search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth death"

    • பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி (வயது29). இவரும், இவரது நண்பர் செல்வ மாரியப்பன் என்பவரும் கடந்த 24-ந்தேதி இரவு கோவில்பட்டி வசந்த் நகர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்நிலையில் போதையில் இருந்த மந்திர மூர்த்தியும், அவரது நண்பர் செல்வ மாரியப்பனும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருவரும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில் மந்திர மூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். செல்வ மாரியப்பன் லேசான காயம் அடைந்துள்ளார்.

    அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த மந்திர மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
    • 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
    • அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர்.

    இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு (வயது 26). இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

    இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை.
    • தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஷேக் அக்மல் என்ற இளைஞர் (22 வயது) வசித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக ஜிம்முக்கு சென்று வந்துள்ளார். நேற்று அதிகாலை வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று விட்டு மீண்டும் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

    அப்போது குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார் ஷேக் அக்மல். இதனை குடியிருப்பில் இருந்த நபர் பார்த்தும், பார்க்காதது போல் இருந்தது மட்டுமல்லாமல் ஷேக் அக்மலை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. மனிதத் தவறால் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம் என்ற போதும், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த நபரை காப்பாற்றாமல் தண்ணீர் தொட்டியை மூடிச்சென்ற அந்த நபரின் செயல் மனிதநேயம் குறித்து பல்வேறு கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது.

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஷேக் அக்மல் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இளைஞரை காப்பாற்றாமல், தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.

    சரவணம்பட்டி:

    கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் கிஷோர் (வயது22). கிஷோர் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் கிஷோரை கோவை அருகே கோவில்பாளையத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் அடிக்கடி அதிக அளவில் கூச்சல் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று கிஷோர் தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு அதிக அளவில் கூச்சல் போட்டுள்ளார். அங்கிருந்த வார்டன் சொல்லி பார்த்தும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து அங்கு பணியில் இருந்த காப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் மனநல ஆலோசகர் பிரசன்னராஜ் ஆகியோர் அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் டேப் மற்றும் துணியால் கட்டியுள்ளனர். இதில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    இதனால் அதிர்ச்சியான அவர்கள், அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கிஷோர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் போதை மறுவாழ்வு மைய வார்டனான ஆலாந்துறையை சேர்ந்த அரவிந்த்சாமி, திருப்பூர் சூசைபுரத்தை சேர்ந்த உளவியல் நிபுணர் பிரசன்னராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூக்கந்தரூபன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் பூக்கந்தரூபன் (வயது29). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் நேற்று மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார்.

    அப்போது, அவர் கையில் கூலித் தொழிலாளி அனைவருக்கும் அரசு வேலை வேண்டும் என்று பதாகையை பிடித்தபடி நின்றார். பின்னர் அவர் திடீரென நான்கு வழிச்சாலை ஓரத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் அவரது உடல் முழுவதும் தீயில் கருகியது. உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் பூக்கந்தரூபன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்து ,சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
    • இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    குரும்பூர்:

    நெல்லை மாவட்டம் பத்தமடை அம்பேத்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்து (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (45). இவர்கள் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்தி ருந்தனர்.

    இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குரும்பூரில் அதிகாலை 4 மணி அளவில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாராகினர். அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த முத்துவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் கீழே விழுந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரும்பூர் போலீசார் முத்துவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் சிவகளையை சேர்ந்த சிவலிங்கம் மகன் குமார் (33) மீது குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.
    • சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் பாபு(வயது24) விவசாயி ஆவார். இந்நிலையில்,நேற்று இரவு இப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது மின்சார ஒயர் ஒன்று அறுந்து வயல்வெளியில் விழுந்து கிடந்தது. இன்று காலை வழக்கம் போல் புதுப்பாளையம் கிராமம், முருகர் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மோகன் பாபு சென்றார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பார்க்காமல் மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கியதால் கூக்குரல் இட்ட வண்ணம் அலறி துடித்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.

