search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குப்பதிவு"

    • நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

    மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. "காங்கிரஸ் கட்சி பொது மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோ கம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது" என அப்பட்ட மான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார்.

    நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3ஏ) இன் கீழ் குற்றமாகும்.

    இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த வாக்காளர்கள் தங்களது பெயர்களை நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களை வாக்களிக்க அனுமதி வழங்க கோரியும் மகாதான தெரு டி.பி.டி.ஆர். பள்ளி வாக்குச்சாவடி முன்பு கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. வேட்பாளர், பா.ம.க.வினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதாக பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
    • சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், மனைவி புவனேஸ்வரியும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறையை மீறியதாக சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.

    தங்கள் மீதான வழக்குகளால் தேர்தலில் மனுதாக்கல் செய்ய ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமா? என சந்திரபாபு நாயுடு தனது வக்கீல்கள் மூலம் ஆலோசனை நடத்தினார்.

    • முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.
    • இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதாக கேரள போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதில், கேரளாவை சேர்ந்த நபீல் நாசர் என்பவர் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிடுவதாகவும், கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் ஆட்சேபணைக்கு ரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக போலியான அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஐ.பி.சி.153, 171ஜி மற்றம் கேரள போலீஸ் சட்டத்தின் 120 (ஒ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை.
    • அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அறந்தாங்கியில் நேற்று காலை ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே ஓ.பன்னீர்செல்வம் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் மீது அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

    • தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த 27-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சத்யாவும், தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் மனுதாக்கல் செய்ய முதலில் வந்ததாகவும், குறைவான ஆதரவாளர்களுடன் மட்டுமே வந்ததாகவும், ஆனால் காங்கிரசார் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்ததாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் இட்டேரி ரோடு பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அங்கிருந்த கேபிள் வயரில் பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மின் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த கேபிள் வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

    இது குறித்து மின் வாரிய உதவி என்ஜினீயர் கண்ணன் ( 48) பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து சேதமானதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து அரியலூருக்கு அரசு பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனை டிரைவர் பிரதீஸ்வரன்(42) ஓட்டி வந்தார்.

    திண்டிவனம் அருகே சாரம் பாஞ்சாலம் ஜங்ஷன் அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அரசு பஸ் டிரைவர் பிரதீஸ்வரன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 17-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டனர்.

    இதில் 9-க்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
    • உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ (வயது51). இவரது மனைவி ஷில்பா கோதா (47), மகள் மகேக் வாரிகோ (16).

    இவர்கள் கனடாவின் பிராம்ப்டனில் உள்ள பிக்ஸ்கைவே அன்ட் வான்கிரிக் டிரைவ் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.

    அப்போது அங்கு ராஜீவ் வாரிகோ, ஷில்பா கோதா, மகேக் ஆகிய 3 பேரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார், சந்தேகத்திற்கிடமான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டாரின்யங் கூறும்போது, வீட்டில் தீப்பிடித்தது தற்செயலாக ஏற்படவில்லை என்று உயர் அதிகாரிகள் கருதியதால் சந்தேகத்திற்குரியதாக விசாரித்து வருகிறோம்.

    தீ விபத்துக்கான சாத்தியமான காரணம் அதிகம் இல்லை. இவ்வழக்கு எங்கள் கொலைப்பணியகத்துடன் விசாரித்து வருகிறோம் என்றார். உயிரிழந்த ராஜீவ் வாரிகோ, கனடாவில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது.
    • நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.

    அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது. இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    இந்நிலையில், அரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசியம் காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.
    • ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டம்.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    டில்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி, ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது.
    • கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்.

    புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    ஆங்காங்கே போராட்டங்களும் வலுத்து வருகின்றன. புதுச்சேரி மாநில அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆகியோர் பந்த் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


    ×