என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 18.9 செ.மீ. மழை கொட்டியது- மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு
- காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.
- காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்றும் நீடித்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை பஸ் நிலையம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையிலும் கனமழை தொடர்ந்து நீடித்தது.
தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
நேற்று இரவு துண்டிக்கப்பட்ட மின்வெட்டு காலை வரை வரவில்லை. காஞ்சிபுரம் நகரில் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் கலெக்டர் வீடு உள்ள பகுதி ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்துள்ள நிலையில் அதனை போர்க்கால அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் காற்றில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், பஸ் நிலையம், ரெயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மரம் விழுந்ததன் காரணமாக அச்சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அவை சீராகி வாகனம் சென்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 18.9 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு செ.மீட்டரில் வருமாறு:-
காஞ்சிபுரம்-18.9, வாலாஜாபாத்-9.18, உத்திரமேரூர்-13.8, ஸ்ரீபெரும்புதூர்-13.3, குன்றத்தூர்-14.7, செம்பரம்பாக்கம்-10.7.






