என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்
    • மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தலையொட்டிதான் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் கொடுக்க அரசு முன்வந்துள்ளது' என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், 

    "அவருக்குதான் எப்போதுமே பயம். அவர் இனி வரவே முடியாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார். தற்போது பாஜகவின் அடிமையாகிவிட்டார். அவர் எது வேண்டுமானாலும் கூறுவார். ஆனால் கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக.

    படிக்கின்ற மாணவர்கள் இந்த காலக்கட்டத்திலேயே அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட திட்டங்கள். அதை யார் வேண்டுமானாலும் குறை கூறட்டும். அதும் அவர் சொல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் செய்துள்ள சாதனைகளை மக்கள் அறிவார்கள். அதனால் அவரது பேச்சு எப்போதும் எடுபடாது." என தெரிவித்தார். 

    • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில்,டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது

    2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிசம்பர் 16 முதல் 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

    • தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. 

    • பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும்.
    • அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வைக்காக வழங்கப்பட்டது.

    டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் ஆல்ஃபிரட் நோபல் தனது கண்டுபிடிப்பு மனிதர்களை கொல்ல பயன்படுத்துவது குறித்து வருத்தமடைந்து தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு 1895-இல் நிறுவியதே நோபல் பரிசு. 1896 இல் அவரது மறைவுக்கு பின் அவரின் உயிலின்படி 1901 தொடங்கி வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது உலகின் உயரிய அங்கீகாரமாகக் உருவெடுத்துள்ள நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.3 கோடி வழங்கப்படும். 

    அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. 

    அந்த வகையில், இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

    இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. 

    குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.

    உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    László Krasznahorkai

    2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.

    பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர், பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.   

    தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.

    இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ -வுக்கு வழங்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.

    முன்னதாக  இந்த வருடம் 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வந்தபோதும் அவருக்கு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 

    • திராவிட மரபின் சாம்பியன் கருணாநிதி.
    • இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், 

    "உலகில் முத்தழிழ் அறிஞர் கருணாநிதி போன்ற ஆளுமையை காண்பது அறிவு. மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். திராவிட மரபின் சாம்பியன் கருணாநிதி. சமூக நீதிக்கும், நல்லாட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, 'இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்' என்று புகழ்ந்தார். அது  கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும். 

    தஞ்சாவூர் கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவர். 1957 - 2016 வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராதவர். அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர், நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை." என தெரிவித்தார். 

    • மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
    • பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரஜ்வல் ரேவண்ணா யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது பெயர். அரசியல் பின்புலத்தை வைத்து, பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய முன்னாள் மக்களவை எம்பி.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது. 

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆனால், கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

    இதன் பிறகு, ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகவுடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பை அறிவித்தது.

    அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கிய மறுநாளே அறிவிக்கப்பட்டது. 

    அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(n)-ன் கீழ் (பாலியல் வன்கொடுமை) குற்றத்திற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    மேலும் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. மொத்த அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தில், ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்பட இருந்த நிலையில், டிசம்பர் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தேர்வு மையங்கள் மாற்றம் சார்ந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

    தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் 2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்பட இருந்த நிலையில், டிசம்பர் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெற உள்ளது. 

    இந்நிலையில் இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

    நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்பாடு மற்றும் அதன் தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறை தீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் தேர்வு மையங்கள் மாற்றம் சார்ந்த கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    • 10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்குகிறது.
    • 20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    துபாய்:

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலக கோப்பையில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், 20 ஓவர் தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வானது.

    இவை 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் இன்று மாலை 6.15க்கு தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • டிக்டாக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியது
    • இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்கக்கூடும்

    "உனக்கு ஆற தெரியுமா? ஆறு(ம்) தெரியாது, ஏழு தெரியாது. 8 தெரியும், 9 தெரியும், 10 தெரியும்" என்பது வடிவேலு காமெடி. ஆனால் இப்போது அது காமெடி இல்லை. அதுதான் உண்மை. உங்களுக்கு புரியுமாறு சொன்னால், கஜென் ஆல்பா தலைமுறையினர் உங்களிடம் வந்து ஆறு, ஏழு என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. ஏன் எனக்கும் தெரியாது, புரியாது. 2013 மற்றும் 2024 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்தான் ஜென் ஆல்பா. ஆமாம் இப்போது எதற்கு இந்த ஆராய்ச்சி. இருக்கு, காரணம் இருக்கு. 

