search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi masam"

    ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு.

    ‘சூரிய பகவான்’ பாரம்பரியத்தைக் குறிப்பவர். பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே.

    ‘சந்திர பகவான்’ என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம்.

    ‘புத பகவான்’ - கலைகளுக்கு அதிபதி. சித்ரான்ன நிவேதனம் இவருக்கு விசேஷம்.

    ஆக, ஆடிப்பெருக்கன்று முக்கியமான இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும் ஜீவாதாரமான பயிர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

    இன்றைய தின காவிரி வழிபாட்டால் அனைவருக்கும் மேலே சொன்ன மூன்று கிரகங்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கிறது.

    என்னென்ன சீர்வரிசைப் பொருட்கள்?

    தாலிப்பொட்டு, தான் அணிந்து கொண்ட பட்டு வஸ்திரம், தான் சூடிக்களைந்த மாலை, சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் போன்றவை. பெருமாளுக்கு முன் இவை அனைத்தும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்னர் காவிரியில் சேர்த்து விடுவார்கள் பட்டாச்சார்யார்கள். இப்படி சீர்வரிசைப் பொருட்களை அர்ப்பணிக்கின்ற வேளையில் கூடி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, ‘ரங்கா... ரங்கா’ கோஷத்தை எழுப்புவார்கள்.

    ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே தன் தங்கைக்கு சீர் கொடுக்கின்ற காரணத்தால், பெரும்பாலானோர் தங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் சீர் கொடுக்கின்ற வழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இன்றைக்கும் இருந்து வருகிறது.

    வீட்டில் இருந்தபடியும்...

    காவிரிக்குச் சென்று ஆடிப்பெருக்கைக் கொண்டாட முடியவில்லையா? கவலை வேண்டாம். உங்களது இல்லங்களில் இருந்தபடியே இந்த ஆடிப்பெருக்கின் கோலாகலத்தை நீங்களும் ஆனந்தமாக அனுகலாம்.

    கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தெய்வங்களை வணங்குவதில்லையா... அதுபோலத்தான்!
    ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு காவிரி ஆற்றில் வெள்ளம் புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியே களை கட்டிவிட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று காவிரி பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா ஒப்புக்குத்தான் நடந்ததே தவிர களைகட்டவில்லை. ஏனெனில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை.

    தண்ணீருக்கு பதிலாக பாறைகளும் வெறும் மணலாகவும் காட்சியளித்தது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரி ஆறு பொங்கி வருகிறது. ஆடிப்பெருக்குக்கு ஏற்றவாறு வெள்ளம் பெருக்கு புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா முன்கூட்டியேகளை கட்டிவிட்டது.

    ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் இடங்களில் முக்கிய இடமாக கருதப்படுவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை ஆகும். பவானி, காவிரி, அமுத நதி ஆகிய மூன்று நதி கள் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை.

    இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் அமர்க்களமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.



    ஈரோடு மாவட்டம் மட்டு மல்லாமல் திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் நாளை அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிகிறார்கள். இவர்கள் பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள். புதுமண தம்பதிகள் தங்களது மணமாலையை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.

    சுமங்கலி பெண்கள் தங்கள் வாழ்க்கை நாயகன் நலமுடன் வாழ வேண்டி வணங்கி புது தாலிக்கயிறு அணிவார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்க வேண்டியும், திருமண வாழ்க்கைகை கூட வேண்டியும் வழிபடுகிறார்கள்.

    குறிப்பாக விவசாய பெருமக்கள் தங்களின் விவசாய நிலங்களை செ(கொ)ழிக்க வைக்கும் காவிரி தாயை வணங்கி மகிழ்வார்கள். இப்படி நாளை பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவை அமர்க்களமாக கொண்டாட ஒரு லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு செல்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆழமான பகுதி யில் பக்தர்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் ஓரமாக எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் ஆற்றில் பரிச லில் சென்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    ஆடி 18 பண்டிகையின்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் காவேரி அம்மனுக்கு தாய்வீட்டு சீதனங்களை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது.
    தமிழ்நாட்டில் காவிரி கரையோரத்தில் அமைந்த முதல் சிவாலயமான தேசநாதேஸ்வரர் கோவில் ஒகேனக்கல்லில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திற்குள்தான் காவிரி ஆற்றின் சிறப்பை போற்றும் வகையில் காவேரியம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி தாயே அம்மன் வடிவில் இங்கு எழுந்தருளியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

