search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கனஅடி திறப்பு
    X

    கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கனஅடி திறப்பு

    • கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 24-ந் தேதி வினாடிக்கு 6 ஆயிரத்து 338 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4105 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5993 கனஅடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2126 கன அடியாகவும் உள்ளது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    Next Story
    ×