என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவுத்துறை"

    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின.
    • இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.

    2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் தோல்விக்குப் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வுக்கும் இஸ்ரேலின் மொசாத்-திற்கும் பங்கு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் குமார் கேத்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை எம்பியான குமார் கேத்கர் பிரபல பத்திரிகையாளரும் ஆவார்.

    இந்நிலையில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "2004 மக்களவை தேர்தலில் கட்சி 145 இடங்களையும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 206 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்திருந்தால், காங்கிரசால் 250 இடங்களைப் பெற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், 2014-ல் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது.

    காங்கிரசைப் பலவீனப்படுத்த 2014 தேர்தலுக்கு முன்பே சதி வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2009-ல் கிடைத்த இடங்களைவிடக் காங்கிரஸ் கட்சியின் இடங்கள் குறைய சில அமைப்புகள் தலையிட்டன.

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களது நலன்கள் பாதுகாக்கப்படும் என்று இந்த நிறுவனங்கள் நம்பின. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க சி.ஐ.ஏ-வும் மொசாத்தும் முடிவு செய்தன.

    இந்த அமைப்புகள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.

    மத்தியில் ஒரு பெரும்பான்மை அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின" என்று தெரிவித்தார்.  

    • அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
    • மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள்.

    பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவர் இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர்.

    மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

    சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறும் போது, மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. அவர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காணப்பட்டதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகி யுள்ளன.

    இந்த பகுதி மசூத் அசார் முதலில் வசித்த பாகிஸ்தானின் பஞ்சபர் மாகாணம் பஹவல்பூரில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    மசூத் அசார் தங்கியிருக்கும் இடத்தில் 2 மசூதிகளுடன், மதரசாக்கள், அரசினர் விடுதி, விருந்தினர் மாளிகைகளும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மசூத் அசார் சத்பரா சாலை பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி சிதைத்தது. இதில் பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் தலைமை முகாம் அடங்கும். இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள். மசூத் அசார் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இந்திய எல்லை அருகே மசூத் அசார் பதுங்கி இருப்பதால் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    • நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது.
    • செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புலனாய்வு தகவல்களை வழங்கியுள்ளது

    இந்தியா குறித்த தகவல்களை சீனா தங்களுக்கு வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவுடனான இராணுவ மோதலின்போது போது சீனா தங்களுடன் ஒத்துழைத்ததாகவும், இந்தியாவின் முக்கியமான உளவுத்துறை தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

    பதற்றமான காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை சீனா தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.

    "சீனா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை வழங்கியது. பரஸ்பர அச்சுறுத்தல் இருக்கும்போது, நாடுகளுக்கு இடையே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

     நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது. மூலோபாய ரீதியாக நெருக்கமாக இருக்கும் இரண்டு நாடுகள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வது இயல்பானது" என்று ஆசிப் கூறினார்.

    • சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
    • தற்போது, ​​ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.

    பாகிஸ்தான் மிகவும் ரகசியமான முறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளன.

    இந்த ஏவுகணைகள் 5,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உளவுத்துறை அமைப்பு அறிக்கையில், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்துர்'க்குப் பிறகு, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகளை குறிவைக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ரகசியமாக உருவாக்கி வருகிறது.

    பாகிஸ்தான் இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கவோ அல்லது வாங்கவோ முயற்சித்தால், அந்த நாடு எதிரியாக இக்கருதப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்ததாக அறிக்கை கூறுகிறது.

    அமெரிக்கா, தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாட்டையும் அதன் எதிரியாக அறிவிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. தற்போது, ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.

    சிறிது காலமாக, பாகிஸ்தான் முக்கியமாக குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

    தற்போது அந்நாட்டிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) இல்லை. 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான், மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரையிலான இடைநிலை ஏவுகணையான ஷாஹீன்-III ஐயும், 2023 ஆம் ஆண்டில், இடைநிலை ஏவுகணையான கௌரியையும் வெற்றிகரமாக சோதித்தது.

    இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூரின் போது 450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பு ஏவுகணையை (மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு தாக்கும் ஏவுகணை) சோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.

    கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. ஏவுகணைத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்குச் சொந்தமான நிறுவனமான தேசிய மேம்பாட்டு கழகம் மற்றும் மூன்று நிறுவனங்களுடன் வணிகம் செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் தடை செய்தது.

    பாகிஸ்தான் இத்தகைய ஏவுகணைகளை உருவாக்குவது அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா பாரபட்சமாக தங்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

    • பாகிஸ்தான் தனது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியாவை கருதுவதாக அறிக்கை கூறுகிறது.
    • வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான பேரழிவு ஆயுதங்கள் (WMD) தொடர்பான பொருட்களை வாங்குகிறது.

    இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

    அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA), மே 25, 2025 அன்று வெளியிடப்பட்ட '2025 உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு' என்ற வருடாந்திர அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றிய பல முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது.

    இந்த அறிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் தொடர்பான துணைக்குழுவிற்காக தயாரிக்கப்பட்டது.

    இது பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்து விரிவாக விவாதிக்கிறது.

    அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் முதன்மையான முன்னுரிமைகள் அண்டை நாடுகளுடனான எல்லை மோதல்கள், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பலூச் தேசியவாத போராளிகளின் அதிகரித்து வரும் தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்குதல் ஆகியவை ஆகும்.

    கடந்த ஒரு வருடமாக, பாகிஸ்தான் பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தினமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் நிலைமை மேம்படுவதற்குப் பதிலாக மோசமாகிக் கொண்டே வருகிறது.