    குருச்சேத்திர போர் முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாவங்களை போக்க பஞ்சபாண்டவர்கள் கங்கை நதியில் குளித்தனர். அப்போது பாவங்கள் நீங்க கங்கையில் குளித்தால் மட்டும் போதாது, குடகு மலையில் அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடக்கும் பொன்னி நதியில் குளிக்க வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினார். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதியை விடுவிக்க வேண்டி பஞ்சபாண்டவர்கள் விநாயகரை வழிபட்டனர். இதனால் மகிழ்ந்த விநாயகர் காக்கை வடிவில் குடகுமலைக்கு சென்று அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதிநீரை தென்திசை நோக்கி தள்ளிவிட்டார்.

    இந்த பொன்னி நதிநீர் வேகமாக ஓடி ஒகேனக்கல்லில் அஷ்வமேத யாகம் செய்து கொண்டிருந்த பிரம்மாவின் யாக குண்டத்தில் விழுந்து அருவிகளாக துள்ளிக்குதித்தது. தென்னாடு செழிக்க உருவான இந்த நதிக்கு காவிரி என்று அகத்திய மாமுனிவர் பெயர் சூட்டினார். பொன்னி நதி, காவிரி என்று பெயர் பெற்ற இடமான ஒகேனக்கல்லில் ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை பிரம்மதேவர் தினமும் வழிபட்ட இடம்தான் தற்போது ஒகேனக்கல்லில் தேசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடமாகும்.

    ஒகேனக்கல் ‘மத்திய ரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அகத்தியர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடத்தில் 13-ம் நூற்றாண்டில் தேசநாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இந்த கோவிலை சிறப்பான முறையில் பராமரித்தனர். காவிரி ஆறு உருவானது தொடர்பான புராணத்தில் விநாயகருக்கு முக்கிய இடம் உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி ‘கணேச தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு குளித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேசநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு பிரம்மா பூஜைகள் செய்து வழிபட்டதாகவும், இதனால் இந்த கோவில் ‘தென்னகத்தின் காசி’ என பொருள்படும் ‘தட்சிணகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது. தேசநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் காவேரி அம்மனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒகேனக்கல் தவிர வேறு எங்கும் காவிரித்தாய்க்கு தனிக்கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மலையில் பெண் குழந்தை போன்ற வடிவில் உள்ள காவிரி அம்மன், ஒகேனக்கல்லில் உள்ள கோவிலில் குமரி பெண்ணாக 3½ அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு வந்து வணங்குபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும், குழந்தை பேறு உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பல வகையான தோஷபரிகாரங்கள் மற்றும் கடன் தொந்தரவுகள் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    குருச்சேத்திர போரில் பயன்படுத்திய ஆயுதங்களை பாண்டவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழுவி பாவங்கள் போக நீராடிய நாள் ஆடி மாதம் 18-ம் நாள் என்று கூறப்படுகிறது. இதனால் ஆடி 18 பண்டிகையின்போது காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடக்கிறது. அப்போது காவிரி ஆறு உற்பத்தியாகும் இடமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு தாய்வீட்டு சீதனமாக அரிசி, பருப்பு, வளையல், புடவை, ரவிக்கை மற்றும் அச்சுவெல்லம் ஆகியவற்றை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. 
    கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் களை கட்டும். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.
    விவசாயத்தை செழித் தோங்க வைத்து தமிழக மக்களை வாழ வைக்கும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழாக்கள் நடந்தாலும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டா டப்படும்.

    நதிக்கரைகளில் வாழும் மக்கள் தங்களை வாழ வைக்கும் நதிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் படித்துறைகளில் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு ஆகியவைகளை வைத்து தண்ணீருக்கு பூஜை செய்து மஞ்சள் கயிறை அணிந்து கொள்வார்கள்.

    இது போல புது மண தம்பதியர் அன்றைய தினம் காவிரி கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக்கயிறு மாற்றி திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள். இதனால் மேட்டூர் அணை முதல் காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

    மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் போது காவரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இருக்கும், இதனால் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெறும்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் உரிய நேரத்தில் திறக்கப்பட வில்லை. ஆனால் மேட்டூர் அணையில் இருந்து ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாட 2 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.

    இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தை கடக்காது. இதனால் கடந்த சில வருடங்களாக ஆடிப்பெருக்கு விழா தண்ணீரின்றி களையிழந்து காணப்பட்டது. ஆடிப்பெருக்கு அன்று கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் இறைத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் புனித நீராடினர்.

