search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bomb blast"

    • வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
    • குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தது. இதில் கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் பலியானார்கள்.

    இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி கூறும் போது, "இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.

    • வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆனாலும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை அங்குள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் ரோட்டோரம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரைவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    இந்த நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் யார்? என்று தெரியவில்லை. எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. குடியரசு தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்மு- காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.
    • குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இங்கிலாந்து, பிரான்ஸ் இடையே உள்ளது ஜெர்சி தீவு உள்ளது. இந்த தீவின் தலைநகர் செயின்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அந்த கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். மேலும் 12 பேரை காணவில்லை. அவர்களை மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வழியாக நடந்து சென்ற 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • வெடிகுண்டு வெடித்ததில் பேருந்து, அருகில் உள்ள வாகனம் மற்றும் கடைகள் சேதமடைந்தன.
    • கொராசன் மகாண ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் இன்று காலையில் அரசு ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பால்க் மாகாணத்தின் மசார்-இ ஷரிப் நகரில் சாலையோரம் இருந்த வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. ஹியரடன் எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அப்பகுதியை கடந்தபோது, வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள வாகனம் மற்றும் அங்கிருந்த கடைகளும் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன.

    இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பான கொராசன் மகாண ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலிபான்களின் போட்டி அமைப்பான இந்த ஐஎஸ் அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாக பாஜக விமர்சனம்.
    • மம்தா பானர்ஜி பதில் அளிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    மேதினிபூர்:

    மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதி அருகே உள்ள பூபதிநகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஓலை கூரையுடன் கூடிய அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

    • பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
    • அனைத்து ஆப்கன் குழந்தைகளுக்கும் பயமின்றி பள்ளிக்குச் செல்ல உரிமை உண்டு.

    ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

    இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்ற பிறகு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மசூதிகள், மக்கள் கூடும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
    • இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜெருசலேம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பகைமை நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. எனினும் அந்த 2 பகுதிகளும் தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    அப்படி தாக்குதல்களில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.

    அதுமட்டும் இன்றி மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் பதுங்கியிருக்கும் போராளிகளை பிடிப்பதற்காக நடத்தப்படும் தேடுதல் வேட்டையின்போது அப்பாவி பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இந்த மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை வழக்கம் போல் மக்கள் பலர் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

    பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். குண்டு வெடிப்பில் சிக்கி 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த பஸ் நிறுத்தத்துக்கு செல்லக்கூடிய சாலையை மூடி அந்த பகுதி முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    அதை தொடர்ந்து குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அந்த நகரின் வடக்கு பகுதியில் ரமோட் என்கிற இடத்தில் உள்ள மற்றொரு பஸ் நிறுத்தத்தில் அடுத்த குண்டு வெடித்தது.

    இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 2 குண்டு வெடிப்புகளிலும் காயமடைந்த 21 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இரட்டை குண்டு வெடிப்பு ஜெருசலேம் நகரை உலுக்கியது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த ஆண்டு மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் 19 இஸ்ரேலியர்களும், 130-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    குள்ளனம்பட்டி:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக எல்லைப்பகுதியிலும் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ரெயில்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் இருக்கைகள் மற்றும் உடைமைகள், நடைமேடை, கார் பார்க்கிங், பார்சல், ஆட்டோ ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினர்.

    • ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • குண்டு வெடிப்பில் கார்கள் பைக்குகள் மற்றும் போலீஸ் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கிருந்து 713 கிலோ எடையுள்ள வெடி தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதன் பின்னர் வெடிபொருட்களை போலீசார் அழித்துவிட்டனர். மீதமிருந்த 250 கிராம் எடையுள்ள வெடிபொருட்களை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து அதன் மீது கான்கிரீட் அமைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பைக்குகள் மற்றும் காவல் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    அதிர்ஷ்டவசமாக அப்போது பணியில் இருந்த போலீசார் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த வெடிகுண்டு விபத்து காரணமாக போலீசாருக்கோ பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

    வெடிகுண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிபொருட்களை மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    சமூக விரோதிகள் யாராவது சதி செயலில் ஈடுபட்டார்களா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சம்பவ இடத்தில் போலீஸ் குழுக்கள் இருப்பதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தாகூர் கூறினார்.

    ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்திருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    நகரின் முக்கிய இடத்தில் குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து, கரும்புகை வானுயரத்தில் எழுந்தது.

    காபூல் காவல்துறைத் தலைமையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், " காபூலில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்தது. இதில் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆனால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய எண்ணிக்கை குறித்து தகவல் தெரியவில்லை.

    மசூதிக்கு அருகில் உள்ள பிரதான சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சர் அப்துல் நஃபி தாகூர் தெரிவித்தார். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். சம்பவ இடத்தில் போலீஸ் குழுக்கள் இருப்பதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தாகூர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது.
    • அருங்காட்சியகம் அருகே மர்ம பார்சல் ஒன்று கண்டறியப்பட்டது.

    அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது.

    இதனால் குண்டு வெடித்ததாக பெரும் பரபரப்பு நிலவியது. வெடி சத்தம் கேட்டு மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். மர்ம பொருள் வெடித்ததில் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.

    உடனே பல்கலைக்கழகத்துக்கு எப்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். வெடித்து சிதறிய மர்ம பொருளை ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே அப்பகுதியில் உள்ள அருங்காட்சியகம் அருகே மர்ம பார்சல் ஒன்று கண்டறியப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மையில் குண்டு வெடித்ததா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது.
    • இந்த தாக்குதலில் 2 தூதரக அதிகாரிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென குண்டு வெடித்தது.

    தூதரகத்திற்கு வெளியே விசாக்களைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மக்களில் பலர் பலியாகி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இந்நிலையில், குண்டுவெடிப்பில் 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர் என ரஷிய அரசு தொடர்புடைய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

    ரஷிய தூதரகத்தில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை கண்டறிந்த பாதுகாவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை மசூதியில் நடந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

    தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×