என் மலர்
உலகம்
- அதிக ஆபத்தான சூழல்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ போலீசாருடன் சேர்ந்து ரோந்து செல்கிறது.
- மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் மேம்பட்ட சென்சார்களும் உள்ளது.
ரோபோக்கள் பயன்பாடு மருத்துவத்துறை, போக்குவரத்து, கல்வி, வாடிக்கையாளர் சேவை என பல துறைகளிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கோள வடிவிலான போலீஸ் 'ரோபோ' தெருக்களில் ரோந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த 'ரோபோ' வழக்கமான ரோபோக்கள் போல் அல்லாது கண்காணிப்பு வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை துரத்தவும், அவர்களை பிடிக்கவும் இந்த 'ரோபோ' உபயோகமாக இருக்கும். நீரிலும், நிலத்திலும் தடையின்றி செயல்படும் வகையில் உருண்டை வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ சுற்றுப்புறங்களை விழிப்புடன் கண்காணிக்கிறது.
அதிக ஆபத்தான சூழல்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ போலீசாருடன் சேர்ந்து ரோந்து செல்கிறது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் மேம்பட்ட சென்சார்களும் உள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவும் முடியும்.
- மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன.
- உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியது.
நியூயார்க்:
அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் கடந்த 2004-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம் பேஸ்புக்.
உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.
தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உலகெங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு சமூக வலைதளங்களும் முடங்கின.
இதனால் அவற்றை பயன்படுத்தும் பயனாளர்கள் கருத்துப் பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
இரவு 11 மணி முதல் வாட்ஸ்-அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் புகாரளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை.
இதனையடுத்து #MetaDown, #WhatsappDown போன்ற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பயனர்கள் பலரும் புகார் கூறிவருகின்றனர். இதனால் சில நிமிடங்களிலேயே இந்த ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதே போல கடந்த மார்ச் மாதம் இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.
- அமைச்சக வளாகத்திற்குள்ளேயே தற்கொலை படைதாக்குதல்.
- தலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பின் கேபினட் மந்திரி கொல்லப்படுவது இதுவே முதல்முறை.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர்.
தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் ஆட்சியை பிடித்தது. அதன்பின் தலிபான் வட்டாரத்தில் உள்ள தலைவர் மீது நடைபெற்ற மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இதுவாகும்.
அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற தாக்குதலில் மந்திரி கலில் ஹக்கானி கொல்லப்பட்டார். இவர் உள்துறை பொறுப்பு மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.
தலிபான் பதவி ஏற்ற பிறகு கேபினட்டில் உள்ள ஒரு தலைவர் கொல்லப்படுவது இதுதான் முதல்முறையாகும். குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.
- அமெரிக்கா ஒப்புதலை தொடர்ந்து ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இதற்கு பதிலடியாக ரஷியா புதிய வகை ஏவுகணையை உக்ரைன் மீது செலுத்தி சோதனை நடத்தியது.
உக்ரைன்- ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நெடுந்தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.
இதனைத்தொடர்ந்த உக்ரைன் ரஷியா மீது தாக்குதல் நடத்தியது. இதை ரஷியா வெற்றிகரமாக முறியடித்தது. அதேவேளையில் ரஷியா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன குற்றம்சாட்டியது.
ஆனால், நாங்கள் ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணையை சோதனை செய்தோம். இந்த ஏவுகணை உக்ரைன் பகுதியை தாக்கியதன் மூலம் சோதனை வெற்றி பெற்றது என புதின் அறிவித்தார்.
இந்த நிலையில் உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் மீது ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதற்கிடையே உக்ரைன் போரில் கேம் சேஞ்சராக ஒரேஷ்னிக் இருப்பதைவிட, அமெரிக்காவை மிரட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் பார்க்கிறார்கள்.
ரஷியாவிடம் ஒருசில ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்த மற்ற ஏவுகணைகளை விட சிறிய வகை மட்டுமே கொண்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டடு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் கூகுலின் குவாண்டம் ஆய்வகம் உள்ளது
- 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் கோட்பாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் கணினிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு பகுதியாகும். இயற்பியலின் கூறுகளை பயனப்டுத்தி மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்துகிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறையாக உள்ள நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகிள் நிறுவனம் சார்பில் புதிய குவாண்டம் கம்பியூட்டிங் சிப் [CHIP] ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய குவாண்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சிப்-க்கு வில்லோ [WILLOW] என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு சிக்கலான கணித பிராப்லம் -ஐ இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் தீர்க்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால், அதே சிக்கலை 'வில்லோ' 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது. [1 (24 சைபர்கள்) = 1 செப்டில்லியன்]