    கடந்த 2007-ம் ஆண்டு ஆடிப்பண்டிகைக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    அணை நிரம்பிய தையடுத்து இந்தாண்டு ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரியின் மற்றும் கிளை ஆறுகளிலும் கடை மடை பகுதி வரை சென்றுள்ளது.

    இதனால் கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் களை கட்டும். இதனால் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.

    இதையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றிலும் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து புனித நீராடுவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    மேலும் ஆடிப்பெருக்கு விழா அன்று மேட்டூர் காவிரியில் பக்தர்கள் அதிகம் குளிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    பிரம்மோற்சவத்தையொட்டி சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 20-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் கீழத்தெரு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கீழத்தெரு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், பால்காவடி எடுத்தும், பாடை பிரார்த்தனை செய்தும், அக்னி சட்டி எடுத்தும் மாரியம்மனை வழிபட்டனர்.



    சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து உடலில் அலகு குத்தி பக்தர்கள், பறக்கும் காவடி எடுத்து கோவிலுக்கு வந்து மாரியம்மனை வழிபட்டனர். இதையடுத்து கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. பாலமான் வாய்க்காலில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கரகம் எடுத்து வந்த பக்தர் முதலில் தீக்குண்டத்தில் இறங்கினார். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமாவீராசாமி, பரம்பரை அறங்காவலர் ஸ்தானிகர் கலியமூர்த்தி பிள்ளை மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தீமிதி நிகழ்ச்சியையொட்டி சிதம்பரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது சிதம்பரம் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக வெளியூர்களில் இருந்து வந்த அனைத்து பஸ்களும் கீழவீதி, தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. 
    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை பார்க்கலாம்.
    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது.

    இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து, பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மை அறியாமல் நம் மனம் மாங்காடுக்கு நம்மை செலுத்தும்.
    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது.

    மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாறு வருமாறு:-

    ஒரு சமயம் கயிலை மலையிலே தனித்திருக்கும் போது அன்னை விளையாட்டாக ஈசனின் கண்களை பொத்த, அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது.

    இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.

    இறைவனின் ஆணைப்படி அம்மன் பூலோகத்தில் மாங்காடுப்பதியிலே வந்து அவதரித்தாள்.மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரியத் தவக் கோலம் பூண்டாள்.

    இதனால் அம்மை இத்தலத்திலே “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள். ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.

    அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் ஈசன் கூறினார். அம்மை , தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் தவித்தார்கள்.

    அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கரர் மாங்காடுக்கு வந்தார். மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன “அஷ்ட கந்தம்” அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது. இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய பிரதானம். குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன. தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான “ஆதி காமாட்சி” அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு. அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது.



    குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாக மாங்காடு தலம் திகழ்கிறது. திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

    தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.
    இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது. புற்றுருவில் இருந்த அம்மன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

    இந்த கோவில் சுமார் 4500 சதுர அடி பரப்பளவு கொண்டது. கோபுர வாசலை கடந்ததும் இடது பக்கம் வரசித்தி விநாயகர் உள்ளார். அவரை வணங்கி உள்ளே சென்றால், முருகரையும் ஆதிசங்கரரையும் வழிபடலாம். சூரியன், பைரவர், மேலும் ஒரு விநாயகரை தரிசித்த பின் துவார பாலகர் நின்றிருக்கும் வழியாக சென்றால் சபா மண்டபத்தை அடையலாம். தவம் செய்யும் காமாட்சி அம்மன் சன்னதி தனியாக உள்ளது. கருவறையில் ஸ்ரீசக்ரம் கூர்ம ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    உள் பிரகாரத்தில் இருந்து வெளிப் பிரகாரத்திற்கு வந்தால் கணபதியையும் சண்டியையும் தரிசனம் செய்யலாம். பல இடங்களில் அனுமன் உருவங்கள் படைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நவகன்னிகை சன்னதி சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவம் இருந்த போது இந்த நவ கன்னிகைகள்தான் காவல் புரிந்தனர்.
    இவர்களை வழிபட்டால் உடல் உபாதைகள் நீங்கி சுகபோகம் உண்டாகும். கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது. பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம்.

