search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறப்பு
    X

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறப்பு

    • தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
    • கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2973 கன அடியும் திறக்கப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

    எனவே தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

    இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் மீண்டும் 2-வது கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனாலும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி காவிரி மேலாண்மை குழு அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் உடனடியாக தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

    ஆனாலும் அவர்கள் தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. இதில் கர்நாடக அரசு வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர முடியாது என்று வாதிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை கோரிய கர்நாடகாவின் மனுவையும் டிஸ்மிஸ் செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2973 கன அடியும் என மொத்தம் 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2796 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5147 கனஅடியாகவும் உள்ளது.

    Next Story
    ×