எங்கள் புதிய அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- கோடீஸ்வர நண்பர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்
- தனக்கு சாதகமான செய்தி வெளியிட ஊடக அதிபர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு [75 வயது] கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி அல்லோலப்பட்டு வருகிறார். முதல் முறையாக தன் மீதனாக குற்றச்சாட்டுக்களுக்கு நெதன்யாகு நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அவர், நாட்டின் நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் ஆவார். குற்ற வழக்கில் சிக்கிய இஸ்ரேலின் முதல் பதவியில் இருக்கும் பிரதமரும் இவரே.
கோடீஸ்வர நண்பர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளை லஞ்சமாக பெற்றது, மோசடி, நம்பிக்கை மீறல், தனக்கு சாதகமான செய்தி வெளியிட்டால் ஊடகங்கள் மீதான ஒழுங்குமுறையைத் தளர்த்துவதாக ஊடக அதிபர்களுக்கு அழுத்தம் கொடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகக்ளை உள்ளடக்கிய மூன்று வழக்குகள் நேதன்யாகு மீது உள்ளன.
2019 இல் எழுந்த இந்த குற்றச்சாட்டுகளின் மீது 2020 முதல் நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. மேலும் இடையில் கடந்த 2023 அக்டோபர் 7 தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்திய சமயத்தை பயன்படுத்தி நேதன்யாகு சட்டத்துறையின் அதிகாரத்தை குறைக்க முயன்றதாக சர்ச்சை எழுந்ததது.

இந்நிலையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காக முதல் முறையாக நேற்று டெல் அவிவ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இஸ்ரேலில் ஜனநாயகத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் சட்ட அமலாக்க அதிகாரிகளில் சிலரால் தான். இவர்கள் மக்களின் விருப்பத்தை ஏற்க மறுத்து, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் விசாரணைகள் மூலம் சதி செய்ய முயற்சிக்கின்றனர் என்று கடந்த வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார் நேதன்யாகு.
தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் தோன்றி தன் மீதான குற்றசாட்டுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்தார். மேலும் 7 முனை போரை நடத்திபடியே தன்னால் இந்த விவகாரத்தையும் கையாள முடியும் என தெரிவித்து ஊடகத்தினர் இதை பெரிதுபடுத்துவதை சாடினார்.

காசாவில் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 44,500 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவருக்கும் அவரது முன்னாள் பாதுகாப்புத் தலைவர் யோவ் கேலண்டையும் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து கைது வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதிலும் நாகப்பாம்புகள் படமெடுத்து ஆடுவதை பார்க்கும் போது மிகவும் பயமாக இருக்கும். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் வசிக்கும் ஒருவரது வீட்டில் படுக்கை அறையில் இருந்து சத்தம் வந்தது. இதனால் குடும்பத்தினர் படுக்கை அறை முழுவதும் சோதனை நடத்திய போது, அங்கு தலையணைக்குள் இருந்து சத்தம் அதிகமாக கேட்டது. அப்போது தலையணைக்கு அடியில் விஷப்பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வன ஆர்வலருக்கு தகவல் தெரிவித்ததும் அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் தலையணையை தூக்கி அதன் அடியில் மறைந்திருந்த விஷ நாகப்பாம்பை திறமையாக அகற்றினார். அந்த விஷப்பாம்பு அடர்கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு, மஞ்சள் கலந்து காணப்பட்டது. கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த அந்த பாம்பை வன ஆர்வலர் அப்புறப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் மக்ஜியோல்லி [அரிசி மது] குடித்து மகிழ்வார்கள்
- மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம்.
தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது.
முந்தைய காலங்களில் இரவு பப்-கள், மதுபான விடுதிகளுக்குப் போவதும் வருவதுமாக நள்ளிரவிலும் ஜன நெருக்கடி நிறைந்த இடங்களும் சாலைகளும் தற்போது வெறிச்சோடி கிடப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக தலைநகர் சியோலில் முன்பைப் போலல்லாது இரவில் வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள் இதை உறுதிப் படுத்துகிறது. மக்களுக்கு குடியின் ஆர்வம் குறைந்துவருவதை பல்வேறு புள்ளிவிவரங்களும் தெளிவுபடுத்துகிறது.


சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில், சியோலின் ஒரு காலத்தில் துடிப்பான நோக்டு தெருவில் மக்கள் வேலையை முடித்து வந்து இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் உள்ள விடுதிகளும் மக்ஜியோல்லி [அரிசி மது] உள்ளிட்ட மது வகைகள் இல்லாமல் தங்கள் நாளை முடிக்க மாட்டார்கள்.

பாப் - பப் விடுதிகள் நிரம்பி வழியும். மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம். ஆனால் இப்போது அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. அந்த நிலைமை முழுவதும் மாறிவிட்டது என்று கூறுகிறார்.
மக்கள் மதுவைக் கைவிடுவதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள நீண்டகால பணவீக்கம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

கடன் நிறுவனங்கள் அருகி இருக்கும் தென் கொரியாவில் பெரும்பான்மையோர் கடனாளிகளாக மாறியிருப்பதும் வட்டி விகிதங்கள் அதிகரித்தன் காரணமாகவும் மக்கள் தங்கள் பணப் பையைத் திறந்து செலவு செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.
- 150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
- டிரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார்.
இதற்கிடையே தனது 2-வது முறை ஆட்சியில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அரசியலமைப் பின் 14-வது திருத்தத்தின் படி, பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேவேளை அதை செயல்படுத்துவது என்பது டிரம்புக்கு கடினமாக இருக்கும்.
ஏற்கனவே டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், இச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
- மியான்மரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவானது.
இந்திய எல்லையை ஒட்டிய மியான்மரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. பூமியில் இருந்து 99.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மர் நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (டிசம்பர் 11) காலை 6.55 மணி அளவில் மியான்மரின் மாவ்லிக்-இல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
- அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர்.
- பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்ரீரை சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர். சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் கோரிக்கையை ஏற்கும் வகையில், அங்குள்ள பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்கும் பணிகளை டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டன. முதற்கட்டமாக 75 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர்.
சிரியாவில் உள்ள இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
- வேட்டை நாய்கள் பந்தயதுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
- போதைப்பொருள் கொடுத்தும், மிக கொடூரமாக துன்புறுத்தப்பட்டும் இந்த பந்தயத்துக்கு அவை தயார்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
வெல்லிங்டன்:
நியூசிலாந்தில் வேட்டை நாய்களை பயன்படுத்தி ஓட்டப்பந்தயம் நடத்துவது அந்நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக உள்ளது. இதற்காக 'கிரே ஹவுண்டு' என்னும் வேட்டை நாய்கள் இன குட்டிகளை சிறுவயதில் இருந்து வளர்த்து அதற்காக தயார்படுத்தி வந்தனர்.
அண்மையில் இந்த வேட்டை நாய்கள் பந்தயதுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நல அமைப்புகள் போராட்டம் நடத்தின. போதைப்பொருள் கொடுத்தும், மிக கொடூரமாக துன்புறுத்தப்பட்டும் இந்த பந்தயத்துக்கு அவை தயார்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதிக்கும் வகையிலான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இதனால் அங்கு வேட்டை நாய்கள் பந்தயத்துக்கு நிரத்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பந்தயம் மிக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.






