என் மலர்
உலகம்
- 800 பேரின் மரண தண்டனை நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- அப்படி எண் இல்லவே இல்லை என்கிறார் ஈரான் தலைமை வழக்கறிஞர்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக அதிகரித்தது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் பலர் உயிரிழந்தனர்.
போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே தன்னுடைய தலையீடு காரணமாக ஈரான் 800 பேரின் மரண தண்டனையை நிறுத்தியுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் சொல்வது பச்சைப் பொய் என ஈரான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "டிரம்ப் சொல்வது தவறானது. அப்படிப்பட்ட எந்த எண்ணும் இல்லை. மேலும் நீதித்துறை அப்படிப்பட்ட எந்த முடிவையும் எடுக்கவில்லை" என்றார்.
ஈரானில் நாடு தழுவிய போராட்டம் காரணமாக மிகப்பெரிய அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட சிலர் மரண தண்டனை குற்றச்சாட்டு எதிர்கொண்டுள்ளனர் என செய்திகள் வெளியானது.
- சிறுவனை பகடையாக வைத்து வீட்டுக்குள் இருந்த தாயையும் வெளியே வரவழைத்து கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர்.
- 5 வயது சிறுவனைத் தடுப்புக்காவலில் வைத்தது மிகவும் எல்லை மீறிய செயல் என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் ஆளுகையின் கீழ் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது.
ICE - குடிவரவு அதிகாரிகள் ஏகபோக அதிகாரம் பெற்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, காரை விட்டு இறங்க மறுத்ததாக 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது சிறுவன் லியாம் கோனேஜோ ராமோஸ் பள்ளி முடிந்து தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அவர்களை வழிமறித்து ICE அதிகாரிகள்இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பகடையாக வைத்து வீட்டுக்குள் இருந்த தாயையும் வெளியே வரவழைத்து கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால் சிறுவனின் தந்தை தனது மனைவியை கதவை திறக்க வேண்டாம் என வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
இதன்பின் சிறுவனையும் தந்தையையும் ICE தடுப்புக்காவலில் அடைத்தனர். சிறுவனை அதிகாரிகள் பகடையாக பயன்படுத்தியது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவனின் தந்தை முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருந்ததாக குற்றம்சாட்டி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆனால் அவர்களின் குடும்ப வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த லியாமின் குடும்பம், புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதனர், அதன் பிறகே அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
ஆனாலும், அமெரிக்க குடியேற்றத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது. இருவரையும் அதிகாரிகள் டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
லியாம் மட்டுமின்றி, இரண்டு 17 வயது சிறார்கள் மற்றும் ஒரு 10 வயது சிறார் என மொத்தம் நான்கு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவன் பயின்று வந்த கொலம்பியா ஹைட்ஸ் பள்ளி கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் தெரிவித்தார்.
நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் லியாமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5 வயது சிறுவனைத் தடுப்புக்காவலில் வைத்தது மிகவும் எல்லை மீறிய செயல் என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது
- இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.
நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை கடந்த ஆகஸ்டில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஜனவரி 19 முதல் சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வரும் நிலையில் நேற்று இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
அங்கு வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
முன்னதாக மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, போரை நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சாடினார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என்றும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் இருவர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு மத்தியில் உக்ரைனின் தென்கிழக்குப் பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
- இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
டாவோஸ்:
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளனர்.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்து விட்டது.
- காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
- உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைய சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாமிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேருகின்றன.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
- இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க தினம் அனுசரிக்க பட்டு வருகிறது.
- இதில் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் என 3 பேர் கொல்லப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த டிசம்பர் 14 அன்று 2 நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
யூத பண்டிகையின்போது நடந்த இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க தினம் அனுசரிக்கபட்டு வரும் நிலையில் இன்று மதியம் மீண்டும் துப்பாக்கிசூடு நடந்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்கெல்லிகோ என்ற நகரில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த சிறிய நகரில் மொத்தமே 1500 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
இதில் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் என 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உயிரிழந்த 2 பெண்களில் ஒருவரின் முன்னாள் காதலன் என்றும் இது தனிப்பட்ட பகையால் நடந்தது என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் AI படத்தை டிரம்ப் பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவை கனடா பிரதமர் சாடியிருந்தார்
கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மகனாக இணைக்கவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிற நாடுகளை அச்சுறுத்த பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவை கனடா பிரதமர் சாடியிருந்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான இலவச சலுகைகளை பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
- முகாம் வேன்கள், கார்கள், கூடாரங்கள் மீது பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்தது.
- மண்ணில் அடித்து செல்லப்பட்டு புதைந்தன.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் மவுங்கானுய் மலை உள்ளது.
இந்த மலையடிவாரத்தில் உள்ள மவுவோ பகுதியில் பிரபல சுற்றுலா முகாம் தளம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் முகாம்களை அமைத்து தங்குவார்கள்.
இந்த நிலையில் மலையடிவாரத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முகாம் வேன்கள், கார்கள், கூடாரங்கள், ஒரு குளியலறை ஆகியவை மீது பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்தது.
இதனால் அந்த முகாம்கள், வாகனங்கள் மண்ணில் அடித்து செல்லப்பட்டு புதைந்தன. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.
- கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்தது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு கடந்த 17-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.
இந்த நிலையில் ஒரே கடையில் 30 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
- போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் கடந்த அக்டோபர் 10 போர் நிறுத்தம் ஏற்பட்ட போதும் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்கும் உதவிக் குழுக்களுக்கும் இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் மக்கள் சொற்ப நிவாரண பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கும் அலைமோதி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய 3 வெவ்வேறு தாக்குதல்களில் 3 பத்திரிகையாளர்கள், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
சாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்கள் சென்ற அந்த வாகனம் டிரோன்களைப் பயன்படுத்தி ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாகவும், அதனாலேயே வான்படை அந்த வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் இஸரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல் முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கு காசா பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை இஸரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலையில் அவன் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
அக்டோபர் 10 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசாவை நிர்வகிக்க டிரம்ப் உருவாக்கிய 'அமைதி'க் குழுவில் இஸ்ரேல் இணைத்துள்ளது.
- சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது.
- பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர்.
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவருடன் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர். எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்படப் போகிறது என்று கூறினார்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
- இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.
ஜெருசலேம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.
இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இக்குழுவில் இணையும் 8-வது நாடு இஸ்ரேல் ஆகும். இந்த வாரியத்தில் பிரதமர் நேதன்யாகு இணைய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அவரது அலுவலகம் நேற்று அறிவித்தது.
டிரம்பின் இந்த வாரியத்தில் அமீரகம், மொராக்கோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இணைய ஒப்புதல் தெரிவித்தன.






