search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery management board"

    • முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.
    • வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட சங்கங்கள், முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை.

    பெங்களூரு:

    காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது.

    தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இந்த முழு அடைப்புக்கு தமிழ் சங்கம் உள்பட150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட சங்கங்கள், முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளன. ஓலோ, ஊபர் டாக்சி சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் கூறியுள்ளன.

    முழு அடைப்பையொட்டி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடக்கிறது.

    பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். பாதுகாப்புக்காக 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தமிழக அரசு பஸ்கள் தமிழக-கர்நாடகா எல்லையான ஓசூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.
    • கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மைசூரு, மண்டியா உள்பட 5 மாவடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 22 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மண்டியா மற்றும் மத்தூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதை கண்டித்து சில கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் பெங்களூருவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி நாளை 26-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    போராட்டத்தையொட்டி பெங்களூருவில் நாளை ஆட்டோக்கள், லாரிகள், அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படாது. மேலும் ஐ.டி. நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு துறைகள், தொழில் அமைப்புகள், கடைகள் செயல்படாது. அதுபோல் பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் நாளை இயங்காது. வழக்கம்போல் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்து கடைகள் மற்றும் அவசர சேவைகள், அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்படும்.

    தமிழக அரசு பஸ்கள் தமிழக-கர்நாடகா எல்லையான ஓசூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களூருவில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது, மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது, சட்டவிரோத செயல்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக பெங்களூருவில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர். எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதற்கிடையே கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இதில் கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை பொறுத்தவரையில் கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற வேண்டும். அதன்படி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முழு அடைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 24-ந் தேதி வினாடிக்கு 6 ஆயிரத்து 338 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4105 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5993 கனஅடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2126 கன அடியாகவும் உள்ளது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    • பெங்களூரு காந்திநகர், மைசூரு, மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
    • பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் ஓடவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக கர்நாடகா விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணை பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் இறங்கியும், சாலைகளில் டயரை தீயிட்டு எரித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

    இந்த நிலையில் கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று முடிவு செய்ததும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே மீண்டும் நேற்று முன்தினம் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

    குறிப்பாக பெங்களூரு காந்திநகர், மைசூரு, மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா என்ற பகுதியில் மேலக்கோட்டை சுயேச்சை எம்.எல்.ஏ., தர்ஷண புட்டண்ணா என்பவரது தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.

    பெங்களுருவில் கன்னட ரக்ஷன வேதிகே இயக்கத்தின் நாராயண கவுடா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் மைசூரு, மற்றும் மாண்டியாவின் பல பகுதிகளில் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாண்டியாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் ஓடவில்லை. இதனால் மக்கள் கூட்டம் இன்றி நகரமே வெறிச்சோடியது.

    மேலும் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்க பட்டணா, கண்ணம்பாடி, கிருஷ்ணராஜ சாகர், மைசூரு, கபினி அணை உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
    • கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2973 கன அடியும் திறக்கப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

    எனவே தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

    இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் மீண்டும் 2-வது கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனாலும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி காவிரி மேலாண்மை குழு அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் உடனடியாக தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

    ஆனாலும் அவர்கள் தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. இதில் கர்நாடக அரசு வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர முடியாது என்று வாதிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை கோரிய கர்நாடகாவின் மனுவையும் டிஸ்மிஸ் செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2973 கன அடியும் என மொத்தம் 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2796 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5147 கனஅடியாகவும் உள்ளது.

    • கர்நாடக அரசு பெயரளவிலேயே கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
    • விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடக அரசு பெயரளவிலேயே கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது. நேற்று கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4,674 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலையில் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 4,673 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 2,673 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,845 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது.

    அதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு 2,359 கன அடி நீர் வருகிறது. முழு கொள்ளளவு 84 அடி கொண்ட கபினி அணை நீர் மட்டம் 75.36 அடியாக உள்ளது.

    தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த நீர்வரத்தை கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு காந்திநகர், மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சன ஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கண்டித்து மண்டியா நகரில் நாளை (23-ந்தேதி) முழு அடைப்பு போராட்டத்துக்கு மாவட்ட விவசாய சங்கம் மற்றும் இதரக்ஷணா கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும், அதன் பின்னர் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும் நடைபெறவில்லை.
    • தற்போதுள்ள அமர்வே விசாரிக்கட்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், காவிரி நீர் குறித்த உத்தரவுகளை கர்நாடகம் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

    இதில் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும், அதன் பின்னர் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி ஆஜராகி, தமிழ்நாடு அரசின் மனுவை செப்டம்பர் 11 அல்லது 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டனர்.

