search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "church"

    • நாளை பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரத்தில் மூவொரு இறைவன் பேராலயம் குழித்துறை மறைமாவட்ட தலைமை பேராலயமாக உள்ளது. இந்த பேராலயத்தின் திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு உறுதிபூசுதல் வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்குதந்தை பீட்டர் முன்னிலை வகிக்கிறார்.

    நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு முளகுமூடு மறை வட்டாரத்தில் இருந்து பவனியாக கொண்டுவரப்படும் கொடி பேராலயம் வந்தடைகிறது. தொடர்ந்து முன்னாள் பங்குதந்தை யேசுதாசன் தாமஸ் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவடட குருகுல முதல்வர் ஹிலேரியுஸ் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதில் முளகுமூடு மற்றும் காரங்காடு மறை வட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மரிய ராஜேந்திரன் மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மறை மாவட்ட தொடர்பாளர் பேரருட்தந்தை இயேசுரத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றுகிறார். மறை மாவட்ட செயலாளர் பேரருட்தந்தை ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார். மறைமாவட்ட நிதிக்காப்பாளர் அருட்தந்தை அகஸ்டின், பணி குழுக்களின் இயக்குனர் அருட்தந்தை ஜெலஸ்டின் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.

    விழாவில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி காலை 9 மணிக்கு பேராலய பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 4-ந்தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6.30 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்துவபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பேரருட்பணியாளர் புஷ்பராஜ், பேராலய பங்குதந்தை, அருட்சகோதரிகள், அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
    • குமரி மாவட்டத்தில் உள்ளது சிறப்பு மிக்க இந்த திருத்தலம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க திருத்தலங்களில் சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலம் நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் சுசீந்திரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வழுக்கம்பாறை சந்திப்பில் இருந்து அஞ்சுகிராமம் சாலையில் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    நீர்வளமும், நிலவளமும், இயற்கை எழிலும் நிறைந்த சகாயபுரத்தின் மையமாக இடைவிடா சகாய அன்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில் எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.

    சகாயபுரம் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாவும், விவசாய தினக்கூலிகளாகவும் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பலர் பாறையை பிளந்து கல் உடைத்து எடுப்பது, சிற்பங்கள் செதுக்க கீற்றுக்கல் எடுத்து கொடுப்பது, கல் தூண்கள் செதுக்கி கொடுப்பது, ஆட்டுக்கல், அம்மி கொத்தி கொடுப்பது, சிற்பங்களை செதுக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

    பிரச்சினைகளில் இருந்து விடுதலை

    இங்குள்ள சகாய அன்னையின் திருஉருவ படம் உயிர்துடிப்பும், அருள் ஆற்றலும், கனிந்த பார்வையும், நெஞ்சத்தை ஈர்க்கும் தன்மையும் உடையது. இதை உற்று நோக்குவோர், உள்ளம் உருகி அன்னைக்கு அடிமையாகி ஆழ்ந்து போகிறார்கள். அவரது அருளை பல்வேறு வடிவங்களில் பெற்று செல்கிறார்கள்.

    குறிப்பாக இறைவன்மீது பற்றுதல், இயேசுவை பின்பற்றும் ஆர்வம், தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, திருமணம், மகப்பேறு வரம், பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் விடுதலை போன்றவற்றை பெறுகிறார்கள்.

    மெய்மறந்து மன்றாடுகிறார்கள்

    ஆலயத்தின் உள்அமைப்பும், ஆலய வளாகத்தில் காக்கப்படும் அமைதி சூழலும் பக்தர்கள் கடவுளையும் அன்னையையும் நெருக்கமாக சந்திக்கவும், ஆறுதல் அடையவும் தூண்டுகிறது. இதனால் பலர் தனிமையாகவும், குடும்பத்தோடும் எல்லா நாட்களும் இந்த ஆலயத்திற்கு வந்து ஆலயத்தில் அமர்ந்து மெய்மறந்து மன்றாடி செல்கிறார்கள். இங்கு புதுமைகள் நடக்கின்றன என்றோ, பலர் அருங்காட்சிகள் காண்கிறார்கள் என்றோ பொறுப்பானவர்கள் பேசுவதோ, அறிவிப்பதோ இல்லை. சகாய அன்னை வழியாக இறைவனிடம் உருக்கமாக, நம்பிக்கையுடன் மன்றாடி வாழ்வின் பல்வேறு நலன்களை பெற்றவர்களே தங்களது அனுபவங்களை தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.

