search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு இல்லம்"

    • படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார்.
    • தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக் (வயது 25).வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தனது சகோதரி தீபிகாவுடன் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.

    தீபக்குடன் சேர்த்து மொத்தம் 10 பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்கு படகு இல்லம் ஒன்றில் பயணம் மேற் கொண்டனர். படகு இல்லத்தை பொறுத்தவரை, மதியம் முதல் மாலை வரை நீர்பரப்பில் செல்லும். இரவு நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

    அதேபோல் தீபக் குடும்பத்தினர் சென்ற படகு, சவாரி முடிந்து பள்ளத்துருத்தி அருகே உள்ள ஹவுஸ் போர்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் படகு இல்லத்தில் தீபக் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் திடீரென தீபக்கை மட்டும் காணவில்லை. படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந் திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார். அது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட 'டைவிங்' வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீபக் தங்கி இருந்த படகு நின்று கொண்டிருந்த பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கி தேடினர்.

    அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் தீபக் பிணமாக கிடந்தார். அவரது உடலை டைவிங் வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த சகோதரி மற்றும் உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என புலம்பினர்.

    இதையடுத்து தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் தமிழக வாலிபர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அரவேணு:

    உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது.

    தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று 2-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் வனப்பகுதிக்கு நடுவே வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.

    • மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
    • இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளூர் ஊராட்சியில் ஒரு பகுதியும், அவல்பூந்துறை பேரூராட்சியில் ஒரு பகுதியும் என மொத்தம் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.

    இந்த குளத்திற்கு எல்.பி.பி. வாய்க்காலில் இருந்து வரும் கசிவு நீர் வடிந்து குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த குளத்தைச் சுற்றி ஒரு பகுதியில் கருவேலம் மரங்களும், மற்றொரு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது.

    இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது. அதேபோல் விவசாய கிணறுகள், ஆழ்துழாய் கிணறு போன்றவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை.

    மேலும் அவல்பூந்துறை குளத்திற்கு அருகில் வெள்ளோடு பறவைகள் சரணாயம் உள்ளதால் அங்கிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த குளத்திற்கு வந்து சென்று உணவுகளை தின்றுவிட்டு செல்கிறது .

    இந்நிலையில் அவல்பூந்துறை குளத்தை படகு இல்லம் அமைப்பதற்காக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் கடந்த 2013–-2014-ம் ஆண்டு ஒரு கோடியே 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து படகு இல்லம் அமைப்பதற்காக குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் படுத்தும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் ஆங்காங்கே தண்ணீர் இருந்ததால் சமன் செய்யும் பணி காலதாமதம் ஏற்பட்டது.

    அதனைத்தொடர்ந்து தண்ணீர் வற்றியதையடுத்து மீண்டும் குளத்தை ஆழப்படுத்தி சமன்செய்யும் பணி நடைபெற்றது.

    மேலும் படகு இல்லத்திற்கு தேவையான பூங்கா, பார்வையாளர்கள் அமர்வதற்கு செட், மேல்நிலை குடிநீர் தொட்டி, பார்வையாளர்கள் நின்று பார்ப்பதற்கான மேடைகள், ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறைகள் மற்றும் அவல்பூந்துறை மெயின் ரோட்டில் படகு இல்லம் என்ற ஆர்ச் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மெயின்ரோட்டில் இருந்து படகு இல்லம் வரை கான்கிரீட் சாலை, ஏற்காட்டில் இருந்து இரண்டு படகு என படகு இல்லத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டது.

    ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமலும், சமன்படுத்தாமலும் இருந்ததால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை படகு இல்லம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது.

    இதனால் படகு இல்லத்தில் உள்ள பூங்கா, பார்வையாளர்கள் செட் போன்றவைகள் புதர் மண்டி கிடக்கிறது.

    இதுகுறித்து மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி கூறியதாவது:

    அவல்பூந்துறை குளம் முழுவதும் மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு பகுதி குளூர் ஊராட்சியிலும் மற்றொரு பகுதி அவல்பூந்துறை பேரூராட்சியிலும் உள்ளது. கடந்த 2013–-2014-ம் ஆண்டு குளத்தில் படகு இல்லம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

    ஆனால் குளத்திற்கு வரும் தண்ணீர் அதிகரித்ததால் வேலை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை. குளத்தில் தண்ணீர் வற்றினால் மட்டுமே மீண்டும் சமன்படுத்தி படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.

    ×