    ஒரு குறை நீங்க வேண்டும், அல்லது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையை உடையவர்கள், அருள்மிகு காமாட்சி அம்மனின் ஆலயத்திற்குத் தொடர்ந்து ஆறுவார காலம் அவர்களுக்கு ஏற்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கிழமையிலே சென்று வரவேண்டும். முதல்வாரத்திலே கையில் இரண்டு எலுமிச்சம் பழங்கள் எடுத்துச் சென்று அவற்றுள் ஒன்றைக் கோவிலில் விட்டு விட்டு மற்றொன்றை வீட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

    வீட்டில் ஒருவார காலம் அதற்கு சந்தனம், புஷ்பம், தூபம், தீபம் ஏதேனும் ஒரு சிறு நைவேத்தியம் ஆகிய உபசாரங்களைச் செய்து, எட்டாம் நாளன்று அதனையும், அதனோடு மேற்கொண்டு இரண்டு புதிய எலுமிச்சம் பழங்களையும் மாங்காட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். அந்தப் பழைய பழத்தையும், புதிய பழத்தில் ஒன்றையும் கோவிலிலே கொடுத்துவிட்டு, மற்றொரு புதிய பழத்தை வீட்டுக்கு எடுத்து வந்து, அதை முன் போலவே நாள்தோறும் ஒருவார காலம் பூஜை செய்ய வேண்டும்.

    இப்படியே வாராவாரம் ஒரு பழைய பழமும், இரண்டு புதிய பழங்களும் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அவற்றுள் ஒரு புதிய பழத்தை மட்டும் வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை செய்ய வேண்டும். ஐந்து வாரகாலம் இப்படிப் பூஜை செய்த பிறகு, ஆறாவது வாரத்தில் பழைய பழம் ஒன்றை மட்டும் கொண்டு போய்க் கோவிலில் கொடுத்துவிட வேண்டும். அப்போது புதிய பழம் எதுவும் கொண்டு போக வேண்டியதில்லை.

    அதற்குப் பதிலாக, ஒரு லிட்டர் பசுவின் பாலைச் சர்க்கரை அல்லது கற்கண்டு போட்டுக் காய்ச்சிக் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் கொஞ்சம் சுத்தமான தேனும் கொண்டு செல்ல வேண்டும்.கோவில் அர்ச்சகர்கள் அந்தத் தேனைப் பாலோடு கலந்து அம்பிகைக்கு நிவேதனம் செய்து, அந்தப் பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். பக்தர்கள் அந்தப் பாலைப் பருகி மகிழும்போது, அம்பிகையும் உளம்மகிழ்ந்து நமது கோரிக்கைகளை இனிதே நிறைவேற்றி வைக்கிறாள்.

    ஆடிப்பூரம் திருவிழா :

    மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் விழா மிகப்பிரதானமான விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு 1008 கலச ஸ்தாபனத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதல்கால பூஜை நடக்கிறது.
    மறுநாள் (12-ந்தேதி) இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால பூஜை, விசேஷ ஹோமம், மகா பூர்ணஹு நடத்தப்படுகிறது. காலை 7.00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6.00 மணிக்கு காமதேனு வாகனத்தில் காமாட்சி அம்மன் மாட வீதிஉலா நடைபெறும்.
    திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலேபோதும் குறைகள் மறைந்து விடுகின்றன. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள ஆடி திருவிழா நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளலாம்.
    திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இதனால் அந்த பகுதியை வேலங்காடு என்று அழைத்தனர். அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது. பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.

    கடந்த நூற்றாண்டில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது. இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது. புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று, அன்னையை அடிபணிவோருக்கு அபயம் அளிக்கிறது. புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

    அன்னை காட்சி தரும் கர்ப்பக்கிரகத்தில் பதிவிளக்கு என்னும் அணையா விளக்கு, அது ஏற்றப்பட்ட நாளில் இருந்து எரிந்து கொண்டே இருக்கிறது. நெய்யால் எரியும் இந்த விளக்கின் சுடரொளியில், அன்னையின் இரு வடிவங்களும் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.

    சிரசு மட்டும் காட்டும் உக்கிர நாராயணியின் கண்கள் ஒழுக்கம் இல்லாதவர்களை மிரட்டுகின்றன. நல்லவருக்கு அபயமளிக்கின்றன. சிலை வடிவமான கருமாரி காண்போர் கருத்தைக் கவரும் விதத்தில் அழகுற காட்சி தருகிறாள். மேல் வலது கரத்தில் உடுக்கையும் பாம்பும். மேல் இடது கரத்தில் திருசூலம். கீழ் வலது கரத்தில் கத்தி, கீழ் இடதுகரத்தில் அமுத கலசம் ஏந்தியுள்ளாள்.

