு அழுதார்.

    ஆனாலும் அவர் கண்ணீர்விட்டு கதறிய படியே தனது வீட்டை நோக்கி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் போலீசார் மீட்புபணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று கணவரை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணையும், அவரது கணவரையும் பத்திரமாக நிவாரண முகாமில் கொண்டு சேர்த்தனர்.

    • குப்பைகள் அனைத்தும் தற்போது மெரினா சர்வீஸ் சாலையில் குவிந்து கிடக்கின்றன.
    • வரும் காலங்களில் மெரினாவில் மது குடித்து கும்மாளம் அடிப்பவர்களை போலீசார் அடக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நன்மையும் அரங்கேறி உள்ளது.

    மெரினா கடலில் மிதந்த குப்பைகளை மாண்டஸ் புயல் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளது. மெரினாவில் நேற்று இரவு கடுமையான கடல் சீற்றம் காணப்பட்டதால் பல அடி உயரத்துக்கு எழும்பிய ராட்சத அலைகள் கடலின் மேற்பரப்பில் பரவி கிடந்த மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை கூளங்களை வாரி சுருட்டி கரைக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்த குப்பைகள் அனைத்தும் தற்போது மெரினா சர்வீஸ் சாலையில் குவிந்து கிடக்கின்றன. இதனை அகற்றி அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மெரினா கடற்கரை பகல் மற்றும் இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக குடிமகன்களின் கூடாரமாக செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.

    கடலில் மிதந்து புயலால் கரை ஒதுங்கியுள்ள கணக்கில் அடங்காத மதுபாட்டில்களே இதற்கு சாட்சியாக உள்ளன.

    எனவே வரும் காலங்களில் மெரினாவில் மது குடித்து கும்மாளம் அடிப்பவர்களை போலீசார் அடக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    மெரினா கடல் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி கடற்கரை மணல் பரப்பும் கடல் போலவே காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. சர்வீஸ் சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு வேகம் காட்டிய சூறாவளி காற்றால் மெரினாவில் உள்ள கடைகளும் சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து கடைகளில் இருந்த பொருட்களை வியாபாரிகள் இன்று காலையில் தேடி எடுத்தனர். இதே போன்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியும் காணப்பட்டது.

    பெசன்ட் நகர் சர்வீஸ் சாலை முழுவதும் கடற்கரை மணல் குவிந்து கிடந்ததை காண முடிந்தது.

    • பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
    • மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

    அதன்படி பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

    திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.

    அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த விமானங்கள் ஐதராபாத்திற்கு திரும்பி சென்றன. சிங்கப்பூர், இந்தூர், மும்பை, துபாய், தோகா உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன.

    அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூரு, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் என மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும்.

    நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை பெங்களூரு மற்றும் ஐதராபாத் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து, ஒன்றின்பின் ஒன்றாக சென்னை வர தொடங்கி உள்ளன. மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.

    • புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும்.
    • வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.

    புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்.

    நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

    திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • மாண்டஸ் புயல் 5 பேரின் உயிரையும் பறித்துள்ளது.
    • சென்னையில் 3 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் இருவரும் பலியாகி இருக்கிறார்கள்.

    சென்னை:

    வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினார்கள்.

    10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மாண்டஸ் புயல் 5 பேரின் உயிரையும் பறித்துள்ளது. சென்னையில் 3 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் இருவரும் பலியாகி இருக்கிறார்கள்.

    இந்நிலையில், மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

    தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • விஷாரம், அருங்குன்றம் கிராமத்தில் 3 மின் கம்பங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன.
    • ராணிப்பேட்டை மாவட்டத்தை மாண்டஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் இடைவிடாமல் மிக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    நேற்று நள்ளிரவு முதல் மாண்டஸ் புயல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோர தாண்டவம் ஆடியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    மேல் வீராணம் அருகிலப்பாடி போலிப்பாக்கம் ஆகிய இடங்களில் சாலையோரம் நின்ற பெரிய புளிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் வெட்டி அகற்றினர்.

    வாலாஜா வீட்டு வசதிக்கு வாரிய குடியிருப்பு பகுதியில் பெரிய மரமொன்று சாய்ந்து விழுந்தது.

    ஆரப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் புயல் காற்றில் சாய்ந்து நாசமானது. நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

    அரக்கோணம், மின்னல், பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஆற்காடு பகுதியில் மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக மாவட்டத்தில் மின்னலில் 197 மில்லி மீட்டர் காவேரிபாக்கத்தில் 109 பனப்பாக்கத்தில் 195 அரக்கோணத்தில் 141 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இந்த பகுதியில் உள்ள ஏரிகள் ஏற்கனவே நிரம்பி உள்ளதால் மழை வெள்ளம் காரணமாக ஏரிகளில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன.இதில் 178 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் 5 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 58 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. புயல் மழை காரணமாக இந்த ஏரிகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளன.

    நெமிலி அருகே உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் இருந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    விஷாரம், அருங்குன்றம் கிராமத்தில் 3 மின் கம்பங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன. பரவத்தூர் சாலையில் புளியமரம் சாய்ந்தது. இதனை அகற்றும் பணி நடந்தது.

    பாணாவரம் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் நேற்று இரவு வீட்டின் மீது பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குமார் (வயது 69) அவரது மனைவி சத்யா மற்றும் மகன் சவுந்தர்ராஜன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தை மாண்டஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம்:

    ராணிப்பேட்டை- 18.40, அரக்கோணம்- 141.50, மின்னல்-197.80, ஆற்காடு- 66, காவேரிப்பாக்கம்-109, பனப்பாக்கம்-195.80, வாலாஜா-41.2, அம்மூர்- 14, பாலாறு அனைக்கட்டு-53.4, சோளிங்கர்-60.8, கலவை- 42.60.

    • காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.
    • காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை‌ அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்றும் நீடித்தது.

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை பஸ் நிலையம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையிலும் கனமழை தொடர்ந்து நீடித்தது.

    தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.

    நேற்று இரவு துண்டிக்கப்பட்ட மின்வெட்டு காலை வரை வரவில்லை. காஞ்சிபுரம் நகரில் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் கலெக்டர் வீடு உள்ள பகுதி ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்துள்ள நிலையில் அதனை போர்க்கால அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் காற்றில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், பஸ் நிலையம், ரெயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.

    காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை‌ அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மரம் விழுந்ததன் காரணமாக அச்சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அவை சீராகி வாகனம் சென்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 18.9 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு செ.மீட்டரில் வருமாறு:-

    காஞ்சிபுரம்-18.9, வாலாஜாபாத்-9.18, உத்திரமேரூர்-13.8, ஸ்ரீபெரும்புதூர்-13.3, குன்றத்தூர்-14.7, செம்பரம்பாக்கம்-10.7.

    ×