    பாகிஸ்தான் தனது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியாவை கருதுவதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் இராணுவ சக்தியை எதிர்கொள்ள, பாகிஸ்தான் தனது இராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது, மேலும் போர்க்களத்தில் பயன்படுத்த அணு ஆயுதங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

    பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன், அதன் அணுசக்தி பொருட்களின் பாதுகாப்பு மற்றும் கட்டளை அமைப்பையும் மேம்படுத்தி வருகிறது.

    இதற்காக, வெளிநாட்டு சப்ளையர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து அதிக அளவிலான பேரழிவு ஆயுதங்கள் (WMD) தொடர்பான பொருட்களை வாங்குகிறது.

    இந்தப் பொருள் பெரும்பாலும் சீனாவிலிருந்து வந்து ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பாகிஸ்தானை அடைகிறது.

    பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறியுள்ளது.

    இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் பல கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன. இரு நாடுகளும் நவம்பர் 2024 இல் ஒரு புதிய விமானப் பயிற்சியையும் நடத்தின.

    பிராந்திய மட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அணுசக்தியை அதிகரிக்க முயற்சிப்பதாக அறிக்கை கூறியுள்ளது.

    ஆனால் பயங்கரவாதம் மற்றும் எல்லைப் பதட்டங்கள் காரணமாக, அதன் உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு இரண்டும் ஆபத்தில் உள்ளன. இந்த நிலைமை பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

    • பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர்.
    • ஜூன் 2024 இல் ஒரு வருடத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    உளவுத்துறைப் பணியகத்தின் (IB) தலைவரான தபன் குமார் தேகாவுக்கு இரண்டாவது முறையாக ஒரு வருட பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இன்று வெளியிடப்பட்ட உத்தரவில், அமைச்சரவையின் நியமனக் குழு, ஜூன் 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை, திரு. தபன் குமார் தேகாவின் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தபன் குமார் தேகா, 1988 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரி ஆவார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர்.

    ஜூன் 2022 இல் இரண்டு வருட காலத்திற்கு புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக இருந்தார். ஜூன் 2024 இல் ஒரு வருடத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அவருக்கு மேலும் 1 வருட பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

    • சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
    • ராணுவத்தினர் சோபியான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

    பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் பகுதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் இந்த சோதனை மூலம் 6 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    2 பேர் கைது:

    இந்நிலையில் காஷ்மீரில் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகளவு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நேற்று ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சோபியான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது டி.கே.போரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினரிடம் 2 பேர் சிக்கினார்கள்.

    பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்:

    அவர்களது உடமைகளை போலீசார் ஆய்வு செய்த போது அவர்கள் இருவரும் ஏராளமான வெடி பொருட் கள், ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 வெடி குண்டுகள், 43 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் அவர்கள் சில ஆவணங்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
    • பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம்.

    இந்திய பிரதமர் உத்தரவின்படி பாகிஸ்தானில் போர் தொடுத்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்திய நாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. பல ஆண்டுகாலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவுப்படி காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பேரணி உள்ளிட்டவைகளை நடத்த அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் நடத்திய பயங்கரவாத சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அந்த நாட்டை சேர்ந்த அமைச்சரே உறுதி செய்துள்ளார். திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக சொல்லி உள்ளார்.

    இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுத்தி அமைதி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. பயங்கரவாதம் எங்கும் இருக்கக் கூடாது. அதனை வேரறுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாகிஸ்தான் செயல்பாடுகள், பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    மும்பை தாக்குதல் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த தற்போது உள்ள பிரதமர் மோடி சம்பவ இடத்தை பார்வையிட்டு பிரதமர் என்பவர் 56 இன்ச் மார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என அப்போதைய பிரதமரை விமர்சனம் செய்ததை மறக்கமுடியாது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் காவல் துறை, ராணுவம் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தது. உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பப்பட்டது.
    • உளவுத்துறை தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளும் அரசு உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை தகவலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றதாகவும், அதைத் தொடர்ந்து அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்து செய்ததாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

    அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பப்பட்டதாக கார்கே தெரிவித்துள்ளார்.

    ஏப்ரல் 22, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள், 1 குதிரை ஓட்டி உயிரிழந்தனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது,

    தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். உளவுத்துறை தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளும் அரசு உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

    தாக்குதல் நடக்கவுள்ளதாக மூன்று நாள்களுக்கு முன்பே மோடிக்கு உளத்துறை தகவல் அளித்துள்ளது. தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே தெரிந்தும் காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாதது ஏன்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.  

    • பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
    • இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

    ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று ராணுவ தளபதிகளுடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்தார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலைத் திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணையம் மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதல் பாதையைத் தேர்வு செய்கிறது என்று அவர் கூறினார். 

    • ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.
    • இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (திங்கள்கிழமை) காலை, திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.

    பெட்டா காவல்துறையினரின் கூற்றுப்படி, மேகா, பத்தனம்திட்டாவில் உள்ள கூடல் பகுதியை சேர்ந்தவர். பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்தார். அவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

    ஒரு பெண் ரெயில் தண்டவாளத்தில் குதிப்பதைக் கண்டதாக ரெயில் லோகோ பைலட் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேகாவின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் கருவறை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
    • ராமர் கோவில் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 110 ஏக்கரில் சுமார் ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி இதற்காக அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 50 சதவீத வேலைகள் முடிந்து விட்டது.

    அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் மகரசங்கராந்தியின் போது கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

    கோவில் கருவறை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ராமர் கோவில் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாகவும் அவர்கள் ராமர் கோவிலை தற்கொலை படை தாக்குதல் மூலம் தகர்க்க சதி செய்து உள்ளதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. கோவிலை சுற்றிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அயோத்தியில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ×