search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shahbaz Sharif"

    • பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
    • கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் மின்பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது.

    இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், பொருளாதார நகரமான கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

    கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை நாடு முழுவதும் மின்இணைப்பு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் மின்வெட்டு காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மன்னிப்பு கேட்டார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நமது குடிமக்கள் அனுபவித்த சிரமத்திற்கு எனது அரசாங்கத்தின் சார்பாக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உத்தரவின் பேரில் மின்வெட்டுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

    • தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்.
    • உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    இஸ்லாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒருவருக்கு அவரது தாயின் இழப்பைக் காட்டிலும் பெரிதான இழப்பு என்று எதுவும் இருந்து விட முடியாது. தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே என உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    • அவர் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.
    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நாடு திரும்பினார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.

    இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை மந்தமாகின. இந்த சூழலில் ஊழல் வழக்கில் சுலைமான் ஷெஹ்பாசை கைது செய்வதற்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. அதே சமயம் இந்த வழக்கில் ஜாமீன் பெற 13-ந் தேதிக்குள் அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் லண்டனுக்கு தப்பியோடிய 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நேற்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், எனவே தனது பாதுகாப்பிற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

    • துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சதியின் பின்னணியில் பிரதமர், உள்துறை அமைச்சர் இருப்பதாக இம்ரான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஆளும் ஷபாஷ் செரீப் அரசுக்கு எதிராக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான்கான் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரி, கடந்த வாரம் தமது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை அவர் தொடங்கிய நிலையில், பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகரில் இம்ரான்கான் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தம்மை கொலை செய்யும் சதித் திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப‌க் கூடாது என அந்நாட்டு ஊடக‌ங்களுக்கு ஷபாஸ் ஷெரீப் அரசு தெரிவித்துள்ளது. தவறான தகவல் அளித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இம்ரான்கான் முயற்சிப்பதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒலிபரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி ஒளிபரப்பும் ஊடகங்களின் உரிம‌ம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஹம்சா ஷபாஸ் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பதவியேற்றார்.
    • இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    லாகூர் :

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷபாஸ் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததாக இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதை தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இம்ரான்கானின் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 369 உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் சட்டசபையில் பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்தது. அதன் கூட்டணி கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 185 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இம்ரான்கானின் கட்சி எளிதில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு சட்டசபையில் நடந்தது.

    இதில் பி.டி.ஐ. கட்சியின் சார்பில் களம் இறங்கிய சவுத்ரி பர்வேஷ் இலாஹிக்கு 186 ஓட்டுகள் கிடைத்தன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹம்சா ஷபாசுக்கு ஆதரவாக 179 பேர் ஓட்டுப்போட்டனர்.

    எனினும் சவுத்ரிக்கு ஆதரவாக வாக்களித்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி உறுப்பினர்களின் 10 ஓட்டுகள் செல்லாது என துணை சபாநாயகர் தோஸ்த் முகம்மது மசாரி அறிவித்தார். அதை தொடர்ந்து ஹம்சா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    பாகிஸ்தானில் ரூ.1,400 கோடி ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் குற்றவாளி என அந்நாட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. #ShahbazSharif #Pakistan #Corruption
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் (வயது 67). ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.

    இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவி வகித்தபோது, ஆசியானா வீட்டு வசதி திட்டத்தில், ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    அதேபோல் ரூ.400 கோடி மதிப்பிலான பஞ்சாப் சாப் சானி ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, மேற்கூறிய 2 ஊழல் புகார்கள் தொடர்பாக ஷாபாஸ் ஷெரீப் மீது அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை முகமை (லஞ்ச ஒழிப்பு போலீசார்) வழக்குப்பதிவு செய்தது.

    ஷாபாஸ் ஷெரீப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடமை கோர்ட்டில், ஆசியானா வீட்டு வசதி ஊழல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சையத் நஜாமுல் ஹாசன் வழக்கை விசாரித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். தேசிய பொறுப்புடைமை முகமை சார்பில் ஆஜரான வக்கீல் அலி ஜான்ஜூவா, ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றசாட்டுக்குரிய ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

    ஷாபாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அப்போது ஷாபாஸ் ஷெரீப்பின் வக்கீல், தனது கட்சிக்காரருக்கு உடல் நிலை சரி இல்லாததால், அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும், எனவே தண்டனை அறிவிப்பை ஒரு வாரத்துக்கு தள்ளிப்போட வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். #ShahbazSharif #Pakistan #Corruption
    1400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய ஊழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவல் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. #Pakistanhousingscam #Shahbazsharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

    பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.

    குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே  ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம்  ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

    இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.  அவரது விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் ஷாபாஸ் ஷரிப் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிபதியின் முன்னர் ஆஜரான ஷாபாஸ் ஷரிப், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு நான் பலகோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கிறேன். இதுவரை என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளால் என்மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரத்தையும் உருவாக்க முடியவில்லை என கூறினார்

    ஷாபாஸ் ஷரிப்பிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்குமாறு அரசுதரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    எனினும், ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவலை வரும் 30-ம் தேதிவரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி  நஜமுல் ஹஸன் உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
    ஊழல் வழக்கில் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். #NawazSharif #ShahbazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித்தலைவருமான நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் மனைவியின் மரணத்துக்காக பரோலில் வந்தார். பின்னர் அவருக்கு கடந்த மாதம் 19-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.



