search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi pooram"

    • இன்று மாலைபராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதனை முன்னிட்டு பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    இன்று மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இன்று முதல் 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்

    10-வது நாள் கோவிலில் புனித தீர்த்தவாரி நடைபெறும்.

    ஆடிப்பூர கொடியேற்று விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை தினம் என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் குவிந்திருந்தனர்.

    • ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர்.
    • 25-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெற்ற போதிலும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் 16 வண்டி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் திருநாளான 18-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர். காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை கலெக்டர் ஜெயசீலன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

    வருகிற 24-ந்தேதி காலை இரட்டை தோளுக்கினியானில் வாழைக்குளத்தெரு தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    பன்னிரெண்டாம் திருநாளான 25-ந்தேதி காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தியும், மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா மற்றும் கோவில் பட்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடந்தது.
    • தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.

    4-ம் திருவிழாவில் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வீதியுலா நடந்தது. 9-ம் திருநாளான நேற்று முன்தினம் செப்புத்தேரில் அலங்கரிக்கப்பட்ட காந்திமதி அம்பாள் வீதியுலா புறப்பட்டு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

    10-ம் திருநாளான நேற்று மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசைகளுடன் ஆடிப்பூர முளைக்கட்டும் திருவிழா நடந்தது. விழாவில் அம்பாளின் மடியில் முளைக்கட்டிய தானியங்கள், பலகாரங்களை நிரப்பி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை.
    • ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    ஆடிப்பூர நாளில், வைணவத் தலங்கள் அனைத்திலும், ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தில்தான் ஆண்டாள் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை. அவர் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வார் வளர்த்த நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் தோன்றியவர். அந்த தாயாரை, அன்போடும், பண்போடும் வளர்த்து வந்த பெரியாழ்வார், தினமும் அதிகாலையில் பூக்களைப் பறித்து அதனை மாலைகளாகத் தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    அப்படி பெருமாளுக்கு கொடுத்தனுப்பும் மாலைகளை, அதற்கு முன்பாகவே அணிந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார், ஆண்டாள். பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த செயலை, ஒரு நாள் பெரியாழ்வார் பார்த்துவிட்டார். இறைவனுக்கு சாற்றும் மாலையை இப்படி அசுத்தம் செய்து விட்டாயே என்று, ஆண்டாளை கடிந்து கொண்டார். பின்னர் இறைவனிடம் மனமுருக மன்னிப்பும் கேட்டார்.

    அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், "எனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையே தர வேண்டும்" என்றார். அப்போதுதான், ஆண்டாள் சாதாரண பிள்ளை இல்லை. அவர் தெய்வக்குழந்தை என்பது பெரியாழ்வாருக்கு தெரியவந்தது. ஆண்டாள் திருமண வயதை அடைந்ததும், அவரை பெருமாளின் கட்டளைப்படி திருவரங்கம் அழைத்துச் சென்றார், பெரியாழ்வார். அங்கு அரங்கநாதரிடம் ஒளியாக கலந்து விட்டார் ஆண்டாள் நாச்சியார். திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை. இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு படைத்து வழிபட்டு, அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4-ம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதைக் கோவிலில் கொண்டு போய் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உள்பட பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும், திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாக நடைபெறும். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் அன்னை திரிபுரசுந்தரி, சுயம்பு வடிவானவள். இந்த அன்னையின் திருவடிவம், அஷ்ட கந்தகம் உள்ளிட்ட எட்டு விதமான வாசனை பொருட்களால் ஆனது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில், ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி ஆகிய 3 நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் அம்மனின் திருப்பாதத்திற்கு மட்டுமே பூஜைகள் செய்வார்கள். எனவே ஆடிப்பூரத்தில் அன்னை திரிபுரசுந்தரிக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்டு வணங்கினால் பாவம் விலகும், நன்மைகள் வந்து சேரும்.

    • ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும்.
    • அம்மனை வழிபாடு செய்தால், கேட்ட வரம் கிடைக்கும்.

    ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனையே அதிகமாக வழிபாடு செய்வார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.

    ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். வளையல்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டு, அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில் எழை, எளிய சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பதும் உண்டு. பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.

    ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுத்து ஆசிபெறுவது நல்லது. ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.

    ஆடிப்பூரமான இன்று விரதம் இருந்து ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ், ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

    திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    • இன்று காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.
    • ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த தலம் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

    இங்கு ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தையொட்டி நடக்கும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 18-ந்தேதி 5 கருட சேவை நடைபெற்றது. மேலும் திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு சீதனமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுப்புடவை, வஸ்திரம், மங்களப்பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டன. யானை முன்னே செல்ல ஸ்ரீரங்கம் பட்டு, மேல தாளங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டு தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவிலில் இருந்து வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், அருள் செல்வம், பிரதீபா, உதவி பொறியாளர் கிருஷ்ணன், பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேர் திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்துள்ளளனர்.

    • இன்று மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
    • நாளை ஸ்ரீ மங்கல மகா சண்டி ஹோமத்தின் மகாபூர்ணாகுதி நடக்கிறது.

    கொடுமுடி ஏமகண்டனூரில் பிரசித்தி பெற்ற ஆட்சி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலில் சித்திரகுப்த, சந்திரகுப்த சமேத எமதர்மராஜாவுக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்த கோவிலில் 12-ம் ஆண்டு ஆடிப்பூர மகா உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மங்கள இசை மற்றும் கணபதி யாகத்துடன் தொடங்குகிறது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவித்யாக்ரம ஆபரண பூஜை மற்றும் மகாயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 3 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு ஸ்ரீதேவி மகாத்மியம் 700 ஸ்லோகங்கள் பாராயணமும், ஸ்ரீ சதுஷ்சஷ்டி யோகினி பைரவ பைரவி பலி பூஜையும், மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் ஸ்ரீ மகா சண்டி ஹோமம், வடுக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, ஸ்ரீ அஸ்வா பூஜை மற்றும் ஸ்ரீ கஜா பூஜைகள் நடைபெறுகின்றன. 3 மணிக்கு மேல் ஸ்ரீ மங்கல மகா சண்டி ஹோமத்தின் மகாபூர்ணாகுதி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமதி ராணி பூர்ணாம்பாள் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடக்கிறது .
    • 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் வீதி உலா நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும்.

    அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடி மரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரமோற்சவம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

    விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திரு வீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடை பெறுகிறது.

    அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோவில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அதைத்தொடர்ந்து, வருகிற 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
    • தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அறம்வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி.. ஓம் சக்தி... என பக்தி முழக்கங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேரை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

    தேரானது பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தருமை ஆதீன 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி சொக்கநாத தம்பிரான் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • இன்று காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசையுடன் முளைக்கட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 12-ந்தேதி முதல் ஆடிப்பூர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-வது நாளில் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

    9-வது நாள் திருவிழாவான நேற்று காலை காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட செப்பு தேரில் எழுந்தருளினார். பின்னர் 4 ரதவீதிகளில் தேர் வலம் வந்தது. இந்த தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசையுடன் முளைக்கட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பக்தர்கள், ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
    • மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.15 மணியளவில் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் மட்டும் ஓம் சக்தி ஓம் சக்தி என பக்தி கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேரானது காலை 9.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

    இந்த விழாவில் பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மகாதேவி, வேல்விழி, வியாபார சங்க பிரமுகர்கள் மோகன், வீரப்பன், ராஜேந்திரன், சபாபதி செட்டியார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 21-ந்தேதி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது
    • 24-ந்தேதி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நடக்கிறது

    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. இந்த நிலையில் 5-வது நாளான ஆடி அமாவாசையான நேற்று காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் கோவிலில் இருந்து எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதை தொடர்ந்து பகல் 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளினார். இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 6-வது நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 7-வது நாளான நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 21-ந் தேதி அன்று அம்பாள் தேரோட்டம், 23-ந்தேதி அன்று பகல் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 29-ந்தேதி அன்று காலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×