    ஒரு காலத்தில் மண்டையோட்டு மாலை தவழ்ந்த அன்னையின் மார்பில், இப்போது எலுமிச்சை மாலை அணிவிக்கப்படுகிறது. உதட்டில் சிறு புன்னகை. கிழக்கு நோக்கும் கருமாரி! கண் மூடி வணங்கி நின்றால் உடலில் சிலிர்ப்பு ஓடுகிறது. மனதில் அமைதி நிலவுகிறது.

    திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலேபோதும் குறைகள் மறைந்து விடுகின்றன. அம்மனின் திருச்சாம்பலைப் பெற்றுச்சென்றாலே தங்கள் வாழ்வில் அதன்பின் ஏற்படும் மாற்றங்களை அவர்களே உணரத்தொடங்கி விடுகிறார்கள்.

    அம்மனிடம் வாய்விட்டுச் சொல்லாமல் அவர்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருளுகிறாள். அம்மனிடம் மனமுருகித்தாயே நீ காத்து நில் என்று வேண்டினாள் போதும், மலைபோல் வரும் துயர் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பனிபோல், நீங்கி விடுகிறது.

    கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமையும்.
    மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்றுள்ளனர். தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

    இத்தகைய சிறப்புடைய திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆனி கடைசி ஞாயிறு முதல் 12 வாரங்கள் தொடர்ந்து அன்னை கருமாரிக்கு ஆடிப் பெருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 1008 பால் அபிஷேகம், நவகலசம், சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புற்றலங்காரம், 108 பால் குடம், படையல் போன்றவையும் தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.

    ஞாயிறு காலை மற்றும் மாலை நேரங்களில் சொற்பொழிவு, இன்னிசை பரதநாட்டிய கச்சேரிகள் நடைபெறும். ஒன்பதாம் ஞாயிறு காலை தேர் உலா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    கடந்த 17-ந்தேதி முதல் வார ஆடி நிகழ்ச்சிகள் நடந்தது. அடுத்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
    ஜூலை 31-ந்தேதி-: ஆடி 3-வது செவ்வாய்க்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 3-ந்தேதி-: ஆடி 3-வது வெள்ளிக்கிழமை, காலை 11 மணி - நவக வசம்(கட்டளை)
     ஆகஸ்டு 5-ந்தேதி-: ஆடி 3-வது ஞயிற்றுக்கிழமை, காலை11மணி - 108 குடம் தயிர் அபிஷேகம், 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 7-ந்தேதி-: ஆடி 4-வது செவ்வாய்க்கிழமை, காலை 11 மணி - நவ கலச அபிஷேகம்.

    ஆகஸ்டு 10-ந்தேதி-: ஆடி 4-வது வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி - ஒரு கவசம், 6 வருடை அலங்காரம்.
    ஆகஸ்டு 11-ந்தேதி-: ஆடி அமாவாசை (சனிக்கிழமை), மாலை 6 மணி - சந்தனக் காப்பு முழு படையல்.
    ஆகஸ்டு 12-ந்தேதி-: ஆடி 4-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணி - 108 குடம் பஞ் சாமிருத அபிஷேகம்.
    ஆகஸ்டு 13-ந்தேதி-: ஆடிபூரம், காலை 6 மணி - சந்தனகாப்பு அலங்காரம், இரவு 8 மணி - வீதி உலா.
    ஆகஸ்டு 14-ந்தேதி: ஆடி 5-வது செவ்வாய்க் கிழமை, மாலை 6 மணி - சந்தன காப்பு.

    ஆகஸ்டு 17-ந்தேதி-: ஆடி 5-வது வெள்ளிக் கிழமை, காலை 11 மணி - தங்க கவச அலங்காரம்.
    ஆகஸ்டு 19-ந்தேதி-: ஆடி 5-வது ஞாயிற்றுக் கிழமை, மாலை 6 மணி - 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 21-ந்தேதி-: ஆடி 6-வது செவ்வாய்க்கிழமை, காலை 11 மணி - புற்று அலங்காரம்
    ஆகஸ்டு 24-ந்தேதி-: ஆடி 6-வது வெள்ளிக் கிழமை மற்றும் வரலட்சுமி விரதம், காலை 5 மணி - 108 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு26-ந்தேதி-: ஆடி 6-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணிக்கு 1008 சங்காபிஷேகம்.

