search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரியில் உரிய நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
    X

    காவிரியில் உரிய நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

    • செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும், அதன் பின்னர் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும் நடைபெறவில்லை.
    • தற்போதுள்ள அமர்வே விசாரிக்கட்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், காவிரி நீர் குறித்த உத்தரவுகளை கர்நாடகம் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

    இதில் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும், அதன் பின்னர் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணையும் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி ஆஜராகி, தமிழ்நாடு அரசின் மனுவை செப்டம்பர் 11 அல்லது 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டனர்.

    அதைத் தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய், அவசரமாக விசாரிக்க வேண்டுமென்றால் புதிய அமர்வை ஏற்படுத்தும் வகையில் தலைமை நீதிபதியிடம்தான் முறையிட வேண்டும் என்றார். அப்படியென்றால் மனுவை முதலிலிருந்து விசாரிக்க நேரிடும், எனவே தற்போதுள்ள அமர்வே விசாரிக்கட்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி பி.ஆர்.கவாய், காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு செப்டம்பர் 21-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 22, 23, 24 ஆகிய கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை செப்டம்பர் 27-ந் தேதி வரை திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கர்நாடக அரசின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×