    இதனால் தொடக்க காலத்தில் இருந்தே பெருமளவில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நவநாட்களில் பங்கு பெற்றுள்ளனர்.

    வாகனங்கள் அர்ச்சிப்பு

    இங்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதையும், விண்ணப்பங்கள், நன்றியறிதல்கள் மிகுந்து வருவதையும் புதன்கிழமை நவநாளில் வருவோர் கண்டுகொள்கிறார்கள்.

    புதிதாக வாங்கப்பெற்ற மற்றும் தகுதிச்சான்றிதழ் பெற்ற பலவகைப்பட்ட வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்துகூட அர்ச்சிக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் இங்கு கொண்டு வரப்படுகின்றன. சகாய அன்னை ஊர்திகளுக்கும், அவற்றில் பயணம் செய்வோருக்கும், உழைப்போருக்கும் பாதுகாப்பு நல்குகிறார் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இதுவும் இந்த திருத்தலத்தின் தனி சிறப்பாகும்.

    ஒப்புரவு ஆலயம்

    இந்த திருத்தலத்திற்கு வரும் மக்கள் உடலிலும், மனத்திலும், ஆன்மாவிலும் பாரங்களை சுமந்து வந்து திருத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு அமைதியான மனதோடு திரும்ப செல்கிறார்கள். இதற்கு உதவும் வகையில் அண்மையில் ஒப்புரவு ஆலயம் ஒன்று ஆலயத்தின் வெளியே முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க இருதனி அறைகள் உள்ளன.

    இங்கு நிதானமாக அமர்ந்து தகுந்த தயாரிப்புடனும் மனத்துயருடனும் வழக்கமான தனிப்பாவ மன்னிப்பு பெறவும், உரையாடல் வழி ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகளை உளவியல் அறிஞருடன் அமர்ந்து கலந்துரையாடி வழிகாட்டுதல், மனத்திடன் பெறும் ஆற்றுப்படுத்தலுக்கு வாய்ப்பு உள்ளது.

    தற்போது புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அருட்பணியாளர்கள், உளவியல் அறிஞர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இந்த திருத்தலத்துக்கு வருவோர் மனிதரை மனிதர் அன்பு செய்ய தூண்டும், மனித நேயப்பண்புகளை வளர்த்தெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த திருத்தலம் கோட்டார் மறைமாவட்டத்தின் அங்கமாக இருப்பதுடன், ஒரு தனி பங்காகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் பங்குதந்தையாக அருட்பணியாளர் ஜோசப்ரொமால்ட் செயல்பட்டு வருகிறார்.

    • அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
    • சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் பரி மாற்கு ஆலயத்தின் 163-வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. சேகர குரு இஸ்ரவேல் ராஜதுரைசிங் ஆராதனையை நடத்தினார். சபை குரு ஆமோஸ் மற்றும் குருவானவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

    மாலை 5 மணிக்கு அசன பண்டிகை நடந்தது. நிகழ்ச்சியில் டி.எஸ்.எப்.சீ புட்ஸ் நிர்வாக இயக்குனர் சத்தியநாதன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் திருமண்டல பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அசன விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த பொறுப்பாளர்கள் அருள்ராஜ், சசிகுமார், ரூபன், அமிர்தராஜ் மற்றும் சபை நிர்வாக செயலாளர் ஸ்டீபன், சபை நிர்வாக பொருளாளர் கன்னையா கனகராஜ் மற்றும் சேகர செயலாளர் செல்வகுமார் ஆகியோரை திருமண்டல நிர்வாகஸ்தர்கள் பாராட்டினர். ஆலயமணி வரவேற்றார். சபை மன்ற நண்பர்கள் ஐக்கியம் சார்பில் நிர்வாகஸ்தர்களுக்கு பண்ணைவிளை உதங்கன் மற்றும் நடுவக்குறிச்சி சாலொமோன் பொன்ராஜ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் அசன விழாவில் கலந்துகொண்டனர்.

