என் மலர்
உலகம்

சிந்து நதி நீரைத் தடுக்க இந்தியா அணை கட்டினால், அதைத் தாக்கி அழிப்போம் - பாகிஸ்தான் அமைச்சர்
- நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்
- பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நதிநீர் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிந்து நதியின் நீரை இந்தியாவிற்குத் திருப்பிவிடுவதற்காக கட்டப்படும் எந்தவொரு கட்டமைப்புகளும் அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
ஜியோ நியூஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் பங்கான தண்ணீரை இந்தியா திருப்பிவிட முயற்சிப்பது அவர்களின் நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று கூறினார்.
"இந்தியா அத்தகைய கட்டமைப்பை (அணையை) உருவாக்க முயற்சித்தால், பாகிஸ்தான் அதை அழித்துவிடும்" என்று ஆசிப் கூறினார்.
நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், இரத்தம் ஓடும் என்று தெரிவித்திருந்தார்.