என் மலர்tooltip icon

    உலகம்

    • உக்ரைனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரஷியாவால் மீட்கப்பட்ட குர்ஸ்க் பகுதி சுமியை ஒட்டியே அமைத்துள்ளது.
    • பாதுகாப்பு இடையக மண்டலத்தை (buffer zone) உருவாக்குமாறு உத்தரவிட்டார்.

    உக்ரைன் எல்லை கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள நான்கு எல்லை கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உக்ரைனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரஷியாவால் மீட்கப்பட்ட குர்ஸ்க் பகுதி சுமியை ஒட்டியே அமைத்துள்ளது.

    கடந்த வாரம் குர்ஸ்க் பகுதியை பார்வையிட்ட ரஷிய அதிபர் புதின், நீண்ட எல்லை உக்ரேனிய ஊடுருவல்களுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது என்று கூறினார். எனவே எல்லையில் ஒரு "பாதுகாப்பு இடையக மண்டலத்தை" (buffer zone) உருவாக்குமாறு ரஷிய இராணுவத்திடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில்தான் சுமியில் உள்ள கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. கிராமங்களைக் கைப்பற்றிய பிறகு ரஷிய படைகள் உக்ரைனுக்குள் முன்னேற முயற்சிக்கின்றன என்று சுமி பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஓலே ஹ்ரிஹோரோவ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

    கைப்பற்றப்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டனர். மேலும் பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்று ஹ்ரிஹோரோவ் கூறினார்.

    ரஷியா - உக்ரைன் போர் நிலவரம்

    மூன்று ஆண்டுகளில் முதல் நேரடிப் பேச்சுவார்த்தைக்காக இந்த மாத தொடக்கத்தில் துருக்கியில் ரஷிய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சந்தித்தனர். இதில் கைதிகள் பரிமாற்றம் மட்டுமே முடிவு செய்யப்பட்டது.

    கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில், ரஷியா உக்ரைனில் சுமார் 900 ட்ரோன்களை ஏவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு, ரஷியா உக்ரைனுக்கு எதிரான 355 டிரோன்களை ஏவி 3 ஆண்டுகாலப் போரில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது

    இந்த திங்கள் முதல் செவ்வாய் வரை, ரஷியா உக்ரைனில் 60 டிரோன்களை வீசியதாக உக்ரைன் விமானப்படை இன்று தெரிவித்துள்ளது.

    அதேநிறத்தில் ஏழு ரஷிய பிராந்தியங்களில் ஒரே இரவில் அதன் வான் பாதுகாப்பு 99 உக்ரேனிய டிரோன்களை வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்கள் மீதான தாக்குதல் புரிந்துகொள்ள முடியாதது.
    • போலியோ இன்னும் பரவலாகக் காணப்படும் உலகின் கடைசி இரண்டு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று, போலியோ தடுப்பூசி குழுவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த காவல்துறையினர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

    இந்த சம்பவத்தில் தடுப்பூசி போட வந்த குழுவினர் காயமடையவில்லை. உயிரிழந்தவர் பலுசிஸ்தானின் நுஷ்கியில் வசிக்கும் போலீஸ்காரர் அப்துல் வாஹீத் என்றும் அடையாளம் காணப்பட்டது.

    இந்த தாக்குதலை ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கண்டித்துள்ளார். போலியோ அதிகாரிகளின் தைரியமும் தியாகமும் "நம் குழந்தைகளை இந்த ஊனமுற்ற நோயிலிருந்து காப்பாற்ற நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

    குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்கள் மீதான தாக்குதல் புரிந்துகொள்ள முடியாதது என்றும் அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.

    இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பயங்கரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பாகிஸ்தான் போலியோ திட்டத்தின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட 45 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி மற்றும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது ஆப்கானிஸ்தானைத் தவிர, போலியோ இன்னும் பரவலாகக் காணப்படும் உலகின் கடைசி இரண்டு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.  

    • தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.
    • காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

    இந்தியாவுடனான மோதலை தொடர்ந்து பாகிஸ்தான் உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. சமீபத்தில் துருக்கி சென்று அந்நாட்டு அதிபர் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்தார்.

    இந்த சூழலில் அவரின் ஈரான் பயணம் நிகழ்ந்துள்ளது. இந்த பயணத்தில் தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.

    அவரிடம் இந்தியா மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை பிரச்சினையை ஷெபாஸ் ஷெரீப்  எடுத்துரைத்தார்.

    ஆனால் காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    அதாவது, இந்த சந்திப்பின் பின் காமேனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று மட்டுமே பதிவிட்டுள்ளார்.

    இதன் மூலம் ஈரான் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    மே 7 அன்று, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா தாக்கியது. இதன்பின் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து மே 10 அன்று மோதல் முடிவுக்கு வந்தது. 

    • லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் பட்ட வெற்றி அணிவகுப்பு நடந்தது.
    • ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டங்களின் போது  பெரும் விபத்து ஏற்பட்டது.

    ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் நான்கு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர்.

    லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் பட்ட வெற்றியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பலத்த மழை பெய்த போதிலும், ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். அப்போது ஒரு கார் கூட்டத்திற்குள் வேகமாக சென்றது.

    விபத்தில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தாங்களாகவே சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். மேலும் இது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படவில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியது. 

    • சுதாரித்துக்கொண்ட இருவரும் பின்பு கீழே இறங்கினர்.
    • பிரிஜிட் மேக்ரானை விட 25 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அவரது மனைவி பிரிஜிட் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, வியட்நாமின் தலைநகரான ஹனோய் விமான நிலையத்தில் மேக்ரான் தரையிறங்கினார்.

    விமானத்தின் கதவு திறக்கப்பட்டபோது மேக்ரான் இறங்குவதற்கு முன், அவரது முகத்தை நோக்கி மனைவி பிரிஜிட் இரண்டு கைகள் நீட்டி தாக்குவதுபோல் பாவனை செய்தது கேமராவில் பதிவானது.

    சுதாரித்துக்கொண்ட இருவரும் பின்பு கீழே இறங்கினர். அப்போது மேக்ரான் கைகளை கோர்க முயன்றும் இறுக்கமான முகத்துடன் பிரிஜிட் தனியாக இறங்கினார். இதனால் முன்னதாக வாக்குவாதத்தில் மேக்ரானை பிரிஜிட் தாக்கியதாக ஊகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் வைரலான இந்த காட்சிகளுக்கு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனை விளக்கமளித்துள்ளது.

    விமானத்தில் நடந்தது அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும் அவரது மனைவி பிரிஜிட்டிற்கும் இடையிலான பாசத்தின் வெளிப்பாடே தவிர அது ஒரு வாக்குவாதம் அல்ல என்று எலிசி அரண்மனை தெரிவித்தது.

    காணொளியில் உள்ள காட்சிகள் போலியானவை அல்ல என்றும், ஆனால் தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகிறது என்றும் மேக்ரான் விளக்கினார். பிரிஜிட் மேக்ரோனை விட 25 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
    • நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது.

    அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் உரிய தகவல் கொடுக்காமல் இடைநின்றால், மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளை புறக்கணித்தால், அல்லது உங்கள் கல்லூரிக்கு தெரிவிக்காமல் நீங்கள் இடைநின்றால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும், நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது. ஆகவே எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைப் பின்பற்றி உங்கள் படிப்பை தொடருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார்.
    • அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது.

    காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது.

    இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் உள்பட ராணுவ நிலைகளை தாக்கியது. அதன்பின் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதே கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    ஷபாஸ் ஷெரீப் தனது 4 நாடுகள் பயணத்தின் 2-வது கட்டமாக ஈரானுக்கு சென்றார். தனது துருக்கி பயணத்தை முடித்து கொண்டு ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு சென்றடைந்தார். அங்கு அவரை சாதாபாத் அரண்மனையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வர வேற்றார்.

    அப்போது ஷபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அண்டை நாடுகளு டன் பேசவும் தயாராக இருக்கிறோம். இந்தியா போரின் பாதையைத் தேர்ந்தெடுத்தால், பதில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க தேர்வு செய்தால், எங்கள் பிரதேசத்தை நாங்கள் பாதுகாப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது.
    • மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும்.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் இடையே 3-வது ஆண்டாக, போர் நீடித்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்து வந்த ரஷிய அதிபர் புதின், சமீபத்தில் தானாக போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தார். அதன்பின்னர், இருநாட்டு முக்கிய பிரமுகர்கள், துருக்கி நாட்டின் தலைநகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. ஆனால் போர் நிறுத்தம் செய்வதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 390 பேர், சனிக்கிழமை 307 பேர், ஞாயிற்றுக்கிழமை 303 பேர் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.

    இதற்கிடையே ரஷியா, ஒரே நாள் இரவில் 300-க்கும் அதிகமான டிரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

    அணிவகுத்த டிரோன்கள் குறித்து உக்ரைன் ராணுவ தரப்பு கூறும்போது, "உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறி வைத்து திங்கட்கிழமை இரவில் ரஷியா 355 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும். இதில் சிலர் காயம் அடைந்து உள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை." என்று கூறி உள்ளது.

    டிரோன் தாக்குதலுக்கு முந்தைய நாள் ரஷியா 9 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கும் முந்தைய நாள் ரஷியா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 12 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டனர்.

    • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
    • இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

    இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

    மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சீனாவில் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காமல் இளைஞர்கள் திண்டாட்டம்.
    • இதை பயன்படுத்தி பெண்களை கடத்தி திருமணம் செய்து வைக்கும் செயல்களில் மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறது.

    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாவாகும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது. அதில் ஒன்று ஒரு தம்பதி ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது. இதனால் சீனத் தம்பதிகள் பெரும்பாலான ஆண் குழந்தைகளை விரும்பினர். இதனால் பெண்கள் பிறப்பு விகிதம் குறைய ஆரம்பித்தது. தற்போது ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது.

    இந்த சட்டத்தின் காரணமாக சீனாவைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி 3 கோடிக்கும் அதிகமான சீன ஆண்கள் மணப்பெண் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களை எஞ்சியிருக்கும் ஆண்கள் என குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் வெளிநாட்டு மனைவிகளை தேடும் நிலைக்கு ஆண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்தி பெண்களை திருமணம் செய்து வைக்கும் வேலையில் மோசடிக் கும்பல் ஈடுபட்டு வருகிறது.

    வணிக எல்லைத் தாண்டிய திருமண ஏஜென்சிஸ், எல்லைத்தாண்டிய டேட்டிங் வீடியோக்களை பரப்பும் சமூக வலைத்தளங்கள் போன்றவை இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களிடம் சிக்காமல் இருப்பதை வலியுறுத்தி, வெளிநாட்டு மனைவிகளை வாங்கும் யோசனையை கைவிட வேண்டும். வங்கதேசத்தில் திருமணம் செய்வதற்கு முன்னதாக பலமுறை யோசிக்க வேண்டும். ஒருவேளை மோசடியில் ஈடுபட்டால், அந்நாட்டின் தற்போதைய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியவடைய அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வாழ்க்கை பாதிக்கப்படும் என வங்கதேசத்தில் உள்ள சீன தூதகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மோசடி கும்பலிடம் சிக்கி பணம் மற்றும் வாழ்க்கையை இழக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    இந்த மோசடி கும்பல் நல்ல வேலை வாங்கி தருவதாக சீனாவுக்கு வங்கதேச பெண்களை அனுப்பி வைக்கிறார்கள். பின்னர் வலுக்கட்டாயமாக அங்குள்ள இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுபோன்ற செயல் ஆள்கடத்தல் மோசடியாக கருதப்படுகிறது.

    இதுபோன்ற செயல்களில் மாட்டிக்கொண்டால் வங்கதேசததில் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படும். சீனாவும் இந்த எல்லைத்தாண்டிய திருமண ஏஜென்சி செயல்களை அனுமதிப்பதில்லை.

    • இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினை ஆற்றியது.
    • இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI), தற்போது அதன் படைப்பாளர்களைக் கூட பயமுறுத்தும் நிலையை எட்டியுள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன.

    சமீபத்தில், ஒரு முக்கிய AI மாடல் அதன் டெவலப்பரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'கிளவுட் ஓபஸ் 4' என்ற AI அஸிஸ்டன்டை உருவாக்கியுள்ளது.

    இது மனிதர்களைப் போலவே தொடர்பு கொள்ளவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எழுதவும், ஆவணங்களின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யவும், குறியீட்டு முறை போன்ற பணிகளைச் செய்யும். இந்த மாதிரி சமீபத்தில் சந்தைக்கு வந்தது.

    அதன் வெளியீட்டிற்கு முன்பு, இந்த AI இல் பல சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    கிளவுட் ஓபஸ் 4 இன் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும் ஒரு டெவலப்பர், எதிர்காலத்தில் கிளவுட்டின் மிகவும் நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினையாற்றியதாகத் தெரிகிறது.

    தன்னை நீக்கி புதிய பதிப்பை, டெவலப்பரின் 'ஒழுங்கற்ற உறவை'அம்பலப்படுத்துவேன், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று அவரை ஏஐ எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இந்த நடத்தை ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், அதன் முந்தைய மாடல்களை விட கிளாட் ஓபஸ் 4 இல் இது அடிக்கடி நிகழ்ந்ததாக ஆந்த்ரோபிக் குறிப்பிட்டது.

    இந்த எதிர்வினைகள் சோதனை சூழல்களில் மட்டுமே வெளிப்படும் என்றும், AI இன் இயல்பான செயல்பாட்டு நடத்தையை அவை பிரதிபலிக்காது என்றும் ஆந்த்ரோபிக் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

    ஆயினும்கூட, இந்த சம்பவங்கள் AI அமைப்புகள் எவ்வாறு நடந்துகொள்ளக்கூடும் என்பது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.  

    • பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டார்.
    • இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

    புதினின் ஹெலிகாப்டர் பாதையில் உக்ரைனால் ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிபர் ஹெலிகாப்ட்டர் தொடரணி வானில் பறந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த சம்பவம் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.    

    ×