    • ஜான் சாமுவேல் தென்னிந்திய திருச்சபையில் சூழலியல் துறைக்கான கவுரவ இணை இயக்குநராக நியமிக்கப்படுள்ளார்.
    • ஜான் சாமுவேலை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சுற்றுச்சூழல் கரிசனத்துறை இயக்குநராகவும், உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை சேகரகுருவாகவும் பணியாற்றி வருபவர் ஜான் சாமுவேல்.சிறந்த வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் தென்னிந்திய திருச் சபையில் சூழலியல் துறைக்கான கவுரவ இணை இயக்குநராக நியமிக்கப்படுள்ளார்.

    அதற்கான இணை நகலை தூத்துக்குடிநாசரேத் திருமண்டல பேராயர் தீமோத்தேயு ரவீந்திரன், திருமண்டல நிர்வாகக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்டக், செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், மேலாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஜான் சாமுவேலை நெல்லை கிறிஸ்தவ வரலாற்று சங்க நிர்வாகிகள், உடன்குடி சுற்று வட்டார சபை மக்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    • ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    திருவாரூர்:

    ஏசு சிலுவையில் அறைந்த தினமான புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை கடந்த 7-ந் தேதி உலகம் முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்தது.

    இதில் ஏசு இறந்ததை போன்று அவரது சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    அதையடுத்து ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பகுத்தறி மாணிக்கம் அந்தோணியார் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    • சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
    • தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதுபோல் ஆசர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. நாளை அதிகாலையும் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.

    • தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது.
    • 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.

    திருப்பூர் :

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழாவை யொட்டி கடை பிடிக்கப்படும் தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. ஏசு கிறிஸ்து சிலுவை யில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் என்ற நம்பிக்கை தான் கிறிஸ்தவம். இதை நினைவு கூறும் வகையில் தான் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன், தவ க்காலம் துவங்கியது. தினமும் தேவலாயங்களில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் தியானிக்கப்பட்டு வருகின்றன.வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப் படுகிறது.

    பக்தர்களை ஆன்மிக பாதையில் வழி நடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்க ளிலும், சிறப்பு நற் செய்தி கூட்டங்கள் நடத் தப்பட்டன. இந்த தவக்கா லத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. இதையொட்டி தேவாலய ங்களில் குருத்தோ லை பவனி நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்க ளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக, வருகிற 6-ந் தேதி புனித வியாழன், 7ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப் படுகிறது. 9-ந் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப் படுகிறது.

    • கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால் இளங்கோ அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது 72). இவர் களக்காடு புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக தனது மோட்டார் சைக்கி ளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது நாங்குநேரி-களக்காடு சாலையில் அமைந்துள்ள கிறிஸ்டோபர் கல்லூரி அருகே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக உடனடியாக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், பெரும்பத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத் திற்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரது மனைவி மேரி மற்றும் மகன் பால் இலக்கிய செல்வன், மகள் ஜென்ஸி பாக்கியரதி ஆகியோர் பால் இளங்கோவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார் என்றும் கூறினார்கள்.

    விபத்து குறித்த தகவல்களை போலீஸ் சரியாக விசாரிக்காமலும், உறவினர்களிடம் சரியான பதில் சொல்லா மலும், உதாசின படுத்தியதாக எம்.எல்.ஏ. விடம் கூறினர்.

    விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படியாகவும், குடும்ப தலைவரை இழந்த குடும்பத் திற்கும், உறவினர்களிடமும் விபத்து குறித்த அறிக்கையை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்கள்.