    முன்னதாக தனது மனைவியின் உடல் நலக்குறைவு மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட காரணங்களால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார். நவாஸ் ஷெரீப்பின் கட்சிப்பணிகளை அவரது சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப் கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப்பும் ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 நாள் காவல் விதிக்கப்பட்டது. இதனால் உரிய தலைமையோ, வழிகாட்டுதலோ இன்றி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் தவித்தனர். எனவே சுமார் 4 மாதங்களுக்குப்பின் நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். இதில் முதல் நிகழ்வாக கட்சியின் மத்திய செயற்குழுவை அவசரமாக கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே அவர் மீது போடப்பட்டு இருந்த தேசத்துரோக வழக்கு ஒன்று லாகூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அவர் கோர்ட்டில் ஆஜரானார்.  #NawazSharif #ShahbazSharif
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். #ShahbazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவராக ஷாபாஸ் ஷரீப்பை நியமனம் செய்ய 111 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என பாராளுமன்ற சபாநாயகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விரைவில் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
    பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. #PakistanElection #ImranKhan #ShabazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதனால் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 25-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.



    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே ஆட்சியை கைப்பற்ற ஒரு கட்சியோ அதன் கூட்டணியோ 172 இடங்களில் வென்றாகவேண்டும்.



    272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

    ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    நாடாளுமன்ற தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக களம் காண்கின்றன.

    பாகிஸ்தானைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கே அதிக அதிகாரம் உண்டு என்றாலும், ராணுவமும் ஆட்சியில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவருடைய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க ராணுவம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அதனால்தான் வாக்குச்சாவடிகள் பாதுகாப்புக்கு ராணுவத்தை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் தேர்தல் கமிஷனும், ராணுவமும் மறுத்துள்ளன.

    கடந்த சில ஆண்டுகளாக இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தான் மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து உள்ளது. இதனால் அவருடைய கட்சிக்கும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது இடத்தில்தான் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளது.

    அண்மையில் எடுக்கப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் ஒன்றில், இம்ரான்கான் கட்சிக்கு 30 சதவீத ஆதரவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு 27 சதவீத ஆதரவும் மற்றொரு கருத்து கணிப்பில், நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு 26 சதவீதமும், இம்ரான்கான் கட்சிக்கு 25 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையக் கூடிய வாய்ப்பும் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் ஆட்சி அமைப்பதில் சிறு சிறு கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

    இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    கடந்த வாரம் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் குண்டுவெடித்து 151 பேர் பலியானதால் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #PakistanElection #ImranKhan #ShabazSharif  #tamilnews
    பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்விக்கு முன்னாள் பிரதமர் அப்பாசி நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் என பதில் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தலுக்கு முந்தைய வன்முறை சம்பவங்கள் அங்கு நடந்து வருகின்றன. 172 இடங்களில் வெற்றி பெறுகிற கட்சி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும்.

    தற்போது நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.



    கருத்துக்கணிப்புகளில் நவாஸ் ஷெரீப் கட்சி முந்துகிறது.

    இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழலில் பதவி இழந்தபோது பிரதமர் பதவிக்கு வந்த அப்பாசியிடம், ‘தி டான்’ நாளேடு தரப்பில் சிறப்பு பேட்டி கண்டனர். அப்போது “பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “ஷாபாஸ் ஷெரீப் தான் (இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி) அடுத்த பிரதமர். இருப்பினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பிரதமர் யார் என்கிற விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி இறுதி முடிவு எடுப்போம்” என பதில் அளித்தார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோருக்கு எதிரான வழக்கில் இதுவரை இல்லாத வகையில் ஒருதலைப்பட்சமாக வழக்கு விசாரணை நடைபெற்றது” என்றும் அவர் சாடினார்.

    முன்னாள் உள்துறை மந்திரி சவுத்ரி நிசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காதது பற்றிய கேள்விக்கு அப்பாசி பதில் அளிக்கையில், “அவர் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஒவ்வொருவரும், ஏன் நவாஸ் ஷெரீப், ஷாபாஸ் ஷெரீப், மரியம் நவாஸ் உள்ளிட்டவர்களே டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தனர்” என்று கூறினார்.  #tamilnews 
    வடகொரியாவும் அமெரிக்காவும் சிங்கப்பூரில் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் தம்பி குறிப்பிட்டுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதால் அவரது தம்பி ஷாபாஸ் ஷரிப் கட்சி தலைவர் பதவியை ஏற்றுள்ளதுடன் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.



    இந்நிலையில்,  சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பரம எதிரிகளாக இருந்து வந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என ஷாபாஸ் ஷரிப் குறிப்பிட்டுள்ளார்.

    ‘கொரியா போரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே அமெரிக்காவும் வடகொரியாவும் பரம எதிரிகளாக இருந்து வந்துள்ளன. அணு ஆயுத வலிமையை காட்டி ஒருநாட்டை மற்றொரு நாடு அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதம் என்ற கொள்கையை கைவிட்டு வடகொரியாவும் அமெரிக்காவும் அமர்ந்துப் பேசி சமாதானம் செய்துகொள்ள முடியுமானால், காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கி, அதே பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கையாள கூடாது?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
     
    நமது பிராந்தியத்தில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் கனிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதை சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துக்கு உடன்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஷாபாஸ் ஷரிப் வலியுறுத்தியுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
     
    ×