    2025ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக Dictionary.com, '67' என்ற எண்ணை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் எண்ணாக அல்ல. குறியீடாக. காரணம் இந்த ஆண்டு இந்த எழுத்துதான் இணையத்தில் அதிகம் டிரெண்டானது. டிக்டாக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியது. ஆனால் இது இந்த அளவு டிரெண்டானது எப்படி?

    கஜென் ஆல்பா தலைமுறையினரால் பயன்படுத்தப்படும் கோட்-வேர்ட் ஆக கூட இந்த 67 என்ற நம்பர் இருக்கலாம். அல்லது ரகசிய குறியீடாகவும் இருக்கலாம். உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் குறிப்பிடவேண்டிய மற்றொரு விஷயம் இதனை 'அறுபத்தி ஏழு' என உச்சரிக்கக்கூடாது. மாறாக 'சிக்ஸ்-செவன்' என்றுதான் கூறவேண்டும். 


    'அறுபத்தி ஏழு' என உச்சரிக்கக்கூடாது. மாறாக 'சிக்ஸ்-செவன்' என்றுதான் கூறவேண்டும்

    ஆனால் எப்படி புழக்கத்தில் வந்தது?

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் பாடலிலிருந்து தொடங்குகிறது. அதாவது ஸ்க்ரில்லாவின் "டூட் டூட் (6 7)" என்ற பாடலில் இருந்து இந்த நம்பர் பயன்பாடு தொடங்கியதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஸ்கிரில்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு எந்த உள்நோக்கத்தோடும், அர்த்தம் கொண்டதாக நான் அதை வைக்கவில்லை என கூறுகிறார். எதற்கு டிரெண்ட் செய்யப்படுகிறது என எனக்கும் தெரியவில்லை எனக்கூறுகிறார்.

    ஜூன் 2025 முதல் 67க்கான தேடல்கள் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மற்ற இரண்டு இலக்க எண்களின் தேடல்களை விட இந்த எண்களின் தேடல்தான் அதிகமாக இருப்பதாகவும் Dictionary.com குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் "67" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவே தொடங்கியுள்ளனர். காரணம் அதை எதற்காக இளைய தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர் என தெரியவில்லை. மேலும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்கக்கூடும் எனவும் அஞ்சுகின்றனர். 

    ஜென் ஆல்பா தலைமுறையினரின் இந்த வார்த்தை பயன்பாடு ஆசிரியர்களுக்கு புரியவில்லை, பெற்றோர்களுக்கும் புரியவில்லை. இந்த மோகம் ஒரு பெரிய கவனச்சிதறலாக மாறிவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகள், வகுப்பறையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியாக சிக்கிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைப்பு முதல் எழுத்துப்பூர்வ பணிகள் என தண்டனைகளும் கொடுத்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க இதனை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக Dictionary.com தேர்ந்தெடுத்துள்ளது.


    "67" - அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்

    காரணம் என்ன?

    "67" என்பது அதன் அர்த்தத்திற்காக அல்ல, மாறாக அதன் அர்த்தமற்ற தன்மைக்காகவே தனித்து நின்றது. இணையம் என்னவாக மாறிவிட்டது என்பதற்கான சரியான ஒரு உதாரணம் இது. இருப்பினும் அதன் பயன்பாட்டர்களுக்கு இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 

    இறுதியாக, இவ்வளவு பேசியும் அதன் அர்த்தம் என்னவென்று சொல்லவில்லை என நீங்கள் நினைக்கலாம். "ஏ சார் இதை மொதலயே சொல்லக்கூடாதா? சொல்லிருந்தா, அப்படியே தெரியாதுனு சொல்லிருப்பல நானு" என்ற வடிவேலுவின் விடைதான் எனது பதிலும். இருப்பினும் உங்களுக்காக ஒரு பதில் மட்டும் இருக்கிறது.

