என் மலர்
உலகம்
- ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா எச்சரிக்கை.
- அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஹவுதி மிரட்டல்.
பொருளாதார நெருக்கடி காரணமாக ஈரானில் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரான் அரசு வன்முறையை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. அதற்கேற்ப அமெரிக்க போர்க்கப்பல் ஈரானை நோக்கி விரைந்துள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, "Soon" என குறிப்பிட்டுள்ளது. ஆனால் விரிவான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடல் வழியாக சென்ற 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.
- டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடுவது என்ற நிலையை அடைவது இரு நாடுகளுக்கும் சரியான தேர்வு.
- இருநாட்டு உறவு உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தனது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியா- சீனா உறவுகள் இரு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் உள்ள அடிப்படை நலன்களுக்கு ஏற்ப தொடர்ந்து மேம்பட்டு வளர்ந்து வருகிறது. இது உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நல்ல அண்டை நாடுகளாகவும், ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் இருப்பது, மேலும் 'டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடுவது' என்ற நிலையை அடைவது ஆகியவையே சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் சரியான தேர்வு என்று சீனா எப்போதும் நம்புகிறது.
இவ்வாறு ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
- ஒரே வீட்டில் இருந்த 15 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
- கொலை வெறி தாக்குதல் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சமீப காலமாக பயங்கரவாத குழுக்கள், பொது மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் கிழக்கு காங்கோவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
ஏ.டி.எப். எனப்படும் கூட்டணி ஜனநாயகப் படை நடத்திய இந்த தாக்குதலில், ஒரே வீட்டில் இருந்த 15 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
இடுரி மாகாணத்தின் இருமு பிரதேசத்தில் உள்ள அபாகுலு கிராமத்தில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேல்ஸ் வோன்குட்டு நிர்வாகப் பகுதியில் மேலும் 3 பேர் என மொத்தம் 25 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வெறி தாக்குதல் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டாவிற்கும் காங்கோவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் செயல்படும் ஏ.டி.எப். ஆயுதக் குழு, பல பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளது.
உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனியின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் இருந்து இந்தக் குழு வளர்ந்தது. ஆனால் உகாண்டாவின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு இவர்கள் காங்கோ நாட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இக்குழு 100க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று தொடர் தாக்குதல்களை நடத்தியது. உகாண்டா மற்றும் காங்கோ நாட்டு ராணுவ படைகள் இந்தக் குழுவிற்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
- ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாக கூறப்படுகிறது
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாக கூறப்படுவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது
- குல் பிளாசாவில் உள்ள கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது.
- இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ.ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 17-ம் தேதி இரவு திடீரென இங்கு தீவிபத்து ஏற்பட்டது.
குல் பிளாசாவில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படும் கடைகள் உள்பட கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல்வேறு கடைகளுக்குப் பரவியுள்ளது என அதிகாரி தெரிவித்தார்.
சம்பவத்தன்று, தீப்பிடித்து கரும்புகை பரவியதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், வணிக வளாக தீவிபத்தில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், தீ விபத்தில் சிக்கிய வணிக வளாகத்தில் மீட்புப் பணிகள் முடிந்துள்ளன என தெரிவித்தார்.
- வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் வினியோகம் செய்யும் லாரிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
- இதனால் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 2,000 லாரிகளே மாலிக்குள் நுழைந்துள்ளன.
பமாகோ:
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் எல்லைப் பகுதியில் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.
இந்தக் குழுவினர் வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் வினியோகம் செய்யும் லாரிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 2,000 லாரிகளே மாலிக்குள் நுழைந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 4,000 லாரிகள் குறைவு.
எனவே மாலியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், இதனை சமாளிக்க பங்கீட்டு முறை எரிபொருள் வினியோகத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
அதன்படி கார்களில் 3 நாளுக்கு ஒருமுறையும், மோட்டார் சைக்கிள்களில் 2 நாளுக்கு ஒருமுறையும் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- இந்தியா- ஈரானின் உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது
பொருளாதார நெருக்கடியால் டிசம்பர் 28 முதல் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வந்தது.
இந்தத் தீர்மானத்தின் மூலம் ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தும்.
மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், 25 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி,"இந்திய அரசின் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மஜீத் ஹக்கீம் இல்லாஹி, இந்தியா- ஈரானின் உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
- நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்-கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக உறவு வைத்து கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடியாக வீடியோ ஒன்றை மார்க் கார்னி வெளியிட்டார்.
அதில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் பேசியதாவது:-
வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். கனடியர்கள் தங்கள் பணத்தை உள்நாட்டில் செலவழித்து உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்க ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சஞ்சல் சந்திர பவுமிக் இரவு தான் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
- உள்ளே சென்று பார்த்த போது சஞ்சல் சந்திர பவுமிக் தீயில் கருகி சடலமாக கிடந்தார்.
வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். குமில்லா மாவட்டம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சல் சந்திர பவுமிக்(வயது 23). இவர் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். சஞ்சல் சந்திர பவுமிக் இரவு தான் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் கடையின் ஷட்டரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியது. இதில் கடைக்குள் தீ பரவியதில் சஞ்சல் சந்திர பவுமிக் சிக்கி கொண்டார்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது சஞ்சல் சந்திர பவுமிக் தீயில் கருகி சடலமாக கிடந்தார்.
வாலிபரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதற்கு காரணமான வர்களை உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட் டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- பனிப்புயலால் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
- பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும், நாளையும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூமெக்சிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும் என்றும் மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் தாக்க தொடங்கி உள்ளது. அங்கு பெரிய அளவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது.
பல இடங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மரங்களில் பனி உறைந்ததால் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த மின்வெட்டு லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களை கடுமையாக பாதித்துள்ளது.
போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை குளிர்காலப் புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பனிப்புயல் தாக்குதல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய் யப்பட்டன. ஓக்லஹோமா நகரில் உள்ள வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலை யத்தில் அதிகளவில் விமா னங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்த பனிப்புயல் அமெரிக்காவை முடக்கி போட்டு உள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
- உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
டான்பாஸ் உள்ளிட்ட கைப்பற்றிய பிராந்தியங்களை ரஷியா விட்டுத் தர மறுப்பதால் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் நேற்று உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.
குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு குளிர்காலம் என்பதால் மக்கள் மின்சாரமின்றி கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
- கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
- அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர்.
அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இச்சோதனையில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மினசோட்டா மாகாணத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மின்னபொலிஸ் நகரில் போராட்டம் தீவிரமாக உள்ளது. அங்கு கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
அவர் அதிகாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மின்ன பொலிஸ் நகரில் வாலிபர் ஒருவரை குடியேற்ற துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். குடியேற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி(வயது 37) என்ற வாலிபர் தனது செல்போனில் அதிகாரிகளை வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர். இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி தன்னிடம் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது, "மின்ன பொலிஸ் நகரில் ஒரு கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அதிகாரிகளை அணுகினார். அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் அதிகாரிகளை தாக்கினார். அப்போது அதிகாரி ஒருவர் தற்காப்புக்காகச் சுட்டார்" என்று தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது,குடியேற்ற துறை அதிகாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் மினசோட்டர் கவர்னர், மேயர் ஆகியோர் கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டியிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாலிபர் சுட்டுக் கொல்லப் பட்டதை யடுத்து மினசோட்டாவில் போராட் டங்கள் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.






