என் மலர்
உலகம்
- பாகிஸ்தான் தனது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியாவை கருதுவதாக அறிக்கை கூறுகிறது.
- வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான பேரழிவு ஆயுதங்கள் (WMD) தொடர்பான பொருட்களை வாங்குகிறது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA), மே 25, 2025 அன்று வெளியிடப்பட்ட '2025 உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு' என்ற வருடாந்திர அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றிய பல முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் தொடர்பான துணைக்குழுவிற்காக தயாரிக்கப்பட்டது.
இது பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்து விரிவாக விவாதிக்கிறது.
அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் முதன்மையான முன்னுரிமைகள் அண்டை நாடுகளுடனான எல்லை மோதல்கள், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பலூச் தேசியவாத போராளிகளின் அதிகரித்து வரும் தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்குதல் ஆகியவை ஆகும்.
கடந்த ஒரு வருடமாக, பாகிஸ்தான் பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தினமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் நிலைமை மேம்படுவதற்குப் பதிலாக மோசமாகிக் கொண்டே வருகிறது.
பாகிஸ்தான் தனது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியாவை கருதுவதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் இராணுவ சக்தியை எதிர்கொள்ள, பாகிஸ்தான் தனது இராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது, மேலும் போர்க்களத்தில் பயன்படுத்த அணு ஆயுதங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன், அதன் அணுசக்தி பொருட்களின் பாதுகாப்பு மற்றும் கட்டளை அமைப்பையும் மேம்படுத்தி வருகிறது.
இதற்காக, வெளிநாட்டு சப்ளையர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து அதிக அளவிலான பேரழிவு ஆயுதங்கள் (WMD) தொடர்பான பொருட்களை வாங்குகிறது.
இந்தப் பொருள் பெரும்பாலும் சீனாவிலிருந்து வந்து ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பாகிஸ்தானை அடைகிறது.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறியுள்ளது.

இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் பல கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன. இரு நாடுகளும் நவம்பர் 2024 இல் ஒரு புதிய விமானப் பயிற்சியையும் நடத்தின.
பிராந்திய மட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அணுசக்தியை அதிகரிக்க முயற்சிப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
ஆனால் பயங்கரவாதம் மற்றும் எல்லைப் பதட்டங்கள் காரணமாக, அதன் உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு இரண்டும் ஆபத்தில் உள்ளன. இந்த நிலைமை பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
- பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. மார்கலிவ்கா கிராமத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின.
- சாதாரண நகரங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தியுள்ளது ரஷியா.
ரஷியா மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை நள்ளிரவில் ஏவி உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இவ்வளவு உக்ரைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறினார்.
கீவ் நகரத்திலேயே நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். டிரோன் பாகங்கள் குடியிருப்பு கட்டிடங்களையும் ஒரு தங்குமிடத்தையும் சேதப்படுத்தின.

சைட்டோமிர் பகுதியில் இறந்தவர்களில் 8, 12 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறார்கள் அடங்குவர். க்மெல்னிட்ஸ்கியில் நான்கு பேரும், மைக்கோலைவில் ஒருவரும் இறந்ததாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. மார்கலிவ்கா கிராமத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின.
ரஷியாவின் நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கோபத்தை வெளிப்படுத்தினார். "சாதாரண நகரங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்தியுள்ளது ரஷியா. அந்நாட்டின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது" என்று கூறினார். ரஷியா மீது கடுமையான தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்..
- நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
- தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டன.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியது. தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த டிரோன்களை நடுவானில் இடைமறித்து ரஷியா அழித்தது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும் போது, இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டது. மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் 4 மணி நேரத்திற்குள் 95 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டன. மத்திய நகரமான துலாவிலும், மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் நகரத்திலும் வான் பாதுகாப்பு பிரிவுகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது என்று தெரிவித்தது.
மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் கூறும்போது, தலைநகருக்கு அருகில் 11 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றார்.
- ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
- அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தின் அதிகாரிகளாக நீங்கள் உள்ளீர்கள். ஏனென்றால் நான் அந்த ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட்டு, அமெரிக்காவின் எதிரிகளை நசுக்குவது மற்றும் நமது சிறந்த அமெரிக்கக் கொடியை பாதுகாப்பது போன்ற அதன் முக்கிய பணியில் நமது ராணுவத்தை கவனம் செலுத்த வைக்கிறோம்.
ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வடிவமைக்கும் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் அவற்றை உருவாக்குகிறோம்.
