search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup cricket"

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    ஆசிய தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 291 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதனை இருமுறை செய்துள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது.

    இலங்கை அணி முதன் முறையாக இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    • முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆல் ரவுண்டர் சோம்பால் காமி கடைசியில் வந்து 48 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடிய நேபாளம் அணி வீரர்களுக்கு இந்திய அணி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது.

    ஆல் ரவுண்டர் சோம்பால் காமிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் அரை சதம் விளாசிய ஆசிப் ஷேக்கிற்கு விராட் கோலியும் பதக்கம் வழங்கினார். இந்த தருணத்தை நேபாளம் அணி தங்களது டுவிட்டரில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
    • ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கையும், ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

    இந்த பிரிவில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வங்காளதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்வாகும்.

    தற்போதைய சூழலில் இலங்கையின் ரன்ரேட் (+.0.951) வலுவாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் மோசமாக (-1.780) உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்4 சுற்று அதிர்ஷ்டம் கிட்ட வேண்டும் என்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் சேர்க்கிறது என்றால், எதிரணியை குறைந்தது 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும். இதே போல் இலக்கை விரட்டிப் பிடிக்கும் (சேசிங்) நிலை ஏற்பட்டால் 35 ஓவருக்குள் எட்ட வேண்டும். அப்போது தான் ரன்ரேட்டில் முன்னிலை பெற முடியும். லாகூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் இலங்கையும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
    • சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளாம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.

    தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது லீக் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    நேற்று நடந்த 4-வது போட்டியில் வங்காளதேசம் 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 5-வது லீக் ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவருடைய மனைவிக்கு குழந்தை பிறப்பதையொட்டி அவர் நேற்று நாடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அவர் நாடு திரும்பினார்.

    இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    காயம் காரணமாக பும்ரா கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடினார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றினார்.

    இதற்கிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடைபெற இருக்கும் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூப்பர் 4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி அங்கு நடக்கிறது.

    கொழும்பில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடைபெற இருக்கும். போட்டிகள் தமுல்லா அல்லது ஹம்பன் டோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு செய்யப்படுகிறது.

    • பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் இந்தியாவிடம் நாளை மோதுகின்றன.
    • இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் ஷதாப் கான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் இந்தியாவிடம் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

    இது குறித்து சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. நசீம் ஷா, அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவ்ஃப். இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். எனவே அவர்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு தாக்குதல் மற்றும் இந்தியா அவர்களுக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

    • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
    • எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர்.

    கொழும்பு:

    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது. இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.

    இது பற்றி விராட் கோலி கூறியதாவது:-

    அவர்களுடைய பலம் பந்துவீச்சு என்று நான் கருதுகிறேன். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். எனவே நல்ல நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் இருக்க வேண்டும்.

    நான் என்னுடைய ஆட்டத்தை எப்படி முன்னேற்றலாம் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியிலும் ஒவ்வொரு வருடமும் நீண்ட காலமாக என்னுடைய அணிக்கு சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த நிலையை அடைந்த பின் மேற்கொண்டு தொடுவதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட சாதனைகளும் கிடையாது.

    அதனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து எப்படி என்னுடைய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்பதே என்னுடைய மனநிலையாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் முன்னேறுவதற்கு நான் பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.

    என்று கூறியுள்ளார்.

    • ஆசிய கோப்பையில் 2-வது மிகப்பெரிய வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது.
    • 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் படைத்தார்.

    முல்தான்:

    6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள முலதான் நகரில் நேற்று தொடங்கியது.

    முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன் வித்தியாசத்தில் நேபா ளத்தை வீழ்த்தியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் 131 பந்தில் 151 ரன்னும் (14 பவுண்டரி, 4 சிக்சர்), இப்திகார் அகமது 71 பந்தில் 109 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய நேபாளம் 23.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சோம்பால் காமி அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். ஷதாப்கான் 4 விக்கெட்டும், ஷகின்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் தலா 2 விக்கெட்டும், நசிம் ஷா, முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    238 ரன் வித்தியாசத்தில் வெற்றி வெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்தது. ஆசிய கோப்பையில் 2-வது மிகப்பெரிய வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது.

