search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Season"

    • மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.
    • கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன.

    சேலம்:

    ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, பிரசித்தி பெற்ற கொல்லிமலை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குடும்பம், குடும்பமாக வருகின்றனர்.

    தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக சாரல் மழை விட்டு விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு குளிர்ச்சியான சீசனாக மாறியுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களை பார்த்து மகிழ்ந்தனர். அவர்கள் மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர்.

    அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் மிகுந்துள்ளது. ஏற்காடு ஏரியில் உள்ள படகு துறையில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் திரண்டனர். இதனால் ஏரியில் பகல் முழுவதும் படகுகள் தொடர்ச்சியாக உலா வந்தன.


    சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சிறு கடைகள், நொறுக்குத் தீனி கடைகள், பழச்சாறு கடைகள், பரிசுப் பொருட்களின் கடைகள் என ஏராளமான கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதனிடையே சுற்றுலாப் பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை நிரம்பி வழிந்தன.

    சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் வந்ததால் ஏற்காடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. எனினும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்ததால் போக்குவரத்து பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கோடை காலம் முடியும் வரை ஏற்காடு திருவிழாக் கோலத்தில் இருக்கும் என்பதால், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை விழாவையொட்டி பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூக்கத் தொங்கி உள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


    இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அணை பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2 நாட்களகாக வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
    • பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,

    மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.

    தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.

    தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நவம்பர் மாதம் 2-வது வாரமே தொடங்க வேண்டியது
    • டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

    ஊட்டி,

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஒருசில மாதங்கள் தவிர மற்ற காலங்களில் இதமான காலநிலை நிலவும்.

    எனவே தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் திரண்டு வருகின்றனர். அங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு தொடங்கும். இது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும்.

    அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் 2-வதுவாரம் முதல் ஜனவரி மாத இறுதிவரை உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    மேலும்ஊட்டி, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பைக்காரா, சோலூர், கிளன்மார்கன், எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, தாய்சோலை போன்ற இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்படும்.

    அத்தகைய நேரங்களில் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில்பகல் நேரங்களில் பனிக்காற்று வீசும். எனவே வெயில் அடித்தாலும்கூட குளிர் வாட்டும்.

    மேலும் பனிப்பொழி வின்போது கோரகுந்தா மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிளில் '0' டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்து காணப்படும்.

    அங்கு தற்போது உறைபனி காலம் இன்றும் தொடங்கவில்லை. கண்ணா மூச்சி காட்டி வருகிறது. எனவே ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் உறைபனி மொத்தமாக கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் மலைக்காய்கறி உள்ளிட்ட விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உறைபனி கொட்டும்போது சாகுபடி மற்றும் மகசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் நீலகிரியில் உறை பனிக்காலம் தொடங்கினால் அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும். 

    • சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
    • 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2-ம்கட்ட சீசன் நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு கடந்த ஜூலை மாதமே 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.

    அவற்றை தோட்டக்கலை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து அரிய வகை மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு உள்ளன. சிம்ஸ் பூங்காவில் தற்போது அனைத்து மலர் நாற்றுக்களும் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    • குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
    • அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.

    கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.

    தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.
    • பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த பாண்டிக்கோட்டகம் பாலம் அருகே ஒரே ஒரு அரிய வகை மரம் உள்ளது.

    இந்த மரத்தின் பெயர் பிங் ட்ரம்பெட் மரமாகும்.

    இந்த வகை மரங்கள் அதிகளவில் பெங்களூரில் தான் காணப்படுகிறது.

    இந்த பிங் ட்ரம்பெட் மரத்தில் மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.

    இதுவே சீசன் காலமாகும்.

    தற்போது சீசன் தொடங்கிவிட்ட நிலையில் அழகிய இளஞ்சிவப்பு மலர்களுடன் காண்போரின் மனதை ஆர்ப்பரிக்கும் வகையில் இந்த மரம் காட்சியளிக்கிறது.

    அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிலர் பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.

    ஆனால், அப்பகுதி மக்களுக்கு இந்த மரத்தின் பெயர் மற்றும் இதன் சிறப்புகள் தெரியவில்லை.

    எனவே, பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மரத்தை யாரும் வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    • 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
    • இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.

    சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு ஆகும்.

    மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.

    இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.

    இந்த ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த "ஹிமாலய கிரிபன் கழுகு" மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளது.

    தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால் இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது.

    இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் ஆமூர் பால்கன் இனம், சைப்பிரியாவை கடந்து நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரும்.

    இங்கு ஓய்வு எடுக்கும் இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள் தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன.

    கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் 1 லட்சம் பறவைகளுக்கு மேல் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்திலேயே இதுவரை 1 லட்சத்திற்கு மேல் பறவைகள் வந்துள்ளன.

    இதுகுறித்து கோடியக்கரை வனசரக்கர் அயூப்கான் கூறியதாவது:-

    கோடியக்கரை பறவைகள் சரணலாயத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை சுற்றுலா பயணிகள் காணலாம்.

    சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாகுலார், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது என்றார்.

    • காய்கறி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
    • பயிரின் தேவைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையை பராமரிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் காய்கறி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். நுண்ணீர் பாசனம், குழித்தட்டு நடவு முறை, மல்ஷிங் சீட் உட்பட தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, விவசாயிகள் இம்முறைகளுக்கு மாறி வருகின்றனர். இதே போல் ஆண்டு முழுவதும் சீரான காய்கறி உற்பத்திக்கு 'பாலிஹவுஸ்' தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.

    திறந்தவெளி தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யும் போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான காலநிலை காரணிகளான வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், தண்ணீர் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை, பயிருக்கு ஏற்ப கட்டுபடுத்த முடியாது.ஆனால் 'பாலிஹவுஸ்' தொழில்நுட்பத்தில் குடில் அமைத்து உட்பகுதியில் பயிரின் தேவைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையை பராமரிக்கலாம். இதனால் அதிக பனிப்பொழிவு மற்றும் வெப்பம் நிலவும் பகுதிகளிலும் சீராக காய்கறி உற்பத்தி மேற்கொள்ள முடியும்.மலர் வகைகளில் கிளாடியோலஸ், கார்னேசன், சாமந்தி, சம்பங்கி, டாலியா, ஜெர்பிரா, ஆந்தூரியம், அரளி, ஆர்க்கிட் ஆகிய ரகங்களை ஆண்டு முழுவதும் இத்தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்ய முடியும்.வெள்ளரி, குடைமிளகாய், கொடித்தக்காளி, கத்தரி, பாலக்கீரை மற்றும் இதர வகை அலங்கார மலர்கள் உற்பத்தியும், பாலிஹவுஸ் எனப்படும் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தில் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் கூறுகையில், குறைந்த சாகுபடி பரப்பு உள்ளவர்களுக்கு மானியத்தில் பாலிஹவுஸ் அமைத்து கொடுத்தால் அனைத்து சீசனிலும், காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபடலாம்.முன்பு இத்திட்டம் குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் பாலிஹவுஸ் மானியத்திட்டத்தை அரசு செயல்படுத்தினால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்றனர்.

    ×