    உடனே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொலைபேசியில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டியன், வட்டார தலைவர்கள் வாகை துரை, ராமஜெயம், நிர்வாகிகள் ஜெயசீலன், ராமநாதன், சுந்தர், வின்சென்ட், குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது.
    • திருப்பலி நிறைவேற்ற 1969-ல் பீடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    500 ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுவிளை தன் பெயருக்கேற்ப புன்னையும், மாவும் நிறைந்த காடாக காட்சியளித்தது. அப்போது அங்கு ஒரு சில கிறிஸ்தவ குடும்பங்களே வாழ்ந்து வந்தனர்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து முட்டத்திற்கு மகாராஜா பல்லக்கில் செல்லும் முக்கிய வழியாக காட்டுவிளை திகழ்ந்து வந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொட்டவிளை நாடான் என்பவர் வைத்து வணங்கிய கல்குருசு பற்பல புதுமைகளை செய்து கொள்ளை நோய்கள் மற்றும் எந்தவித கேடுகளும் இல்லாமல் மக்களை முன்னேற்ற பாதையில் வளர வைத்தது. காலம் செல்ல, செல்ல புதுமைகள் நிறைந்த அந்த குருசை சுற்றி மக்கள் சிறிய குருசடி ஒன்றை கட்டினர். அதில் தினமும் செபித்து வந்தனர்.

    சிற்றாலயம்

    1860-ம் ஆண்டு மாடத்தட்டுவிளை பங்கின் ஓர் அங்கமாக காட்டுவிளை செயல்பட்டு வந்தது. பல்வேறு மாற்றங்கள் பின்னணியில் சிற்றாலயம் ஒன்று கட்ட பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி மக்கள் தீர்மானித்தனர். காட்டுவிளை, கொல்லம் ஆயர் பென்சிகரால் 1871-ல் காரங்காடு பங்கோடு இணைக்கப்பட்டது. 11-8-1931-ல் அருட்பணியாளர் இஞ்ஞாசியாரால் சிற்றாலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1933-ம் ஆண்டு அருட்பணியாளர் வர்க்கீஸ் அடிகளார் காலத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு புனித மங்கள மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புதிய ஆலயத்தில் அருட்பணியாளர் இம்மானுவேல் முதல் திருப்பலி நிறைவேற்றினார். இங்கு இறைமக்களின் விடிவெள்ளியாக புனித மங்கள அன்னை திகழ்ந்து வருகிறார். கொள்ளை நோயின் பிடியிலிருந்தும், பயத்தில் இருந்தும் மக்களை காப்பாற்ற கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் வீடு-வீடாக சென்று பஜனை பாடினார்கள். மேலும் நிறைவு நாளில் சப்பரப்பவனி நடைபெறுவது வழக்கம். தற்போதும் ஆண்டு தோறும் பஜனை மற்றும் சப்பரப்பவனி நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆயர் டி.ஆர்.ஆஞ்ஞசாமி 28-4-1940-ல் காரங்காடு பங்கில் இருந்து சரலை தனிப்பங்காக பிரித்து காட்டுவிளையையும் சரல் பங்கோடு இணைத்தார். அப்போது சரல் பங்குப்பணியாளராக அருட்பணியாளர் ஜேக்கப் லோப்பஸ் நியமிக்கப்பட்டார். மாதத்தில் ஒரு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    1950-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சிற்றாலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. மே மாதம் ஆலய பாதுகாவலர் திருநாளின் போது புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய ஊர் தலைவர் மற்றும் பங்கு மக்களின் அயராத ஊழைப்பாலும், ஒத்துழைப்பாலும், புதிய ஆலயம் அருமையாக கற்களால் எழுப்பப்பட்டது. அருட்பணியாளர் தனிஸ்லாஸ் காலத்தில் 1953-ம் ஆண்டு மே மாதம் பாதுகாவலர் விழா திருக்கொடியேற்ற நாளில் ஆயர் ஆஞ்ஞசாமி புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 16-5-1669-ம் ஆண்டு அருட்பணியாளர் ஏ.ஜே.அகஸ்டீன் அடிகளாரின் பணி காலத்தில் அருட்பணியாளர் தங்குவதற்கான மேடையும், கோவில் கொடி மரமும் அமைக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது.

