search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாங்காடு காமாட்சிக்கு 1008 கலச அபிஷேகம்
    X

    மாங்காடு காமாட்சிக்கு 1008 கலச அபிஷேகம்

    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை பார்க்கலாம்.
    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது.

    இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து, பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மை அறியாமல் நம் மனம் மாங்காடுக்கு நம்மை செலுத்தும்.
    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது.

    மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாறு வருமாறு:-

    ஒரு சமயம் கயிலை மலையிலே தனித்திருக்கும் போது அன்னை விளையாட்டாக ஈசனின் கண்களை பொத்த, அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது.

    இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.

    இறைவனின் ஆணைப்படி அம்மன் பூலோகத்தில் மாங்காடுப்பதியிலே வந்து அவதரித்தாள்.மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரியத் தவக் கோலம் பூண்டாள்.

    இதனால் அம்மை இத்தலத்திலே “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள். ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.

    அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் ஈசன் கூறினார். அம்மை , தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் தவித்தார்கள்.

    அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கரர் மாங்காடுக்கு வந்தார். மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன “அஷ்ட கந்தம்” அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது. இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய பிரதானம். குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன. தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான “ஆதி காமாட்சி” அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு. அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது.



    குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாக மாங்காடு தலம் திகழ்கிறது. திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

    தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.
    இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது. புற்றுருவில் இருந்த அம்மன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

    இந்த கோவில் சுமார் 4500 சதுர அடி பரப்பளவு கொண்டது. கோபுர வாசலை கடந்ததும் இடது பக்கம் வரசித்தி விநாயகர் உள்ளார். அவரை வணங்கி உள்ளே சென்றால், முருகரையும் ஆதிசங்கரரையும் வழிபடலாம். சூரியன், பைரவர், மேலும் ஒரு விநாயகரை தரிசித்த பின் துவார பாலகர் நின்றிருக்கும் வழியாக சென்றால் சபா மண்டபத்தை அடையலாம். தவம் செய்யும் காமாட்சி அம்மன் சன்னதி தனியாக உள்ளது. கருவறையில் ஸ்ரீசக்ரம் கூர்ம ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    உள் பிரகாரத்தில் இருந்து வெளிப் பிரகாரத்திற்கு வந்தால் கணபதியையும் சண்டியையும் தரிசனம் செய்யலாம். பல இடங்களில் அனுமன் உருவங்கள் படைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நவகன்னிகை சன்னதி சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவம் இருந்த போது இந்த நவ கன்னிகைகள்தான் காவல் புரிந்தனர்.
    இவர்களை வழிபட்டால் உடல் உபாதைகள் நீங்கி சுகபோகம் உண்டாகும். கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது. பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம்.

    ஒரு குறை நீங்க வேண்டும், அல்லது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையை உடையவர்கள், அருள்மிகு காமாட்சி அம்மனின் ஆலயத்திற்குத் தொடர்ந்து ஆறுவார காலம் அவர்களுக்கு ஏற்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கிழமையிலே சென்று வரவேண்டும். முதல்வாரத்திலே கையில் இரண்டு எலுமிச்சம் பழங்கள் எடுத்துச் சென்று அவற்றுள் ஒன்றைக் கோவிலில் விட்டு விட்டு மற்றொன்றை வீட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

    வீட்டில் ஒருவார காலம் அதற்கு சந்தனம், புஷ்பம், தூபம், தீபம் ஏதேனும் ஒரு சிறு நைவேத்தியம் ஆகிய உபசாரங்களைச் செய்து, எட்டாம் நாளன்று அதனையும், அதனோடு மேற்கொண்டு இரண்டு புதிய எலுமிச்சம் பழங்களையும் மாங்காட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். அந்தப் பழைய பழத்தையும், புதிய பழத்தில் ஒன்றையும் கோவிலிலே கொடுத்துவிட்டு, மற்றொரு புதிய பழத்தை வீட்டுக்கு எடுத்து வந்து, அதை முன் போலவே நாள்தோறும் ஒருவார காலம் பூஜை செய்ய வேண்டும்.

    இப்படியே வாராவாரம் ஒரு பழைய பழமும், இரண்டு புதிய பழங்களும் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அவற்றுள் ஒரு புதிய பழத்தை மட்டும் வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை செய்ய வேண்டும். ஐந்து வாரகாலம் இப்படிப் பூஜை செய்த பிறகு, ஆறாவது வாரத்தில் பழைய பழம் ஒன்றை மட்டும் கொண்டு போய்க் கோவிலில் கொடுத்துவிட வேண்டும். அப்போது புதிய பழம் எதுவும் கொண்டு போக வேண்டியதில்லை.

    அதற்குப் பதிலாக, ஒரு லிட்டர் பசுவின் பாலைச் சர்க்கரை அல்லது கற்கண்டு போட்டுக் காய்ச்சிக் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் கொஞ்சம் சுத்தமான தேனும் கொண்டு செல்ல வேண்டும்.கோவில் அர்ச்சகர்கள் அந்தத் தேனைப் பாலோடு கலந்து அம்பிகைக்கு நிவேதனம் செய்து, அந்தப் பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். பக்தர்கள் அந்தப் பாலைப் பருகி மகிழும்போது, அம்பிகையும் உளம்மகிழ்ந்து நமது கோரிக்கைகளை இனிதே நிறைவேற்றி வைக்கிறாள்.

    ஆடிப்பூரம் திருவிழா :

    மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் விழா மிகப்பிரதானமான விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு 1008 கலச ஸ்தாபனத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதல்கால பூஜை நடக்கிறது.
    மறுநாள் (12-ந்தேதி) இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால பூஜை, விசேஷ ஹோமம், மகா பூர்ணஹு நடத்தப்படுகிறது. காலை 7.00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6.00 மணிக்கு காமதேனு வாகனத்தில் காமாட்சி அம்மன் மாட வீதிஉலா நடைபெறும்.
    Next Story
    ×