    ஆகஸ்டு 28-ந்தேதி-: ஆடி 7-வது செவ் வாய்க்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 31-ந்தேதி-: ஆடி 7-வது வெள்ளிக்கிழமை, காலை 11 மணி - தங்க கவசம் முழு படையல்.
    செப். 2-ந்தேதி-: ஆடி 7-வது ஞாயிற்றுக் கிழமை மற்றும் கோகுலாஷ்டமி, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    செப். 4-ந்தேதி-: ஆடி 8-வது செவ்வாய்க் கிழமை, மாலை 6 மணி - மஞ்சள் காப்பு.
    செப். 7-ந்தேதி -:ஆடி 8-வது வெள்ளிக் கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபி ஷேகம்.

    செப்.9-ந்தேதி-: ஆடி 8-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி-108 இளநீர் அபி ஷேகம்.
    செப். 11-ந்தேதி-: ஆடி 9-வது செவ்வாய்க் கிழமை, மாலை 3 மணி - துர்க்கை அபி ஷேகம்.
    செப்.13-ந்தேதி-: சதுர்த்தி விழா, காலை 9 மணி - மூஷிக வாகனத்தில் வீதி உலா.
    செப். 14-ந்தேதி-: ஆடி 9-வது வெள்ளிக் கிழமை, மாலை 6 மணி - சந்தன காப்பு.
    செப்.16-ந்தேதி-: ஆடி 9-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 7 மணி - தேரோட்டம்.

    செப். 18-ந்தேதி-: ஆடி 10-வது செவ் வாய்க்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    செப். 21-ந்தேதி-: ஆடி 10-வது வெள்ளிக்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    செப். 23-ந்தேதி-: ஆடி 10-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி - 108 குடம் மஞ்சள் அபிஷேகம்.
    செப். 24-ந்தேதி-: நிறைமணி காட்சி ஆரம்பம்.
    செப். 25-ந்தேதி-: ஆடி 11-வது செவ்வாய்க் கிழமை, இரவு 7 மணி - ஆஞ்சநேயர் வடை மாலை.

    செப். 26-ந்தேதி: நிறைமணி காட்சி நிறைவு
    செப்.28-ந்தேதி-: ஆடி 11-வது வெள்ளிக் கிழமை காலை 5 மணி - 108 சங்காபிஷேகம்
    செப். 30-ந்தேதி-: ஆடி 11- வது ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணி - 108 குடம் கனிகள் அபிஷேகம்.
    அக்.3-ந்தேதி-: ஆடி 12-வது செவ்வாய்க் கிழமை காலை 11 மணி - தங்ககவசம்.

    அக். 5-ந்தேதி-: ஆடி 12-வது வெள்ளிக்கிழமை காலை 5 மணி - 108 சங்காபிஷேகம்.
    அக்.7-ந்தேதி-: ஆடி 12-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி - 108 மலர் அபிஷேகம்
    இரவு 7 மணி - அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா.
    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிமாத 2-வது வெள்ளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்,வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமை என்பதாலும், பவுர்ணமி என்பதாலும், ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதாலும் காலை 5 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும் பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் வணங்கினர்.

    சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து அம்மனை பயபக்தி யுடன் வணங்கினர். பக்தர் களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் உள்ள சின்னாண்டவர், பெரியாண்டவர் கொடிமரம் முன்பாக பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விசாலாட்சி அம்பாள், துர்க்கை அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன. இதில் திருப்பைஞ்சீலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதே போல் திருப்பைஞ்சீலி வனத்தாய் அம்மன் கோவில், இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காவிரியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மதுரை காளியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மதுரைவீரன், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவ அம்மனுக்கு 108 புடவைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற பவுர்ணமி பூஜையில் தொட்டியம், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். 
    திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
    நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான். அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்கு ஆகாதே என்றார்.

    காலையில் பூசை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரமளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான்.

    தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றினான். அவன் எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள்.

    அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை. அவன் லிங்கத்தைக் கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது.- அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.

    அதன்படி மகாவிஷ்ணு ஈஸ்வரியை அழைத்து அசுரனை கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பெரிய உருவம் எடுத்து மகாவிஷ்ணு யோசனைப்படி வக்கிர துர்முகியை அழித்து பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    வக்கிரசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்குமுகமான காளியின் எதிரில் வக்கிரசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும் இது. திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 
    சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த பவுர்ணமி நாளில் தான் வருகின்றன.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள் ஆடித்தபசு. ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை.

    திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர், ஆடிப் பவுர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.

    வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். திருமால், குதிரை முகத்துடன் ஹயக்ரீ வராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப் பவுர்ணமி. 
    வெக்காளி அம்மன் போர்க்கோலம் துறந்து சுகாசனத்தில் இருந்தாலும் அசுரத்தனம் வளராமல் இவள் பாதத்திலேயே உள்ளது என்பதை அசுரன் இடது காலில் இருப்பதைக் காட்டுகிறது.
    திருச்சி உறையூரில் உலக மக்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளி அம்மன் ஆலயம் உள்ளது. “வெக்காளி” என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? வெம்+காளி=வெக்காளி

    வெம்= வெம்மை, விருப்பம் மற்றும் வெயில் முதலிய மூன்று பொருள்களும் தருவதாகும். மங்கலப் பொருள் முழுவதும் தருபவள் வெக்காளியே ஆவாள்.

    கடவுளுக்கு திருவாசி என்பதைப் பிரபை என்று கூறுவர். ஒளிச்சுடரே பிரபையாகும். காலத்தை காட்டும் சூரிய சந்திரரும் இதில் அடங்குவர். எனவே, திருவாசி என்பது மாறிமாறி வரும் கால சக்தியைக் குறிப்பதாகும். தீச்சுடராகவே இருந்து என்றும் புதுமைகளை உண்டாக்குகிறாள் என்பது வெக்காளியின் திருவாசியாகும்.

    திருமுகம் அசுரர்களைப் பகைவரைத் தீமைகளை நோய் நொடிகளை அச்சுறுத்தி அகற்றுவதற்காக விழிகள் பிதுங்க விழித்தும் கோரப்பற்கள் தெரிய நிற்பதும் ஆகும்.



    அன்பர்க்கு அவர்களின் நெஞ்சில் இவள் மிக அழகிய வடிவுடனும் புன்னகையுடனும் மலர்ந்த விழியுடனும் காட்சியளிக்கிறாள். கைகளில் வலது மேற்கையில் உடுக்கை (டமருகம்) உள்ளது. இது ஒலியின் மூல உலகத்தைப் படைத்ததைக் குறிக்கும். இடது மேற்கையில் பாசம் உயிர்களைத் தன்வயப்படுத்தவும் அவர்களுடன் உறவு கொள்ளவும் அமைந்ததாகும்.

    வலது கீழ்க்கை திரிசூலம் பகைவரை அழிக்கும் கருவியாகவும் இவளே மும்மூர்த்தியையும் நியமிக்கிறவள் என்பதை குறிக்கும். திரிபுரமான அறிவையும் குறிக்கும். இடது கீழ்க்கையில் கபாலம் உள்ளது. யுகயுகாந்திரங்களாக வாழ்ந்து மறைந்த பிரம்மன் முதலியவர்களின் கபாலயங்களையும் எரியக் கண்டவள் இவள். ஆகவே இவள் அழிய மாட்டாள் என்பதைக் குறிக்கும். மங்கலமாகக் குங்குமமும் ஆயுள் வளர்ச்சியையும் அளிப்பது இக்கடவுளே என்பதைக் குறிக்கும். வலது கால் மடித்து இடது காலை ஊன்றியது சுகாசனம் ஆகும். இவள் இவ்வாறு இருப்பதால் யாவர்க்கும் சுகமே பிரசாதம் என்பதாகும்.

    வெக்காளி அம்மன் போர்க்கோலம் துறந்து சுகாசனத்தில் இருந்தாலும் அசுரத்தனம் வளராமல் இவள் பாதத்திலேயே உள்ளது என்பதை அசுரன் இடது காலில் இருப்பதைக் காட்டுகிறது.

    நான்கு கைகளும் நான்கு யுகங்களும் நான்கு திசைகளையும் நான்கு வேதங்களையும் குறிப்பதாகும். உடலில் பாம்பு இருப்பது பிரபஞ்சகுண்டலினி சக்தியைக் குறிக்கும். எல்லா உயிர்களிலும் உலகப் படைப்பிலும் இயக்கமாக இருப்பது குண்டலினி சக்தியாகும். அதைத்தான் கண்காணிப்பில் வைத்திருப்பதே பாம்புகள் அணிவதாகும்.

