என் மலர்tooltip icon

    உலகம்

    • அமேசான் தனது ஊழியர்களில் 10 சதவீதமான 30,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
    • அதன்படி, கடந்த அக்டோபரில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் உலக அளவில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு அக்டோபரில் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களில் 10 சதவீதமான 30,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, கடந்த அக்டோபரில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது மற்ற நிறுவன ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமேசான் நிறுவனம் மீண்டும் ஒரு பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 16,000 ஊழியர்களை வரும் 27-ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரியும் 2,000 பேருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது.
    • நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும்.

    டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை. ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை. நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் நமக்கு தேவையும் இல்லை என்றார்.

    டிரம்பின் கருத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறும்போது, டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது. அந்த கருத்து அவமானகரமானவை மற்றும் வெளிப்படை யாகவே அதிர்ச்சியூட்டு பவை. இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

    அதேபோல் இங்கிலாந்து இளவரசர் ஹாரி கூறும் போது, "ஆப்கானிஸ்தானில் நான் பணியாற்றினேன். அங்கு வாழ்நாள் முழுவதும் நண்பர்களை உருவாக்கினேன். அங்கு நண்பர்களை இழந்தேன். நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும் என்றார்.

    • விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.
    • அவர்களில் ஒருவர் 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், லாரன்ஸ்வில் பகுதியில் நடந்த குடும்பத் தகராறில், இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார்.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் தனது மனைவி மீமூ டோக்ரா (43) மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தவர் 51 வயதான விஜய் குமார்.

    கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

    அங்கு வைத்தும் இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, உறவினர்களான கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

    துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் வீட்டில் விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.

    அவர்களில் ஒரு குழந்தை 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்து விஜய் குமாரை கைது செய்தனர். குழந்தைகள் மூவரும் காயமின்றி தப்பினர்.

    அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளது. 

    • இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது.
    • ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

    அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்துள்ளது என்றும் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரஷிய எண்ணெயை வாங்கியதற்காக நாங்கள் இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம். தற்போது ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன.

    இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது. அது ஒரு வெற்றியாகும். இந்தியாவின் மீதான வரிகள் இன்னும் அமலில் உள்ளன. அவற்றை நீக்குவதற்கு ஒரு வழி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.

    இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தற்போதைய 50 சதவீத வரி, 25 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று ஸ்காட் பெசென்ட் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    • அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும்.
    • உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும்.

    அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.

    வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு வரை கடும் பனிப்பொழிவு இருக் கும் என்றும் திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் இந்த பனிப்புயல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக இருந்தன. 

    பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்க ளுக்குப் பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும்.
    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது.

    போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்தார். மேலும் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படையான ஆர்மடா செல்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலையும் எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போர் என்று கருதுவோம். இந்த முறை எந்தவொரு தாக்கு தலையும் வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத, துல்லியமான, இயக்கவியல் ரீதியான என்று அதை அவர்கள் எப்படி அழைத்தாலும் சரி எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம்.

    அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும். எங்களை தாக்கினால் அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடியை கொடுப்போம்.

    மேலும் இதை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான மிகக் கடுமையான முறையில் நாங்கள் பதிலடி கொடுப்போம். அமெரிக்காவின் ராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்காக அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்.

    ஆனால் எங்கள் ராணுவம் மோசமான சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது. இதனால்தான் ஈரானில் அனைத்தும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப் பட்டு உள்ளன என்றார்.

    அதேபோல் ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். 

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது என்றார்.  

    • அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.
    • வரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    பாகிஸ்தானில் திருமண விழாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்

    பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.

    இவரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.   

    • ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பு கடந்த ஆண்டில் உலக நாடுகள் பெற்ற அன்னிய நேரடி முதலீடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • சீனா தொடர்ந்து 3-வது ஆண்டாக 8 சதவீத சரிவை சந்தித்து உள்ளது.

    நியூயார்க்:

    ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பு கடந்த ஆண்டில் உலக நாடுகள் பெற்ற அன்னிய நேரடி முதலீடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா கடந்த ஆண்டு பெற்ற அன்னிய நேரடி முதலீடு 73 சதவீதம் அதிகரித்து 47 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.4.31 லட்சம் கோடி) இருந்தது என தெரிவித்து உள்ளது.

    முக்கியமாக, நாட்டின் சேவைகள் மற்றும் உற்பத்தி துறையில் நிகழ்ந்த பெரிய முதலீடுகள் காரணமாகவும், நாட்டை உலகளாவிய வினியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளாலும் இந்த அதிகரிப்பு நிகழ்ந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து இருந்த நிலையில் சீனா தொடர்ந்து 3-வது ஆண்டாக 8 சதவீத சரிவை சந்தித்து உள்ளது. அந்த நாடு கடந்த ஆண்டில 107.5 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    • மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • தொடர் தேடுதலுக்கு பிறகு விமானம் புலுசராங் மலையில் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு கண்காணிப்பு பணிக்காக கடந்த சனிக்கிழமை சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர்.

    தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டது.

    இந்நிலையில், தொடர் தேடுதலுக்கு பிறகு விமானம் புலுசராங் மலையில் மோதி விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன்பின் விமானத்தில் இருந்த 10 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, விமான விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    • ஜப்பானில் பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • சனே தகைச்சிக்கு மக்களிடையே 70 சதவீதம் ஆதரவு உள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபரில் பதவியேற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

    நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டகாய்ச்சி உறுதி அளித்துள்ளார்.

    இந்நிலையில், ஜப்பானிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்தார். அங்கு பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.


    • காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
    • இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்தது.

    இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை. டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

    • இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு
    • அமெரிக்கா 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை

    அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.

    பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு என்று அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை, இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் காணவில்லை என்று வாஷிங்டன் (அமெரிக்கா) கூறியுள்ளது. 

    ×