என் மலர்
உலகம்

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: வாலிபரை சுட்டுக்கொன்ற குடியேற்ற துறை அதிகாரிகள்
- கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
- அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர்.
அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இச்சோதனையில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மினசோட்டா மாகாணத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மின்னபொலிஸ் நகரில் போராட்டம் தீவிரமாக உள்ளது. அங்கு கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
அவர் அதிகாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மின்ன பொலிஸ் நகரில் வாலிபர் ஒருவரை குடியேற்ற துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். குடியேற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி(வயது 37) என்ற வாலிபர் தனது செல்போனில் அதிகாரிகளை வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர். இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி தன்னிடம் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது, "மின்ன பொலிஸ் நகரில் ஒரு கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அதிகாரிகளை அணுகினார். அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் அதிகாரிகளை தாக்கினார். அப்போது அதிகாரி ஒருவர் தற்காப்புக்காகச் சுட்டார்" என்று தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது,குடியேற்ற துறை அதிகாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் மினசோட்டர் கவர்னர், மேயர் ஆகியோர் கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டியிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாலிபர் சுட்டுக் கொல்லப் பட்டதை யடுத்து மினசோட்டாவில் போராட் டங்கள் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.