    காளி என்ற சொல்லிற்கு கரிய நிறம் உடையவள் என்பது பொருளானாலும், அது இருளில் வலிமை கொண்ட அசுரனை அழிக்கும் போதுள்ள நிறமாகும். மங்கலம் தரும் அமைதி நேரத்தில் அவளே சிவந்த நிறம் உடையவள் ஆவாள். உடுக்கை, திரிசூலம், பாசம், கபாலம், இவை கொண்டு இவள் பிரம்மமாகிய பரம்பொருள் வடிவம் என்பதை உணரலாம். எனவே வெக்காளி அம்மனை வழிபட்டால் நீங்கள் கேட்டதை எல்லாம் தந்து அருள்வாள்.
    ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான்.
    ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் அந்த மாதம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காணப்படும்.

    ஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம் என்று சொல்வார்கள். சிலர் அம்பிகை தனது அருள்ஒளியை முழுமையாக பரிபூரணமாக தரும் மாதம் என்று சொல்வார்கள். அதனால்தான் ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது.

    ஆடி மாதத்தில் ஆலய வழிபாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான். எனவேதான் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெண்கள் அதிக அளவில் ஆலயம் வருவதை காண முடியும்.

    ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும். நமது வாழ்வியல் நெறிகளோடும் முறைகளோடும் ஆடி மாதத்து அம்மன் விழாக்கள் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி காலத்தில் இருந்து இன்று வரை ஆடி மாத விழாக்கள் பெண்களின் வாழ்க்கையுடன் இரண்டற பின்னிப் பிணைந்துள்ளது.

    அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி... பராசக்தி” என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

    சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள்.உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

    “ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டார்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
    எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும். வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.



    குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம். வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமிபட்டர்.

    லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லோருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப் படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

    இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?

    அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் நாளை மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.

    அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள். அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும்.

    அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும். பெரும்பாலான கோவில்களில் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ்வார்த்து படைத்து பிறகு அதை பக்தர்களுக்கு தானமாக விநியோகம் செய்வார்கள். இந்த சடங்குக்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது.

    கேட்டதை எல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமத்கனி முனிவர் வளர்த்து வந்தார். அவரிடமிருந்து அதை அபகரிக்க கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் திட்டமிட்டனர். அவர்கள் ஜமத்கனி முனிவரிடம் சென்று காமதேனு பசுவை தங்களிடம் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதனால் ஜமத்கனி முனிவரை கொன்று விட்டு காமதேனு பசுவை கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் கடத்தி சென்றனர். ஜமத்கனி முனிவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினார். அம்பிகையின் மறுஉருவமான ரேணுகாதேவி தீயின் நடுவில் குதித்ததை கண்ட வருணபகவான் மழை பொழிந்து ரேணுகாதேவியை காப்பாற்றினார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ரேணுகாதேவி உயிர் தப்பினார்.

    உடலில் ஏற்பட்ட தீ கொப்புளங்களை மறைக்க உடல் முழுவதும் வேப்ப இலையை சுற்றிக் கொண்டார். இந்த நிலையில் ஒரு ஊருக்குள் சென்ற அவர் பசியை போக்க உணவு கேட்டார். அந்த கிராமத்து மக்கள் ரேணுகாதேவிக்கு பச்சரிசி, வெல்லம், காய்கறி, இளநீர் கொடுத்தனர். அதை வைத்து ரேணுகாதேவி கூழ் காய்ச்சி குடித்து பசி ஆறினார்.

    இந்த வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்தான் தற்போது அம்மன் ஆலயங்களில் கூழ்வார்த்தல் நடத்தப்படுகிறது. தற்போது இந்த கஞ்சியை யாரும் முறையாக வைப்பதில்லை. ஆடி காற்றில் தூசு பறக்கும் என்பதால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் கஞ்சி வைப்பார்கள்.

    அம்பிகைக்கு முருங்கை கீரை, தண்டு கீரை ஆகியவையும் மிகவும் பிடிக்கும் என்பார்கள். எனவே ஆடி மாதத்து அம்மன் படையலில் இந்த 2 கீரைகளையும் தவறாமல் இடம் பெற செய்வார்கள். சில ஊர்களில் கூழ் தயார் செய்த பிறகு கருவாட்டு குழம்பையும் அதனுடன் வைத்து படைப்பார்கள். இவை அனைத்தையும் செய்வது பெண்கள்தான் என்பதால் ஆடி மாதத்து கூழ்வார்த்தல் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.
    ×