    ஆனால்,அதற்குள் அவர் இறந்து போனார். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான மோகன் பாபு உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாடியில் வாலிபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததை பார்த்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஒருவர் சத்தம் போட்டார்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து, அந்த நபரை தேட ஆரம்பித்தனர்.

    அப்போது அந்த நபர் அங்கிருந்த ஒவ்வொரு வீட்டு மாடியிலும் குதித்து தப்பி சென்றார். பொதுமக்கள் சத்தம் போட்டபடி அவரை விரட்டி சென்றனர்.

    அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு குதிக்கும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் மதுரையை சேர்ந்த மதன் (வயது 25) என்பதும், திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நண்பரின் அறையில் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் இரவு நண்பர்களுடன் மது அருந்த சென்று விட்டு திரும்பிய அவர், போதையில் ஒவ்வொரு வீட்டின் மாடி வழியாக சென்றதும், பொது மக்கள் திருடனாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வாலிபரை விரட்டியுள்ளனர். விரட்டும் போது மதன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார்.
    • தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக் (வயது 25).வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தனது சகோதரி தீபிகாவுடன் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.

    தீபக்குடன் சேர்த்து மொத்தம் 10 பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்கு படகு இல்லம் ஒன்றில் பயணம் மேற் கொண்டனர். படகு இல்லத்தை பொறுத்தவரை, மதியம் முதல் மாலை வரை நீர்பரப்பில் செல்லும். இரவு நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

    அதேபோல் தீபக் குடும்பத்தினர் சென்ற படகு, சவாரி முடிந்து பள்ளத்துருத்தி அருகே உள்ள ஹவுஸ் போர்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் படகு இல்லத்தில் தீபக் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் திடீரென தீபக்கை மட்டும் காணவில்லை. படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந் திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார். அது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட 'டைவிங்' வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீபக் தங்கி இருந்த படகு நின்று கொண்டிருந்த பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கி தேடினர்.

    அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் தீபக் பிணமாக கிடந்தார். அவரது உடலை டைவிங் வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த சகோதரி மற்றும் உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என புலம்பினர்.

    இதையடுத்து தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் தமிழக வாலிபர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
    • காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

    இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    • கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் வெங்கனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் விவ சாய நிலம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக மருதமுத்து குத்தகை நிலத்திற்கு செல்ல வில்லை. நேற்று தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தலைகுப்புற ஒருவர் பிணமாக தண்ணீ ரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநத்தம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். அப்போது கிணற்றில் கிடந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் கால்கள் இரண்டும் கயிறால் கட்டி, கல் ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவரது உடல் கைப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வலை மற்றும் அதன் உள்ளே வைக்கோல், டிஜிட்டல் பேனர் கொண்டும் சுற்றப்பட்டிந்தது. 

    இதை பார்த்த போலீசார் இந்த வாலிபரை யாரோ கொடுரமாக கொலை செய்து இங்கு வீசி சென்றுள்ளனர் என்று கூறி உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதற்கு போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. இதனால் பிரேத பரிசோதனை முடிந்த பிறகுதான் அவர் யார் ? அவரை எதற்காக இவ்வளவு கொடூரமாக கொலை செய்தார்கள் என்பது குறித்து தெரிய வரும் என்பது போலீசார் தெரிவித்தனர். 

    இந்நிலையில் இறந்த வாலிபரின் உடலில் சட்டை காலர் ஒரு பகுதி மட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சட்டை காலரில் விழுப்புரம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் போலீசார் விழுப்புரத்தில் இதுவரை காணாமல் போன வர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் டிஜிட்டல் பேனரும் விழுப்புரத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். கொடூர மாக கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசி சென்றவர்கள் யார் என்றும், இறந்த வாலிபருக்கும் அவர்க ளுக்கும் முன்விரோத தகராரில் இந்த கொலை நடந்திருக்குமோ என்று கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×