    2008-ம் ஆண்டு ஆங்காங்குக்கு எதிராக இந்தியா 256 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும்.

    ஒருநாள் போட்டி வரலாற்றில் பாகிஸ்தானின் 3-வது பெரிய வெற்றி இதுவாகும். 2016-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக 255 ரன்னிலும், 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 244 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    நேபாளம் அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த அணி என்ற சாதனையையும் பாகிஸ்தான் படைத்தது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை தகுதி சுற்றில் நேபாளத்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    ஆசிய கோப்பை போட்டியில் 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் படைத்தார். இதற்கு முன்பு வீராட் கோலி கேப்டன் பதவியில் 136 ரன் எடுத்து இருந்தார். 2014-ல் வங்காள தேசத்துக்கு எதிராக இதை எடுத்து இருந்தார். இதை தற்போது பாபர் ஆசம் முறியடித்தார்.

    பாபர் ஆசம் 102 இன்னிங்சில் 19-வது சதத்தை எடுத்தார். இதன் மூலம் ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), சாதனையை அவர் முறியடித்தார்.

    இப்தார்கான் அகமது 67 பந்தில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையில் அதிக வேகத்தில் சதம் அடித்த 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை போட்டியில் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தல் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் இலங்கை-வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

    • இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.
    • இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்  உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணி அளவில் ஆட்டம் தொடங்குகிறது.

    மேலும், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய பத்திரனா இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கொழும்பு:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற நாளை முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. ஹசரங்கா, சமீரா, குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய பத்திரனா இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி:-

    தசுன் ஷனகா, பதும் நிசானகா, திமுத் கருணாரத்ணே, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லலகே, மதீஷா பத்திரனா, குசன் ரஜிதா, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார்.
    • ஆசிய கோப்பையில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது.

    கொழும்பு:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது. சமீபத்தில் லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

    இதே போல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் சமீரா ஆசிய போட்டியை முழுமையாக தவறவிட வாய்ப்புள்ளது. பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    அவர்கள் வேகமாக குணமடைவதை பொறுத்து அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும். இது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 31-ந்தேதி வங்காளதேசத்தை பல்லகெலேவில் சந்திக்கிறது.

    • ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    பெங்களூரு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். அயர்லாந்து தொடரில் ஆடிய ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, மாற்று வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்று பயிற்சி முகாமில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முகாமில் பேட்டிங், பந்து வீச்சு பயிற்சி மட்டுமின்றி உடல்தகுதி விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக யோ-யோ சோதனையும் நடத்தப்படுகிறது. யோ-யோ சோதனை என்பது குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக ஓடி கடக்க வேண்டும். இதில் 16.5 புள்ளியை கடந்தால் தான் வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்குரிய அளவுகோலாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்துள்ளது. முதல் நாளில் கோலி யோ-யோ சோதனையில் 17.2 புள்ளிகள் எடுத்து அசத்தினார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

    ரோகித், பாண்டயா, ஆகியோரும் இந்த கடுமையான சோதனையை வெற்றிகரமாக முடித்தனர். மறுபடியும் லேசான காயமடைந்துள்ள லோகேஷ் ராகுல் மற்ற பயிற்சியில் ஈடுபட்டாரே தவிர, யோ-யோ சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. அவரது உடல்தகுதி எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்கிறது.

    இந்த பயிற்சி முகாம் வருகிற 29-ந்தேதி நிறைவடைகிறது. மறுநாள் அங்கிருந்து வீரர்கள் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்கள். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை செப்.2-ந்தேதி சந்திக்கிறது.

    • இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது.
    • எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஒரு அரை சதம் 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன்.


    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாநில அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி உள்ளேன். அந்த நம்பிக்கையை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் காட்டுவேன்.

    என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

    மேற்கிந்திய தீவுகளில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற செய்தது என அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்,

    ×