    குறுகிய பதில்: உண்மையில் யாருக்கும் தெரியாது. - அதுதான் இதில் மிக முக்கியமானது. (அதுல ஒன்னும் இல்ல கீழ போட்ரு)

    • தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
    • தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன. 1.1.2026 தேதியில் 18 வயது பூர்த்தியடைபவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    இந்தப் பணிகள் இன்று (11-ந்தேதி) முடிவடையும் நிலையில், SIR படிவங்களை சமர்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி வரை படிவங்களை தரலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • 2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
    • ஜோகோவிச், மெட்வதெவ் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர்

    2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதில் முக்கியமாக ஜோகோவிச், டேனியல் மெட்வதெவ் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர். அந்த சம்பவம் இந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவங்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    யுஎஸ் ஓபன் 2025:

    இந்த தொடரின் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வதெவ் (Daniil Medvedev) பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி (Benjamin Bonzi) ஆகியோ மோதினார். இந்த போட்டி லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் போன்சி 6-3, 7-5, 6-7(5), 0-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இந்த போட்டியின் மூன்றாவது செட்டில், போன்சி போட்டியை வெல்லும் நிலையில் (5-4, 40-30 – match point) சர்வ் செய்யும் போது, அவரது முதல் சர்வ் ஃபால்ட் (fault) ஆனது. அப்போது, ஒரு போட்டோகிராஃபர் தவறுதலாக கோர்ட்டில் நடந்து போட்டோகிராஃபர் பிட் (pit) இல் சென்றார், இது போட்டியை சிறிது நேரம் தடை செய்தது.

    நடுவர் கிரெக் ஆலன்ஸ்வொர்த் (Greg Allensworth), வெளியாளர் தலையீடு (outside interference) காரணமாக போன்சிக்கு மீண்டும் முதல் சர்வ் (second first serve) அளித்தார், இது USTA விதிகளின்படி சரியான முடிவு.

    இந்த முடிவால் கோபமடைந்த மெட்வெடெவ், நடுவருண்டன் வாக்குவாதம் செய்தார். அவர் நடுவரை "நீங்கள் ஒரு ஆணா?" என்று கேட்டு கிண்டல் செய்தார். மற்றும் ரசிகர்களை தூண்டி boo செய்ய வைக்க கை சைகைகள் செய்தார். மைக்ரோஃபோனில் பேசி, "அவர் வீட்டுக்கு செல்ல விரும்புகிறார், நண்பர்களே. அவர் இங்கு இருக்க விரும்பவில்லை. அவர் போட்டிக்கு பணம் பெறுகிறார் என்று நடுவரை குற்றம்சாட்டினார்.

    இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அவர்கள் boo, விசில், மற்றும் சத்தமிட்டனர், இது சுமார் 5-6 நிமிடங்கள் தாமதத்தை ஏற்படுத்தியது. போன்சி பல முறை சர்வ் செய்ய முயன்றார், ஆனால் சத்தம் காரணமாக முடியவில்லை.

    மெட்வெடெவ் பின்னர் ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றார், அவர்களுக்கு ஹார்ட் சிம்பல் காட்டினார். போன்சி இந்த சத்தத்தை "மிக அதிகமானது" என்று விவரித்தார், மேலும் இது போட்டியில் கவனம் செலுத்துவதை கடினமாக்கியது என்று கூறினார்.

    போட்டோகிராஃபரின் கிரெடென்ஷியல் ரத்து செய்யப்பட்டது. மெட்வெடெவ் ரசிகர்களின் ஆக்ரோஷமான சத்தத்தால் போட்டியை விட்டு வெளியேறவில்லை (walk out) அல்லது முன்கூட்டியே விட்டு செல்லவில்லை. அவர் இந்த சம்பவத்துக்குப் பிறகு போட்டியைத் தொடர்ந்து விளையாடினார், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை வென்றார், ஆனால் ஐந்தாவது செட்டில் தோற்றார்.

