என் மலர்
உலகம்
- காரில் பயணம் செய்தபோது எலான் மஸ்க் தனது 4 வயது குழந்தையிடம் அரசியல் பற்றி பேச்சு கொடுக்கிறார்.
- வீடியோவை எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட அது அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்து வைரலானது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின், 4 வயது மகன் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டிரம்பின் நிர்வாகத்தில், அரசாங்க செயல்துறையின் தலைவராக எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
காரில் பயணம் செய்தபோது எலான் மஸ்க் தனது 4 வயது குழந்தையிடம் அரசியல் பற்றி பேச்சு கொடுக்கிறார். பொறுப்பேற்க இருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? என்று தனது மகனிடம் கேட்கிறார். அதற்கு சற்றும் யோசிக்காமல் "அமெரிக்காவை காப்பாற்றுங்கள்" என்று சிறுவன் பதிலளிக்கிறான். "அப்புறம்" என்று அவர் கேட்டபோது, "டிரம்பிற்கு உதவுங்கள்" என்கிறான் சிறுவன். அதற்கு எலான் மஸ்க், 'சரி' என்று ஆமோதிக்கிறார்.
10 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட அது அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்து வைரலானது. இதுவரை 3.4 கோடி பேர் வீடியோவை ரசித்து உள்ளனர்.
- ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை.
- ரஷிய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக ரஷியா நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியா - ரஷியா இடையிலான ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டம் நிறைவுற்ற பிறகு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து பேசினார். ரஷிய அதிபர் புதின் மற்றும் அமைச்சர் ராஜ்நநாத் சிங் இரு நாடுகள் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் பிரதமர் மோடி சார்பில் அதிபர் புதினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக பிரதமர் மோடி ரஷிய பயணம் மேற்கொண்டு அதிபர் புதினை சந்தித்த நிலையில், தற்போது பாதுகாப்பு அமைச்சர் அங்கு பயணம் மேற்கொண்டு இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது, "நமது நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மிக உயர்ந்த மலையை விட உயர்ந்தது மற்றும் ஆழமான கடலை விடவும் ஆழமானது. இந்தியா தனது ரஷிய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் இது நிச்சயம் தொடரும்," என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
- அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
சியோல்:
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
- சேவை பாதித்துள்ள நிலையில் பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது.
- மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி சர்வதேச அளவில் முடங்கியது. மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் இன்று நள்ளிரவில் திடீரென உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சேவை பாதித்துள்ள நிலையில் பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. மைக்ரோசாப்ட் சேவை முடங்கியதால் அவுட்லுக், எக்செல் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.
- முதல் முறை மசாஜ் முடித்துக்கொண்டு வீடு சென்ற அவருக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.
- 2-வது முறையாக மசாஜ் செய்ய சென்ற போது அவருக்கு கழுத்தை முறுக்கும் மசாஜ் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து:
தாய்லாந்தில் மசாஜ் செய்து கொண்ட தாய்லாந்தின் இளம் பாடகி உயிரிழந்துள்ளார். 20 வயதே ஆன பாடகி சாயதா, கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியை சரிசெய்வதற்காக மசாஜ் செய்து கொண்டுள்ளார். முதல் முறை மசாஜ் முடித்துக்கொண்டு வீடு சென்ற அவருக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து 2-வது முறையாக மசாஜ் செய்ய சென்றுள்ளார். அப்போது அவருக்கு கழுத்தை முறுக்கும் மசாஜ் செய்யப்பட்டது.
இதனால் சில நாட்களில் அவருக்கு முதுகு மற்றும் வயிற்றில் அதிகமான வலி ஏற்பட்டுள்ளது. இது மசாஜால் ஏற்பட்ட வலி என நினைத்து மீண்டும் மசாஜ் செய்து கொண்டுள்ளார். முதல் இரண்டு முறை இருந்த பணியாளர் இல்லாமல் 3-வது முறை புதிய பணியாளர் மசாஜ் செய்தார். அவர் கடுமையான முறையில் செய்தார். இதனால் அவருக்கு கழுத்தில் வீக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் கடைசியாக பேசி வெளியிட்ட வீடியோவில் இந்த மசாஜ் தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார்.
