search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

    • ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை.
    • ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    ஆடிப்பூர நாளில், வைணவத் தலங்கள் அனைத்திலும், ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தில்தான் ஆண்டாள் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை. அவர் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வார் வளர்த்த நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் தோன்றியவர். அந்த தாயாரை, அன்போடும், பண்போடும் வளர்த்து வந்த பெரியாழ்வார், தினமும் அதிகாலையில் பூக்களைப் பறித்து அதனை மாலைகளாகத் தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    அப்படி பெருமாளுக்கு கொடுத்தனுப்பும் மாலைகளை, அதற்கு முன்பாகவே அணிந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார், ஆண்டாள். பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த செயலை, ஒரு நாள் பெரியாழ்வார் பார்த்துவிட்டார். இறைவனுக்கு சாற்றும் மாலையை இப்படி அசுத்தம் செய்து விட்டாயே என்று, ஆண்டாளை கடிந்து கொண்டார். பின்னர் இறைவனிடம் மனமுருக மன்னிப்பும் கேட்டார்.

    அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், "எனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையே தர வேண்டும்" என்றார். அப்போதுதான், ஆண்டாள் சாதாரண பிள்ளை இல்லை. அவர் தெய்வக்குழந்தை என்பது பெரியாழ்வாருக்கு தெரியவந்தது. ஆண்டாள் திருமண வயதை அடைந்ததும், அவரை பெருமாளின் கட்டளைப்படி திருவரங்கம் அழைத்துச் சென்றார், பெரியாழ்வார். அங்கு அரங்கநாதரிடம் ஒளியாக கலந்து விட்டார் ஆண்டாள் நாச்சியார். திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை. இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு படைத்து வழிபட்டு, அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4-ம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதைக் கோவிலில் கொண்டு போய் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உள்பட பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும், திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாக நடைபெறும். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் அன்னை திரிபுரசுந்தரி, சுயம்பு வடிவானவள். இந்த அன்னையின் திருவடிவம், அஷ்ட கந்தகம் உள்ளிட்ட எட்டு விதமான வாசனை பொருட்களால் ஆனது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில், ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி ஆகிய 3 நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் அம்மனின் திருப்பாதத்திற்கு மட்டுமே பூஜைகள் செய்வார்கள். எனவே ஆடிப்பூரத்தில் அன்னை திரிபுரசுந்தரிக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்டு வணங்கினால் பாவம் விலகும், நன்மைகள் வந்து சேரும்.

    Next Story
    ×