    அதைத் தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய், அவசரமாக விசாரிக்க வேண்டுமென்றால் புதிய அமர்வை ஏற்படுத்தும் வகையில் தலைமை நீதிபதியிடம்தான் முறையிட வேண்டும் என்றார். அப்படியென்றால் மனுவை முதலிலிருந்து விசாரிக்க நேரிடும், எனவே தற்போதுள்ள அமர்வே விசாரிக்கட்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி பி.ஆர்.கவாய், காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு செப்டம்பர் 21-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 22, 23, 24 ஆகிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை செப்டம்பர் 27-ந் தேதி வரை திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கர்நாடக அரசின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது.

    இதற்கிடையே நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டபோது எங்களிடம் சொற்ப அளவு தண்ணீர் இருந்தாலும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டோம். அதன்படி 5 ஆயிரம், 3 ஆயிரம் கன அடி என எங்களால் இயன்ற அளவுக்கு திறக்கப்பட்டது.

    தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியமே இல்லை. எங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தேவைப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    • கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.
    • தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி தண்ணீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இதற்காக மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள். கோரிக்கை மனுவும் அளித்தனர்.

    ஆனால் மத்திய மந்திரி தமிழகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவில் சொல்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் காவிரிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் என்னென்ன வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இன்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அலுவலகத்துக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    சுமார் 1 மணிநேரம் முகுல் ரோஹத்கியுடன் ஆலோசனை நடத்திய துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.

    கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.

    எனவே உச்சநீதிமன்றம் தான் நமக்கு ஒரே தீர்வு. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் கை கொடுத்து உள்ளது. தொடக்கம் முதல் சுப்ரீம் கோர்ட்டு தான் தமிழகத்துக்கு தீர்வை பெற்று தந்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டின் நிலையை எடுத்துரைத்து உரிய நீரை திறக்க கோருவோம்.

    தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது.
    • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

    இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது.

    ஆனால் கர்நாடக அரசு முறைப்படி 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கவில்லை. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட வேண்டும் என கூறியும் தண்ணீர் திறந்து விடவில்லை. தற்போது 2-வது முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்டும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 6 ஆயிரத்து 16 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 674 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.08 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இந்த அணையில் இருந்து 1,663 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 75.97 அடியாக உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 834 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 4 ஆயிரத்து 674 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரித்து கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும்.
    • கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது.

    புதுடெல்லி:

    தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

    அதுமட்டுமின்றி காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

    காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும். இந்த நீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் காய்ந்து கிடக்கிறது.

    இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் 12 பேர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்று டெல்லி சென்று இருந்தனர்.

    நேற்று மாலை 4 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் மத்திய மந்திரியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமரை பார்க்க மத்திய மந்திரி சென்று விட்ட காரணத்தால் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்திக்கவில்லை.

    இதனால் இன்று காலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் 12 பேர் மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    மத்திய மந்திரியை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மத்திய மந்திரி ஷெகாவத்தை சந்தித்தீர்களே? என்ன சொன்னார்?

    பதில்:- வழக்கமான சந்திப்புதான். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறார்கள்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். கர்நாடகாவில் கிட்டத்தட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருக்கிறது. ஆங்காங்கே சின்னசின்ன அணையை கட்டி கே.ஆர்.சாகர் வரும் முன்பே தண்ணீரை தேக்கி வைத்து உள்ளனர்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு 13-ந்தேதி 12,500 கனஅடி கொடுக்கலாம் என்று அவங்களே சொன்னார்கள். ஆனால் 5 ஆயிரம்தான் காவிரி மேலாண்மை ஆணையம் கொடுக்க சொல்லி உள்ளது. 5 ஆயிரம் சொன்னாலும் நேற்று கூட 3,500 கனஅடி தான் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது. அதனால் மத்திய அரசு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்க வந்தோம். நாங்கள் அணையை முழுவதும் திறந்து விடுங்கள் என்று கேட்கவில்லை.

    தண்ணீரை எப்படி பங்கீட்டு கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழி சொல்லி உள்ளது. அதன்படி கூட தண்ணீர் தரவில்லை. அதனால் நாங்கள் அப்பீல் செய்தோம். எனவே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஆனால் நாங்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்குகிறீர்கள். அவர்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்கி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் எங்களுடைய கொடுமை என்றோம்.

    உடனே மத்திய மந்திரி ஒழுங்காற்று குழு சேர்மனை கூப்பிட்டு கேட்டார். அவர் ஒரு கணக்கு சொன்னார். 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் தர முடியும் என்று கூறினார். கர்நாடகாவில் குடிநீருக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வளவுதான் குடிநீருக்கு கொடுப்பது.

    ஏற்கனவே நாங்கள் நடுவர் மன்றத்தில் வாங்கியதில் 17 டி.எம்.சி. சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த பிறகு அதுவும் குறைந்து விட்டது. அதற்கு பிறகும் குடிநீர் என்றால் எப்படி? உடனே நாங்கள் சொன்னோம், எங்களுக்கும் பல பகுதிகளில் குடிநீர் மையமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பகுதியான இடங்கள் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்துகிறார்கள். இப்போது கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது என்று சொன்னோம்.

    உடனே மத்திய மந்திரி நாங்கள் என்ன செய்வது என்றார். அப்படியானால் மத்திய அரசு எதற்கு இருக்கிறது என்று கேட்டோம். மத்திய அரசு நடவடிக்கை இல்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறோம் என்று கூறி உள்ளோம்.

    சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

    கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டில் என்ன வாதங்கள் வைக்கப்படும்?

    பதில்:- இதுபோன்ற வாதங்கள் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தந்துள்ள புள்ளி விவரங்கள் படி தண்ணீர் தாருங்கள் என்கிறோம். 12,500 கனஅடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என கூறியபடி கேட்கிறோம்.

    நாங்கள் சேர்மனிடம் கேட்டோம், நீங்கள் இங்கிருந்து உட்கார்ந்து கொண்டு சொல்கிறீர்களா? அல்லது உங்க ஆட்கள் அங்கு மானிட்டர் செய்கிறார்களா? என கேட்டேன். அதற்கு அவர் எங்க ஆட்கள் மானிட்டர் செய்கிறார்கள் என்று கூறினார்.

    கேள்வி:- மத்திய மந்திரி கடைசியாக என்ன பதில் கூறினார்?

    பதில்:- கர்நாடகம் தண்ணீர் இல்லை என்று சொன்னாலும் நாங்கள் தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட சொல்லி உள்ளோம் என்றார்.

    நாங்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருவதால் அதுவரையாவது 5 ஆயிரம் கனஅடி திறந்து விடுங்கள் என்றோம்.

    கேள்வி:- மத்திய மந்திரி கர்நாடகம் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளும் விதம் சரி என்று மத்திய மந்திரி நினைக்கிறாரா? அல்லது தவறு என நினைக்கிறாரா?

    பதில்:- அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் மத்திய மந்திரியிடம் தெரிவித்தேன்.

    கேள்வி:- கர்நாடக முதல்-மந்திரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட பேசுவதாக உங்களுக்கு உறுதிமொழி கொடுத்து உள்ளரா?

    பதில்:- அந்த மாதிரி உறுதிமொழி எதுவும் கொடுக்கவில்லை.

    கேள்வி:- மத்திய மந்திரி முடிவாக என்னதான் சொன்னார்?

    பதில்:- தண்ணீருக்கு சொல்லி உள்ளது கொடுத்திருக்காங்க மழை வந்தால் பார்க்கலாம் என்றார்.

    கேள்வி:- காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண 'ராசிமணல்' அணை கட்டப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லையே.

    பதில்:- அதுக்கும் இதுக்கும் சம்பந்தப்படுத்தாதீர்கள். அந்த கதையே இப்போது வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரத்து 7 கன அடியாக உள்ளது.
    • ஒகேனக்கல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.

    சேலம்:

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

    இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹால்தார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் சந்தீப்சக்சேனா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ஆனால் கர்நாடகா தரப்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் தமிழக அதிகாரிகள் தரப்பில் 12 ஆயிரத்து 500 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தினர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து ஆணைய தலைவர் ஹல்தார் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் கர்நாடகாக தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரத்து 7 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 171 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.06 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 525 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 1663 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 769 னஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 3 ஆயிரத்து 834 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. தற்போது அந்த பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று முதல் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 556 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 844 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 40.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 39.75 அடியாக சரிந்தது.

    இனி வரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×