- கடற்கரையில் இரவில் முழு நிலவின் கீழ் நெருப்பில் குளிர்காய்ந்தபடி இரண்டு பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்
- வேறு ஒரு ஊரில் கொலை செய்தால் கொலையாளியை பிடிப்பது ஏன் கடினமாக உள்ளது
இங்கிலாந்தை சேர்ந்த கிரிமினாலஜி [ குற்றவியல் ] பட்டப்படிப்பு மாணவன் கொலை செய்வது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள நிஜமாகவே கொலைகளை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதான நசென் சாடி லண்டனில் உள்ள க்ரீன்விச் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி பயின்று வந்த மாணவர். படிப்பு சம்பந்தமாக கொலைகளை பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். எனவே "ஒரு உயிரைப் பறித்தால் எப்படி இருக்கும்" என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 24 ஆம் தேதி, இங்கிலாந்தில் தெற்கு கரையில் உள்ள போர்ன்மவுத்[ Bournemouth] கடற்கரையில் இரவில் முழு நிலவின் கீழ் நெருப்பில் குளிர்காய்ந்தபடி அரட்டை அடித்துக் கொண்டு ஏமி கிரே [34 வயது], லீன் மைல்ஸ் [38 வயது] ஆகிய இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.

போர்ன்மவுத் கடற்கரை
அவர்களை கத்தியுடன் நெருங்கிய நசென் சாடி, இருவரையும் கடற்கரையில் துரத்தித் துரத்தி சாராமரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஏமி கிரே உயிரிழந்தார். மைல்ஸ் பலத்த காயங்களுடன் அங்கிருந்து ஓடிச்சென்று உயிர் தப்பியுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாக, சாடி தெற்கு இங்கிலாந்து முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்தார், இறுதியில் போர்ன்மவுத்தை தேர்ந்தெடுத்து கொலைக்காக பல வாரமாக திட்டமிட்டு வந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியதற்கு முந்தைய நாள் இரவு ஹோட்டல் அறையில் கத்தியை பயன்படுத்தி கொலைகளை செய்யும் காட்சிகள் அதிகம் உள்ள SLASHER வகை படங்களை பார்த்துள்ளார்.

ஏமி கிரே
இவர் பல்கலைக்கழகத்தில் கொலை தொடர்பான பாடப்பிரிவில் காட்டிய ஆர்வத்தை பார்த்து நீ ஒன்றும் கொலை செய்ய முயற்சிக்க வில்லையே என ஆசிரியரே கிண்டலாக கேட்டுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையின்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு ஒரு ஊரில் கொலை செய்தால் கொலையாளியை பிடிப்பது ஏன் கடினமாக உள்ளது என்றும் கத்திகள் மற்றும் அவற்றின் வகைகள் குறித்தும் ஆன்லைனில் அவர் தேடியதும் அவரது வீட்டின் கம்பியூட்டரை ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சாடி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

விசாரணையில் நசென் சாடி - Portrait
- இலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக அதிபராக பதவியேற்றார்.
- இலங்கை அதிபர் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கிறார்.
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
திசநாயகே இலங்கை அதிபராக பதவி ஏற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட திசநாயகே இப்போது இந்திய பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்ததில் இருந்து வங்கதேசத்தில் மைனாரிட்டி மீது தாக்குதல் அதிகரிப்பு.
- தற்போது எதிர்க்கட்சி தலைவர் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைத்துள்ளார். அதன்பின் வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்பின் வங்கதேசத்தில் மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது அந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. துறவிகள் கைது உள்ளிட்ட பல்வேறு சம்பங்கள் நடைபெற்றுள்ளன.
இதனால் இந்தியா- வங்கதேச இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மைனாரிட்டிகள் மீது தாக்குப்படுவது வருந்ததக்கது என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பி.என்.பி. கட்சி தலைவர் ராகுல் கபீர் ரிஸ்வி, கட்சி தொண்டரக்ள் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்ட போர்வையை எரித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் பி.என்.பி. கட்சியின் இணை பொதுச் செயலாளர் ஆவார். ராஜ்ஷாஹி நகரில் நடைபெற்ற இந்திய பொருட்களை புறக்கணிப்போம் நிகழ்ச்சியில் போர்வையை எரித்தார். போர்வைய எரித்தபோது "இந்த போர்வை இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து வந்தது. இது ஜெய்ப்பூர் டைக்டைல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவே இதை நாம் செய்கிறோம்.
நாங்கள் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கிறோம். ஏனென்றால் அவைகள் இந்த நாட்டு மக்களுக்கு வசதியாக இருக்காது. அவர்களை நட்பு ஷேக் ஹசீனாவுடன் மட்டும்தான்" என்றார்.
பின்னர் போர்வையை சாலையில் தூக்கியெறிந்து, தொண்டர்களை எரிக்கச் சொன்னால். அவர்கள் அதை எதிர்த்தனர். அப்போது வங்கதேசத்திற்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோசம் எழுப்பினர்.
- கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அமேரிக்கா சென்று டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்தார்.
- அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடும் என ட்ரூடோவிடம் சொன்னார்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கனடாவை அமேரிக்காவின் 51 வது மாகாணமாக பொருள்படும்படி அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோவை [மாகாண] கவர்கனர் ட்ரூடோ என்று தனது சமூக வளைதல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் சொந்தமாக நடத்தி வரும் ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்டேட் ஆப் கானடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இரவு உணவருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது vஎன்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார், மேலும் , கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சேர்ந்து, விரைவில் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மற்றும் எங்களிடையில் நடக்கும் வர்த்தகம், வரி குறித்த பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கும் வகையில் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த நவம்பர் 25 அன்று, அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கனடாவும், மெக்சிகோவும் தடுக்கவில்லையென்றால் பதவியேற்றவுடன் இரு நாட்டு பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
அமெரிக்க வர்த்தகத்தை அதிகம் சார்ந்துள்ள கனடா இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால் கனடா அதிபர் ட்ரூடோ பதறியடித்துக்கொண்டு கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அமேரிக்கா சென்று டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்தார்.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, அன்றைய தினம் டிரம்ப் இரவு விருந்தின் போது ட்ரூடோவிடம், எல்லைப் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக குறைகளை நிவர்த்தி செய்ய தனது வரி உயர்வு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

அத்தகைய வரி கனேடிய பொருளாதாரத்தை அழித்துவிடும் என்றும் எல்லையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த உரையாடலின்போது, ஒருவேளை கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறக்கூடும் என ட்ரூடோவிடம் கேலியாக சொன்னார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டது.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் நேரடியாகவே தனது சமூக வலைத்தளத்தில் கனடாவை அமெரிக்காவின் மாகாணமாகக் குறிப்பிட்டு ட்ரூடோவை ஆளுநராக குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
- ஜப்பான் மக்கள் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஜப்பானில் 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவானது.
ஆகவே ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.
2025 ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் கவர்னர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.
- தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
- நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும்
அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி [புதன்கிழமை] மன்ஹாட்டனில் நிறுவனம் முதலீட்டாளர் தினத்தை நடத்தும்போது நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் ஹோட்டலுக்கு வெளியே வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
50 வயதான தாம்சன், யுனைடெட் ஹெல்த் கேர், யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் காப்பீட்டுப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏப்ரல் 2021 முதல் தாம்சன் செயல்பட்டு வந்தார். தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த கொலை தொடர்பாகக் கடந்த வாரம் முதல் குற்றவாளியைத் தேடி வந்த எப்.பி.ஐ. போலீஸ் 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை இன்று கைது செய்துள்ளது.
முன்னதாக இவரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டிருந்தது. அதன்படி அல்டூனா பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் ஒருவர் இவரை அடையாளம் கண்டு போலீசிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஜினீயர் மான்ஜியோனை மடக்கிப் பிடித்துள்ளது.
கைது செய்யப்பட்டபோது மான்ஜியோன் "கார்ப்பரேட் அமெரிக்காவிற்கு" எதிராக என்ற கையால் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் கூற்றுப்படி, அந்த இரண்டு பக்க அறிக்கையில், [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்ததும், இதற்கு வன்முறைதான் பதில் என்ற முடிவை பரிந்துரைத்துள்ளது.
நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று அதில் எழுதி வைத்துள்ளார். இன்ஜினியர் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் தன்னிச்சையாகவே இந்த கொலையை செய்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
- சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல்-அசாத்தின் அரசாங்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் தலைநகர் டமாஸ்கஸ் உள்பட முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதையடுத்து அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நாட்டைவிட்டு தப்பி சென்ற அசாத் ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதற்கிடையே சிரியாவில் அதிபர் அசாத் அரசு கவிழ்ந்ததை இஸ்ரேல் வரவேற்று உள்ளது. அதேவேளையில் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் கிடைத்தால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
100-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. அசாத் ஆட்சியின் ராணுவ திறன்களை அழிக்க இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ராணுவ ஆயுதங்களை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று இஸ்ரேல் கருதுகிறது.
இந்த தாக்குதலில் பார்சா அறிவியல் ஆய்வு மையம் உள்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக, மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.
இதற்கிடையே சிரியாவில் அசாத் ஆட்சி கவிழ்ந்த பிறகு அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அதிகார மாற்றம் தொடர்பாக சிரியா பிரதமரை கிளர்ச்சியாளர்கள் குழு தலைவர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.






