search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaint register"

    அபிஷேகப்பாக்கத்தில் நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஈஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவெங்கடாச்சலம் (வயது62). இவருக்கு தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இதற்கிடையே முத்து வெங்கடாசலத்துக்கும், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடாச்சலம் தனது உறவினர் மீனாட்சி (60) என்பவருடன் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து முத்துவெங்கடாச்சலம் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 46 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பாளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஓராண்டு ஆகியும் மாத சம்பளம் வழங்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

    நெல்லை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ஆரோக்கியராஜ், பட்டதாரி ஆசிரியர்கள் கழக நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகனை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அவரது அறைக்கு செல்ல 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என போலீசார் கூறினர்.

    இதையடுத்து ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பாளையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மாவட்ட தலைவர் முருகன் உள்பட 46 ஆசிரியர்கள் மீதும் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

    பெண்ணிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் தென்றல் நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி ராதா (வயது 44). இவர்கள் நிலம் வாங்கமுடிவு  செய்தனர். அதற்காக நிலத்தரகர்கள் திருச்சி சிந்தாமணியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சரவணன், முருகன் ஆகியோரிடம் கூறினர். அவர்கள் திருவெறும்பூர் கல்லனை சாலையில் வேங்கூர் என்ற ஊரில் ஒரு நிலத்தை காட்டினர். அந்த நிலத்தை வாங்க ராதா முன்பணமாக ரூ.10 லட்சத்தை சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார். ஆனால் நிலத்தை சத்தியமூர்த்தி ராதாவுக்கு வாங்கி கொடுக்க வில்லை. 

    இதனால் சந்தேகம் அடைந்த ராதா நிலத்தை குறித்து விசாரித்து போது அது அங்கிகாரம் இல்லாத நிலம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராதா,சத்தியமூர்த்தியிடம் தான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி, முருகன், சரவணன் ஆகிய 3 பேரும் ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 

    இது குறித்து ராதா திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டின் உத்தரவுபடி திருச்சி குற்ற பிரிவு போலீசார் நிலமோசடி செய்த சத்தியமூர்த்தி, முருகன், சரவணன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 640 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வாமிங் ஆப்ரே‌ஷன் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சியில் போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வாகன சோதனை மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த திடீர் வாகன சோதனையில் 1430 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 36 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி ஆர்.டி.ஓ. வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

    மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 571 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 89 தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    அருமனை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சரின் உறவினர் என கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த தந்தை-மகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    அருமனை அருகே சென்னித்தோட்டம் மடத்து விளாகத்து பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் (வயது 63). இவர் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது உறவினர்கள் ஜெரால்டு மற்றும் ஷோபா ஆகியோரிடம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் தெற்கு ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டியன் மற்றும் அவரது மகள் துர்கா ஆகியோர் அமைச்சரின் உறவினர் என்று கூறி அறிமுகம் ஆனார்கள். பின்னர் தந்தை, மகள் இருவரும் அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி எனது உறவினர்களிடம் கூறினார்கள். அவர்களை நம்பி வங்கி மூலமாகவும், நேரிடையாகவும் ரூ.7 லட்சம் பணம் கொடுத்தனர். பணம் கொடுத்த பிறகு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இதனால் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டனர். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் ஜானகி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆறுமுக பாண்டியன், துர்கா ஆகியோர் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பா.ஜனதா பிரமுகர், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அவர் போது, மத கலவரத்தை தூண்டும் வகையிலும், மேலும் மாவட்ட நிர்வாகத்தை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜனதா பிரமுகர் கருப்பு முருகானந்தம் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×