ஆனால் இதற்கு முன்பு ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது. அதை ரஷியர்கள் திருடினர். அப்போது மோசமான விஷயம் நடந்தது. ஆனால் தற்போது நாங்கள் அவற்றை நிறைய (ஏவுகணை) உருவாக்குகிறோம்.
அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல. அதன் முக்கிய பணி தேசிய பாதுகாப்பு ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார்.
- அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.
அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில், "வரி விதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது" என்று கூறினார்.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது. இந்த வரி விதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- தனது பதவியை முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
- ஆனால், அவரது ராஜினாமாவை யூனுஸ் ஆதரவாளர்கள் விரும்பவில்லை.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்தார்.
இடைக்கால அரசு பொறுப்பேற்று 6 மாதத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்ற விஷயத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே, தலைமை ஆலோசகர் பதவியை முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் யூனுஸ் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை. அடுத்த 5 ஆண்டுக்கு யூனுசே தலைமை ஆலோசகராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், வங்கதேச அரசியல் ஆலோசகர்கள் அடங்கிய அமைச்சரவை கூட்டம் முகமது யூனுஸ் தலைமையில் டாக்காவில் நேற்று நடந்தது. அதில், நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்தும், தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் பேசிய திட்டமிடல் ஆலோசகர் வஹிதுதீன் மஹ்மூத், நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு நடுவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து வருகிறோம். தலைமை ஆலோசகர் யூனுஸ் எங்கள் வழிகாட்டியாக இருந்து வழி நடத்தி வருகிறார். பல சவால்களையும் கடந்துதான் பணிசெய்து வருகிறோம். கூட்டத்தின்போது தலைமை ஆலோசகரின் ராஜினாமா குறித்த பேச்சு எழுந்தது. அந்த பதவியில் அவர் நீடிக்கவேண்டும் என வலியுறுத்தினோம். அவர் அதை ஏற்றுக்கொண்டார். இடைக்கால அரசின் தலைவராக அவர் நீடிப்பார் என தெரிவித்தார்.
- ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
- வங்க தேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
நைப்பியிதோ:
மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, வங்க தேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கடல் வழியாக இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லும் முயற்சியிலும் ரோகிங்கியாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வங்க தேசத்தின் கோக்ஸ் பசார் அகதிகள் முகாமில் வசித்து வந்த ரோகிங்கியாக்களில் 267 பேர் படகு மூலம் இந்தோனேசியாவுக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது அவர்கள் சென்ற படகு மியான்மர் கடற்பகுதியில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 201 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 66 பேர் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் கடந்த 9-ம் தேதி நடந்துள்ளது.
அதற்கு அடுத்த நாளான 10-ம் தேதி 247 ரோகிங்கியா அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மற்றொரு படகு கடலில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 226 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 21 பேர் உயிர் பிழைத்தனர். இந்த இரு நாட்களில் நடந்த படகு விபத்துகளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நாங்கள் பயத்திற்கு அடிபணிய மாட்டோம்.
- அவர்களுக்குப் புரியும் மொழியில் பதிலளிக்க கற்றுக்கொண்டோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து துல்லியமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்தடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்தியா அதனை முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது. பின்னர் இருநாட்டு ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த 10ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதனால் போர் பதற்றம் தணிந்தது.
இந்தியா பயங்கரவாத செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்தது ஏன்?. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி 33 நாடுகளின் தலைநகருக்கு 7 குழுக்கள் சுற்றுப் பயணம் செய்துள்ளது. ஜப்பானுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு சென்றுள்ளது. இந்த குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி இடம் பிடித்துள்ளார.
அபிஷேக் சர்மா பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து கூறியதாவது:-
நாங்கள் பயத்திற்கு அடிபணிய மாட்டோம். அவர்களுக்குப் புரியும் மொழியில் பதிலளிக்கக் கற்றுக்கொண்டோம். பயங்கரவாதம் வெறிபிடித்த நாய் என்றால், அதை காட்டுத்தனமாக கையாள்கிறது பாகிஸ்தான். இந்த காட்டுத்தனமான கையாளுபவரை சமாளிக்க நாம் முதலில் உலகை ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில் அது தொடர்ந்து பயங்கரவாதம் என்ற வெறித்தனமான நாய்களை இனப்பெருக்கம் செய்யும்.
இந்தியா பொறுப்புடன் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் அனைத்து பதில்களும் செயல்களும் துல்லியமாகவும், கணக்கிடப்பட்டதாகவும், தீவிரமடையாததாகவும் (இருநாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம்) இருந்தன.
இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
- வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.
- ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து பலர் படித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.
வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.
இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.
இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெல்ஜிய அரச அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன் கூறும்போது, "இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் முடிவின் தாக்கம் வரும் நாட்களில் தெளிவாகும். தற்போது நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
- இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
- ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷியாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன.
ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டு களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை துருக்கியில் நடந்தது.
ஆனால் பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்கு தல்களை நடத்தியது. நகரின் பல்வேறு இடங்களில் தாக்கு தல்கள் நடத்தப்பட்டது. இதனால் மக்கள் நிலத்தடி சுரங்கப்பாதை நிலையங்ளில் தஞ்சம் அடைந்தனர். கீவ்வின் ஒபோலோன் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது டிரோன் விழுந்து வெடித்தது.
சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் 2 இடங்களில் தாக்குதல் காரணமாக பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் துருக்கியில் நடந்த நேரடி பேச்சு வார்த்தையின்போது ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷியாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன. அதன்படி முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம் வடக்கு உக்ரைனில் உள்ள பெலாரஸ் எல்லையில் நடந்தது. இதில் இரு தரப்பில் இருந்தும் தலா 390 கைதிகள் பரிமாற்றம் செய் யப்பட்டனர்.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறும்போது, முதல் கட்டமாக 390 உக்ரேனியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வார இறுதியில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள். இது போரின் மிகப்பெரிய பரிமாற்றமாக மாறும் என்றார்.
- தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல.
- எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது.
ஆண்டுதோறும் மே 24 (இன்று) சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசங்கள் கடந்த உலக பந்தமான இது மனித உறவுகளிலேயே தனித்துவமானது.
தாய், தந்தை ஆகிய பந்தங்கள் ஒரு சில உணர்வுகளுக்குள் வரையறுக்கப்பட்டவை. அன்பு, கோபம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் நம்மால் சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகின்ற ஒரே ஜீவன் சகோதரனே.
தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல. நமக்காக யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நம்முடன் நமது பக்கம் நிற்கும் சகோதரனிடத்தில் நமக்கு கிடைக்கும் பாதுகாப்புணவர்வுக்கு ஈடேதும் இல்லை.

சகோதரன் என்பவன் வாழ்நாள் நண்பன். சகோதரன் உடனான சிறுவயது குறும்புகள், சண்டைகள் அன்பின் வெளிப்பாடு. அன்பின் தனித்துவமான வெளிப்பாடுகள் அவை. ஒருவருக்கொருவர் எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது. எதிர்பார்ப்பின்றி உருவான உறவு.
இன்று உலகெங்கிலும் மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவத்தை பலரும் வலியறுத்துகின்றனர். ஏனெனில் நட்பை விட சகோதரத்துவத்தின் பிணைப்பு ஆழமானது.
ஒரு நல்ல நண்பன் நூறு சகோதரர்களுக்கு சமமாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல சகோதரன் ஆயிரம் நண்பர்களுக்கு சமம்.
- பாகிஸ்தான் பிரதிநிதி, "தண்ணீர் என்பது உயிர், போரின் ஆயுதம் அல்ல" என்று தெரிவித்தார்.
- பயங்கரவாத தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்த பிறகு இந்திய அரசாங்கம் நடவடிக்கையை எடுத்தது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் பதட்டங்கள் முடிவுக்கு வந்தன.
இதற்கிடையே பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை ஆறுகள் மூலம் செல்லும் நதிநீர் நிறுத்தப்படுவதால் அந்நாட்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும். எனவே நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது.
இந்நிலையில் ஐநா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, "தண்ணீர் என்பது உயிர், போரின் ஆயுதம் அல்ல" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக பதிலளித்தார்.
சபையில் அவர் பேசுகையில், பாகிஸ்தானின் சதி நடவடிக்கைகள் பொதுமக்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களை வழங்கியுள்ளது.
1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை, பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட மறுநாளே, ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்த பிறகு இந்திய அரசாங்கம் நடவடிக்கையை எடுத்தது.
கடந்த ஆறரை தசாப்தங்களாக இந்தியாவிற்கு எதிராக மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது.
கடந்த நான்கு தசாப்தங்களில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர். இந்திய குடிமக்களின் உயிர்கள், மத நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்பை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது
உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான அதன் ஆதரவை நம்பகத்தன்மையுடனும் முழுமையாகவும் நிறுத்தும் வரை நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்படும்" என்று ஹரிஷ் தெரிவித்தார்.