    போட்டி முடிந்த பிறகு, கோபத்தில் தனது ராக்கெட்டை அடித்து உடைத்தார். இந்த நடத்தைக்காக அவருக்கு மொத்தம் $42,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் டென்னிஸ் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    தாய்லாந்தின் காசிடிட் சாம்ரெஜுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தின் போது மெட்வெடேவ் தனது ராக்கெட்டால் நெட் கேமராவை அடித்து நொறுக்கினார். இந்தச் சம்பவத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஜெனீவா ஓபன் 2025:

    2025 ஜெனீவா ஓபன் (Geneva Open) டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) தனது 38வது பிறந்தநாளான மே 22 அன்று, இத்தாலிய வீரர் மேட்டியோ அர்னால்டி (Matteo Arnaldi) உடன் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் கோபத்தில் தனது ராக்கெட்டை உடைத்தார். இது டென்னிஸ் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் ஜோகோவிச் பொதுவாக அமைதியான வீரராக அறியப்படுகிறார், ஆனால் அவ்வப்போது கோப தருணங்கள் காட்டியுள்ளார்.

    அந்த வகையில் ஜெனீவா ஓபன் ஒரு ATP 250 தொடர் போட்டி, களிமண் (clay) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் செட்டை 6-7(6) என்று இழந்த பிறகு, இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் அர்னால்டி ஜோகோவிச்சின் சர்வை பிரேக் செய்தார். இதனால் கோபமடைந்த ஜோகோவிச், கோர்ட்டில் தனது ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார். இது ரசிகர்களிடம் பூ (boo) சத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் ஜோகோவிச் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார்.

    போட்டியின் போது ஜோகோவிச் ஒரு சிறிய காயத்தையும் சந்தித்தார் ஆனால் அதை சமாளித்து விளையாடினார். ஜோகோவிச் இந்த சம்பவத்துக்குப் பிறகு திரும்பி வந்து, போட்டியை 6-7(6), 6-3, 7-6(2) என்ற கணக்கில் வென்றார். போட்டிக்குப் பிறகு, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். பின்னர் ராக்கெட்டை உடைத்தது எனக்கு உதவியது போல் தோன்றுகிறது, ஏனெனில் அதன்பிறகு நான் சிறப்பாக விளையாடினேன் எனவும் கூறினார்.

    இந்தியன் வெல்ஸ் 2025:

    2025 இந்தியன் வெல்ஸ் (BNP Paribas Open) போட்டிக்கு தயாராகும் போது, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் (Andrey Rublev) தனது பயிற்சி அமர்வில் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். இது மார்ச் 8, 2025 அன்று நடந்தது, அவர் அர்ஜென்டினா வீரர் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ (Francisco Cerundolo) உடன் பயிற்சி செய்து கொண்டிருந்த போது ரூப்லெவ் ஒரு தவறுக்குப் பிறகு கோபமடைந்து ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார், இது அவரது கோப பிரச்சினைகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு, செருண்டோலோவுடன் போட்டியில் ராக்கெட்டை முழங்காலில் அடித்து ரத்தம் வரவழைத்த சம்பவம் உண்டு, இது இந்த பயிற்சியுடன் தொடர்புடையது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது.

    • நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே நடுவூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.170.22 கோடி மதிப்பில் மேற்கூரையுடன் கான்கிரீட் சிமெண்ட் தளம் அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    இதனை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கு கட்டப்பட உள்ள சேமிப்பு கிடங்கில் 1 லட்சம் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படும். தமிழக மக்களை வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்று கூறுகிறார்.

    த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் செயல்பாடு கூரை மீது ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவார் என்பது போல உள்ளது.

    அவர் முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு புதுச்சேரி போகட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான்.

    தொடர் மழையால் டெல்டாவில் எந்தெந்த பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

    பயிர் பாதிப்பிற்கு ஏற்ப விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான வழிவகைகளில் நாங்கள் முயற்சி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×