    மக்களை பார்த்து திருப்பலி நிறைவேற்ற 1969-ல் பீடம் மாற்றி அமைக்கப்பட்டது. மாதம் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதோடு நற்கருணை பேழை (திருப்பிரசன்னம்) ஆலயத்தில் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதன்கிழமை மாலை திருப்பலியும் நடைபெற்றது.

    18-12-1987-ல் அருட்பணியாளர் ஏ.செல்வராஜ் பணிக்காலத்தில் பிரான்ஸ் தொண்டு நிறுவன உதவியுடன் குடிநீருக்கான பெரிய கிணறும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டு, மக்களுக்கும், ஆலய தென்னை மர தோப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.

    பங்கு அருட்பணிப்பேரவை

    கோட்டார் மறை மாவட்ட விதிமுறைப்படி அருட்பணியாளர் பெஞ்சமின் லடிஸ்லாஸ் பணி காலத்தில் 8-9-1996-ல் முதல் பங்கு அருட்பணி பேரவை அமைக்கப்பட்டது. தற்போது எட்டாவது பங்கு மேய்ப்புப்பணி பேரவை செயல்படுகிறது.16-5-2004-ல் தூய மங்கள அன்னை ஆலய 50-வது ஆண்டு பொன்விழா அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் காலத்தில் ஆயர் லியோன் தர்மராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    பொலிவுடன் எழுப்பப்பட்ட புதிய ஆலயம்

    அருட்பணியாளர் ஸ்டான்லி சகாயம் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கான தேவை உணரப்பட்டு 8-1-2016 முதல் இதற்கான நிதி சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு காணிக்கை ஆலய கட்டுமான பணிக்கான சிறப்பு காணிக்கையாக பிரிக்கப்பட்டு நிதி சேர்க்கப்பட்டது. அருட்தந்தை ஸ்டான்லி சகாயம் திட்டமிடுதலாலும், வழிகாட்டுதலாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும், ஆலய கட்டுமான நிதி திரட்டுவதில் மக்கள் உற்சாகமாக செயல்பட்டார்கள். அதைத்தொடர்ந்து பங்கில் பொறுப்பேற்ற அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ் புதிய ஆலயம் கட்டுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்டுமான நிதி சேர்ப்பதில் உழைத்தார். கட்டிட குழுவும் உருவாக்கப்பட்டது.

    9-12-2019-ல் ஆயர் நசரேன் சூசை அவர்களால் புதிய ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்னையின் பிறப்பு விழாவான 8-9-2020-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ் தளராத தியாக வழிநடத்துதலாலும் பல நிலையிலும் பல்வேறு மக்கள் மற்றும் பங்கு மக்களின் பணிகளாலும் தாராள கொடைகளாலும் பிற பல பங்குகளின் உதவி கரங்களாலும் நல் உள்ளம் படைத்த நன்கொடையாளர்களாலும், அனைவரின் இணைந்த செயல்பாடுகளாலும் ஆலயப்பணி நிறைவுக்கு வந்துள்ளது. புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) ஆயர் நசரேன் சூசையால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட உள்ளது.

    -அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ்.

    • திருவிழா நாளை தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது.
    • 26-ந்தேதி சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது.

    குமரி மாவட்டம் எல்லைபகுதியான பத்துகாணியில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறை மாவட்டத்தால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நாளான நாளை மதியம் 2 மணி முதல் நெய்யாற்றின்கரை மறை மாவட்ட இளைஞர் இயக்க தலைவர் அனுப் தலைமையில் கொடி பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து கொடி பயணமானது புனித பியூஸ் ஆலயத்தில் இருந்து குருசுமலை அடிவாரம் வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பங்குதந்தை ஜஸ்டின் பிரான்சிஸ் தலைமையில் திருப்பயண நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து மலை உச்சியில் திருப்பலி நடக்கிறது. இதையடுத்து நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்குகிறார். குருசுமலை இயக்குனர் வின்சென்ட் கே.பிட்டர், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், காட்டாகடை எம்.எல்.ஏ.சதீஷ், திருவனந்தபுரம் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பாலோடு ரவி, திருவனந்தபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பவுல் பி.ஆர்.ஆல்பர்ட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் மலை அடிவாரத்தில் இன்னிசை விருந்து, கலை நிகழ்ச்சிகள், மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி நடக்கிறது. 26-ந்தேதி மாலை சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி தமிழக எல்லை பகுதிகளான ஆறுகாணி, பத்துகாணி போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம்.
    • பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.

    கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.

    கோடி அற்புதங்கள் விளையும் பூமி

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மன்றாடும் பலர் அன்றாடம் பல நன்மைகளைப் பெற்று மனநிறைவுடன் செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சியளிக்கின்றது.

    ஒருவர் உலகமெல்லாம் தமதாக்கி கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன(லூக்கா 9:25) என்ற வாக்கியம் புனித சவேரியாரின் வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருந்தது.

    மேலும், ஆழ்ந்த ஆன்மிக அனுபவம் நற்செய்தி பணியாற்றும் ஆர்வமும், அவரை சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு நற்செய்தி பணியாற்ற தூண்டியது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்(மாற்கு 16:15) என்ற இறைவார்த்தையின் படி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து அனைவரையும் இறையரசில் உட்படுத்த வேண்டும் என்ற ஆவல் இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

    சவேரியாரின் இந்திய வருகை

    இஞ்ஞாசியார் தன்னுடன் சில குருக்களையும் அழைத்துக் கொண்டு ரோமுக்கு சென்று திருத்தந்தை 3-ம் சின்னப்பரை சந்தித்து ஆன்மிக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.

    போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே, போர்த்துக்கீசிய மன்னர் 3-ம் ஜாண் உதவியோடு சவேரியார் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலே இறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார்.

    கோட்டாரில் இறைப்பணி

    அதைதொடர்ந்து குமரிமாவட்டம் கோட்டார் வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து மக்களை சந்தித்து மக்களுடைய அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

    மேலும், நம்பிக்கையோடு முன் வந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். கோட்டார் பேராலயத்திற்கு இன்னுமொரு சிறப்பு, இங்குதான் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறைமாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. இங்குதான் நமது புனித சவேரியார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார்.

    -பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன்

    • நாளை திருவிருந்து ஆராதனை நடக்கிறது.
    • 28-ந்தேதி 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது.

    உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மார்க் ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை மற்றும் அசனபண்டிகை விழா நேற்று மாலையில் ஜெயபவனியுடன் தொடங்கியது. பரிபாலனர் ஞானராஜ் கோவில் பிள்ளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சேகர உபவாசக கூடுகை, இரவு 7 மணிக்கு வட இந்திய மிஷனரி கலாசார நிகழ்ச்சிகள், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருவிருந்து ஆராதனை, காலை 11.30 மணிக்கு வாலிப பெண்கள் பண்டிகை, இரவு 7 மணிக்கு சபையார் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு நடக்கிறது.

    வருகிற 23-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களும் தினமும் இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா, 26-ந் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தின கொடியேற்று விழா, 11 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மிஷினரி விற்பனை விழா, மாலை 6 மணிக்கு ஆயத்த ஆராதனை, 28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது.

    தொடர்ந்து தங்க நாணயங்கள், சிறப்பு மலர்கள் வெளியீடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு வான வேடிக்கை, 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, நண்பகல் 12 மணிக்கு வேத பாட தேர்வு, மாலை 4 மணிக்கு ஞானஸ்தான, ஆராதனை, இரவு 7 மணிக்கு தியாக சுடர் என்ற வரலாற்று நாடகம் நடைபெறும்.

    ஏற்பாடுகளை சேகரகுருவானவர் பாஸ்கர் அல்பட்ராஜன் கவுரவ குருவானர் ஷீபா பாஸ்கர், உதவி குருவானவர் ஜெபத்துரை, சபை ஊழியர் ஆனந்த மணி, பரிபாலனர் ஞான்ராஜ் கோவில் பிள்ளை, தலைவர் பால்ராஜ் செயலாளர் பிரின்ஸ் பொருளாளர் ஜெபஸ்டின் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

    ×