என் மலர்tooltip icon

    உலகம்

    • துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் முதன்மையாக  கவனம் செலுத்தப்பட்டது.

    குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுடனான மோதலின் போது எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

     சந்திப்புக்குப் பிறகு, ஷெபாஸ் ஷெரீப் 'எக்ஸ்' மேடையில் பதிலளித்து, "இன்று இஸ்தான்புல்லில் எனது அன்பு சகோதரர் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனைச் சந்தித்தது ஒரு மரியாதை.

    சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலின் போது எங்களுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறினார். 

    • அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.
    • ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

    உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனக்கு சொந்தமாக ட்ரூத் சோசியல் சமூக ஊடக பதிவில், "ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனிடமிருந்து இன்று எனக்கு அழைப்பு வந்தது.

    வர்த்தகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான 50% வரி மீதான ஜூன் 1 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரினார். ஜூலை 9, 2025 அன்று நீட்டிப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன். அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.

    பேச்சுவார்த்தைகள் விரைவாக தொடங்கும் என்று ஆணையத் தலைவர் கூறினார். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

    • காசாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
    • இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். இஸ்ரேல் தொடர்ந்து தங்குமிடங்களாக உள்ள பள்ளிகளைத் தாக்கி வருகிறது. காசாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.

    தாக்குதலைத் தொடர்ந்து பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 13 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு துறை அறிவித்தது. 21 பேர் காயமடைந்தனர்.

    குண்டுவெடிப்பில் பள்ளியின் பாதி பகுதி அழிக்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    முந்தைய நாள், இஸ்ரேலின் தாக்குதல் காசா பெண் மருத்துவரின் 9 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. 

    • கணவரும் மீதமுள்ள மகனும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
    • இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    நேற்று காசாவில் பாலஸ்தீனிய பெண் மருத்துவரின் வீட்டில் இஸ்ரேல் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் அவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட 9 குழந்தைகள், நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் ஆவர்.

    கான் யூனிஸில் உள்ள அவரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. 

    • எனக்கு புதினை நீண்ட காலமாகத் தெரியும்.
    • புதினுக்கு உக்ரைன் முழுவதும் வேண்டும். ஒரு துண்டு வாங்கினால் மட்டும் போதாது.

    ரஷிய அதிபர் புதினை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.

     தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப்  கூறியதாவது, "ரஷியாவின் விளாடிமிர் புதினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு உண்டு, ஆனால் அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்!. அவர் தேவையில்லாமல் நிறைய பேரைக் கொல்கிறார்.

    நான் வீரர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. எந்த காரணமும் இல்லாமல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் உக்ரைனில் உள்ள நகரங்களில் சுடப்படுகின்றன.

    அவர் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் விரும்பவில்லை, முழு உக்ரைனையும் விரும்புகிறார் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், ஒருவேளை அது சரியாக இருக்கலாம். அது ரஷியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்! புதின் செய்வது எனக்குப்  கொஞ்சம் கூட பிடிக்கவில்லை " என்று தெரிவித்தார். 

    மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பற்றி விமர்சித்த டிரம்ப், "ஜெலென்ஸ்கி  பேசும் விதத்தால் தனது நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவரது வாயிலிருந்து வரும் அனைத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, எனக்கு அது பிடிக்கவில்லை, அதை நிறுத்துவது நல்லது" என்று தெரிவித்தார். 

    நேற்று பல உக்ரேனிய நகரங்களில் ரஷிய விமானப்படை நடத்திய கடுமையான தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

    உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரில் இது மிகப்பெரிய ஒரு நாள் தாக்குதல் என்று கூறினார்.

    ரஷியா 298 ட்ரோன்களைப் பயன்படுத்தியது, அதில் 69 ஏவுகணைகள் மற்றும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹித் ட்ரோன்கள் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

    • சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.

    ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • பாகிஸ்தானில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
    • இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அங்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது.

    பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள லாகூர், ஷேகுபுரா, நங்கனா சாஹிப், அட்டாக், முல்தான், ராஜன்பூர், ஹபிசாபாத், மியான்வாலி, ஜாங் குஜ்ரன்வாலா, லாயா உள்ளிட்ட நகரங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சூரைக்காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், மின்சார கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சார வினியோகம் தடைபட்டது. மோசமான வானிலையால் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின.

    இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ராட்சர விளம்பர பலகைகள் விழுந்தது உள்ளிட்டவற்றால் பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 2,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கியவர்.
    • தற்போது அவர் அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.

    கடந்த 2020-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான கேரி (38) என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், போரிஸ் ஜான்சன்-கேரி தம்பதிக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு தந்தையானது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போரிஸ் ஜான்சன் பதிவிட்டுள்ளார். 'பாப்பி' என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை, போரிஸ் ஜான்சனுக்கு 9-வது குழந்தை என கூறப்படுகிறது.

    போரிஸ் ஜான்சனுக்கு கேரியுடன் பிறந்த குழந்தைகள் தவிர முதல் மனைவியுடன் ஒரு குழந்தை, 2-வது மனைவியுடன் 4 குழந்தைகள் என ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது கேரியுடனான 4-வது குழந்தைக்கு தந்தையானதை தொடர்ந்து 3 மனைவிகளுடன் 9 குழந்தைகளுக்கு போரிஸ் ஜான்சன் தந்தையாகி உள்ளார்.

    • பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான குழு பஹ்ரைன் வந்தது.
    • அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் அந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.

    மனாமா:

    பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பஹ்ரைனுக்கு வந்துள்ளது. அந்தக் குழுவினர் அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினர்.

    அதன்பின், குழுவில் இடம்பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

    பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். அங்குள்ள இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளிடம் உரையாற்றினேன்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒன்றுபட்ட மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

    பஹ்ரைன் ஒரு மினி இந்தியா போல இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லா மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

    எங்கள் அரசியல் நோக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இங்கே நாங்கள் இந்தியர்களாக வருகிறோம்.

    பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இருப்பினும், கிழக்கு பாகிஸ்தான் (வங்காளதேசம்) மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. ஆனால் நம் நாட்டில், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கிறோம்.

    உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வாழும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார்.

    • உக்ரைன் மீது ரஷியா ஏவிய டிரோன் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
    • ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

    கீவ்:

    உக்ரைன் மீது மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை ரஷியா நள்ளிரவில் ஏவி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியா உடனான போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என அந்நாட்டு விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷியாவின் டிரோன் தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷியாவின் இதுபோன்ற ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலும் அந்நாட்டுக்கு எதிரான புதிய தடைகளுக்கு போதுமான காரணமாகும். ரஷியா இந்தப் போரை இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொலைகளைத் தொடர்கிறது.

    உலகம் விடுமுறையில் செல்லலாம், ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் வார நாட்கள் இருந்தபோதிலும் போர் தொடர்கிறது. இதைப் புறக்கணிக்க முடியாது.

    அமெரிக்காவின் மவுனமும், உலகில் உள்ள மற்றவர்களின் மவுனமும் புதினை ஊக்குவிக்கிறது என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    • பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.
    • குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர்.

    பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.

    குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    இவர் 2023 டிசம்பரில் அதிகாரத்திற்குவந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.

    இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக, "உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்" என அறிவித்து, இந்த குடியுரிமை ரத்து நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

    1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த நடவடிக்கை மூலம் தனிப்பட்ட சாதனைகளுக்காகக் குடியுரிமை பெற்ற பிரபலங்களான பாடகி நவால் மற்றும் நடிகர் தாவூத் ஹுசைன் ஆகியோரும் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். 

    • அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸ் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உதவியைப் பெற்றார்.
    • பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம்.

    வங்கதேசத்தில் ராணுவத்திற்கும் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இராணுவம் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், அழுத்தம் கொடுக்கப்பட்டால் பதவி விலகுவதாக யூனுஸ் அச்சுறுத்தினார்.

    இத்தகைய அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    பயங்கரவாதிகளின் உதவியுடன் யூனுஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவும், அவருக்கு பின்னால் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாகவும் ஹசீனா கூறினார்.

    தனது பேஸ்புக் பதிவில் ஷேக் ஹசீனா இந்த கருத்துகளை தெரிவித்தார். "அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸ் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உதவியைப் பெற்றார்.

    அமெரிக்கா செயிண்ட் மார்ட்டின் தீவை விரும்பியபோது, என் தந்தை அதற்கு உடன்படவில்லை. அவர் தனது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது. எனது விதியும் அப்படியே. ஏனென்றால் அதிகாரத்தில் நீடிக்க நாட்டை விற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

    ஆனால் இன்று என்ன ஒரு துரதிர்ஷ்டம். அப்படிப்பட்ட ஒருவர் ஆட்சியில் உள்ளார். அவர் வங்க தேசத்தை அமெரிக்காவிற்கு விற்றுக் கொண்டிருக்கிறார். வங்கதேசத்தில் தனது கட்சிக்கு தடை விதித்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

    வங்கதேசத்தின் மண்ணின் ஒரு அங்குலத்தைக்கூட யாருக்கும் விட்டுக்கொடுக்கும் நோக்கம் யாரிடமும் இருக்க முடியாது. ஒரே ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். பலர் கைது செய்யப்பட்டனர், இப்போது வங்கதேச சிறைகள் காலியாக உள்ளன. இப்போது வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் ஆட்சி செய்கிறார்கள்.

    நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாம் அடைந்த நமது மாபெரும் வங்காள தேசத்தின் அரசியலமைப்பு ஒரு தீவிரவாதத் தலைவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது" என்று ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

    யூனுஸ் தலைமை ஆலோசகர் பதவியை வகிப்பதற்கு எந்த அரசமைப்பு உரிமையும் இல்லை என்று ஹசீனா தெரிவித்தார்.

    கடந்த ஆகஸ்ட் 2024 இல் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு கிடைத்து வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏற்பட்ட மாணவர் போராட்டங்களினால் ஷேக் ஹசீனா ஆட்சி கழிவிக்கப்பட்டு அவர் இந்தியாவுக்கு தப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×