என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அடுத்த ஆண்டில் அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
    • கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

     

    இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான். ஆம், அது சோர்வடையச் செய்கிறது. ஆனால் எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் என்றார்.


    • 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக திமுக அரசு கூறி வருவது அப்பட்டமான பொய்.
    • திமுக அரசின் பொய்கள் தோலுரிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் துறைகளில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக திமுக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்த தகவல்கள் பொய்யானவை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. தொழில் வளர்ச்சிக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து விட்டதாக பொய்யுரைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

    திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகவும், அதன் மூலம் 34 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்த பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை நான் வெளியிட்டிருந்தேன். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத திமுக அரசு, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகள் தெரிவிப்பதாக விளக்கமளித்திருந்தது. அதுவும் பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

    இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார நிலை, தொழில், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் நிலை குறித்த தரவுகளைத் தொகுத்து இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய கையேடு ( Handbook of Statistics on Indian States) என்ற ஆவணத்தை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. அதில் தான் திமுக அரசின் பொய்கள் தோலுரிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 2020-21-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 39,393 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 46,453 ஆக இருந்தது. அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து 2023-24ஆம் ஆண்டில் இறுதியில் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40,121 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 75,675 ஆகவும் உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 3 ஆண்டுகளில் 728 தொழிற்சாலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது வெறும் 1.85% வளர்ச்சி தான். அதேபோல், இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் 4.29 லட்சம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டுமின்றி, உள்ளூர் அளவில் சொந்த நிதியிலும், வங்கிக் கடன் மூலமாகவும் உருவாக்கப்பட்ட சிறும், குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் அடங்கும்.

    திமுக ஆட்சியில் தொழில்துறையில் வெறும் 4.29 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவழங்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக திமுக அரசு கூறி வருவது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்து விட்டதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 121 மட்டும் தான் என்பதையும் ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 40,121 தொழிற்சாலைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.3.74 லட்சம் கோடி மட்டும் தான். அதிமுக ஆட்சியின் இறுதியில் 39,393 தொழிற்சாலைகளின் மதிப்பு ரூ.3.02 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் ரூ.72,770 கோடி மட்டுமே தொழிற்சாலைகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக வந்த முதலீடுகள் இல்லாமல் தனியாக செய்யப்பட்ட முதலீடுகளும் அடக்கம். அவ்வாறு இருக்கும் போது ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்து விட்டதாகவும், 34 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் திமுக அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பதை உணர முடியும்.

    தொழில் முதலீடுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவை சார்ந்த விஷயங்களில் திமுக அரசு கூறுவதெல்லாம் பொய் தான் என்பதை ரிசர்வ் வங்கி தரவுகள் நிரூபித்துள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளாக பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    • வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர்.
    • மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையானது தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    அதேபோல் டம்ளரை மாணவிகள் எல்லோரும் எடுத்து சியர்ஸ் போட்டுவிட்டு குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் வகுப்பறை பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தான் என்பதும், அந்த மாணவிகள் அதே பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மது குடித்த மாணவிகள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது தெரியவந்தது. மேலும் விடுதியில் தற்போது பராமரிப்பு பணி நடக்கும் நிலையில், பள்ளி வளாகத்தில் காலியாக இருக்கும் வகுப்பறையில் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகுப்பறையில் மற்ற மாணவிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தான், 9-ம் வகுப்பு மாணவிகள் குழுவாக அமர்ந்து மது குடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து பள்ளி நிர்வாகம், மாணவிகள் மதுபானம் அருந்திய விவகாரம் தொடர்பாக அந்த மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். பின்னர் அநாகரீகமாக செயல்பட்ட 6 மாணவிகளை சஸ்பெண்டு செய்துள்ளனர்.

    மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது மட்டுமின்றி, அவர்களுக்கு திருட்டுத்தனமாக மதுபானம் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    • ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வில் தன்னை சேர்க்க மறுப்பதால் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா? என்று ஆலோசித்ததாக தெரிகிறது.

    இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு இப்போது டெல்லி சென்றுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

    எந்த கூட்டணியில் சேருவது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 15-ந்தேதியன்று நடத்த இருந்த மாவட்டச்செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை தற்போது ஒத்திவைத்துள்ளார்.

    இந்த கூட்டத்தை அவர் டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர். நினைவு நாளில் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது.
    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    டிட்வா புயல் (Cyclone Detwah) கடந்த நவம்பர் மாதம் (2025) இலங்கை அருகே உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று, தமிழகம் உட்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த புயல் ஆகும்.

    ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டப்படுவது வழக்கம். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டது.

    டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அரபு மொழியில் டிட்வா என்பதற்கு 'அழகான மலர்' என்றும் கூறப்படுகிறது.

    டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது.

     

    இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

     

    டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

     

    டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.

     

    இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.

     'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம் 

     

    சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.

    டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

     

    டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    'டிட்வா' புயல் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழையை கொடுத்தாலும், வடமாவட்டங்கள், உள்மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் இயல்பு அளவான 17.7 செ.மீ.-ல், 14.9 செ.மீ. மழைதான் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு ஆகும். இது நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 3-வது மோசமான மழைப்பதிவாக ஆகிவிட்டது.

    இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 12.5 செ.மீ., 2024-ம் ஆண்டு 14 செ.மீ. பெய்தது இதற்கு முன்பு மோசமான மழைப்பொழிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களை சேர்த்து பார்க்கும்போது, இயல்பான மழை அளவான 35.3 செ.மீ.-ஐ விட 8 சதவீதம் அதிகமாக அதாவது, 38.3 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

    சென்னையிலும் நவம்பரில் மோசமான மழைப்பதிவு இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டு புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இது 5-வது மோசமான மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

    • கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார்.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

    இந்நிலையில் கொல்கத்தாவில் லேக்டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர். தான் நடத்திய டீ கடையை அர்ஜென்டினா ரசிகர் கிளப் என்ற பெயரில் மாற்றினார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மெஸ்ஸியை காண ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே ரூ.7 ஆயிரத்துக்கு இரு டிக்கெட் வாங்கியுள்ள நிலையில் இப்போது மெஸ்ஸியை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

    கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மெஸ்ஸி பிற்பகல் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு இரவில் காட்சி கால்பந்து போட்டியில் ஆடுகிறார். நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 15-ந்தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார். 3 நாள் இந்திய பயணத்தில் அவர் மொத்தம் 72 மணி நேரம் செலவிடுகிறார்.

    • புதிய காரில் ஏழு இருக்கைகள் கொண்ட அமைப்பு மற்றும் நிசான்-குறிப்பிட்ட ஸ்டைலிங் மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
    • இருக்கை அமைப்புகளில் கூடுதல் ஆப்ஷன்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

    நிசான் இந்தியா நிறுவனம் வருகிற 18ஆம் தேதி தேதி தனது புதிய எம்பிவி ரக காரை உலகளவில் வெளியிடுகிறது. இந்த கார் நிசான் மேக்னைட் மற்றும் எக்ஸ்-டிரெயில் மாடல்களுக்குப் பிறகு நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக அமைகிறது. வரவிருக்கும் புதிய எம்பிவி மாடல் இந்திய சந்தைக்கான நிசானின் புதுப்பிக்கப்பட்ட தயாரிப்பு திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

    புதிய மாடல் ரெனால்ட் டிரைபரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வழக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் அதே CMF-A கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ளும். நாடு முழுவதும் இந்த காரின் டெஸ்டிங் தீவிரமாக நடைபெற்ற நிலையில், இதுபற்றிய சில விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வலம்வருகின்றன.

    அதன்படி புதிய காரில் ஏழு இருக்கைகள் கொண்ட அமைப்பு மற்றும் நிசான்-குறிப்பிட்ட ஸ்டைலிங் மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளன. மலிவு விலையில் மற்றும் பல்துறை திறன் கொண்ட மக்களை ஈர்க்கும் வகையில் இலக்காகக் கொண்ட இந்த எம்பிவி போட்டியை ஏற்படுத்தும் விலை பிரிவில் நிலைநிறுத்தப்படும்.

    எனினும், இருக்கை அமைப்புகளில் கூடுதல் ஆப்ஷன்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை இந்த காரில் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் எம்பிவி பிரிவு தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில், இந்த மாடலின் வெளியீடு இந்தியாவில் நிசானின் தடத்தை கணிசமாக விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காரின் வேரியண்ட்கள், அம்சங்கள் மற்றும் விற்பனை காலக்கெடு பற்றிய கூடுதல் விவரங்கள் வருகிற 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது தெரியவரும்.

    • தமிழகத்தில் எஸ்ஐஆர் களப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
    • எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, இந்த பணிகளுக்கான கால அளவை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது.

    தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடந்து வருகிறது.

    குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த பணி நடக்கிறது. 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இறந்த வாக்காளர்களின் பெயர்கள், இரட்டை பதிவில் உள்ளவர்களை நீக்கவும் தேர்தல் கமிஷன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் எஸ்ஐஆர் களப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இந்த பணியின்போது வீடுவீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    இந்தப்பணிகள் கடந்த 4-ந் தேதி முடிவடைவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தேதியை 11-ந் தேதி வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

    எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, இந்த பணிகளுக்கான கால அளவை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது.

    அதன்படி தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கி பதிவேற்றம் செய்யும் பணிக்கான கால அளவை 14-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பான எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

    கடைசி நாளான நாளை எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

    • பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் வருகிற 15-ந்தேதி 1,500 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    தற்போது கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சுப முகூர்த்த தினமான வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளன.

    எனவே, கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சுபமுகூர்த்த தினமான வருகிற 15-ந்தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

    அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் தமிழகம் முழுவதும் வருகிற 15-ந்தேதி 1,500 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த 1,500 டோக்கன்களும் பத்திரப்பதிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பொதுமக்கள் அமருவதற்கு கூடுதல் நாற்காலிகள் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர்.

    கொல்கத்தா:

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருகை தருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கொல்கத்தா முழுவதும் மெஸ்ஸியின் ஜூரம் ஆட்டுவிக்கிறது. அவரது கட்அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

    கொல்கத்தாவிற்கு வந்தடைந்த மெஸ்ஸியை அவரது ரசிகர்கள் வழிநெடுகிலும் கூட்டமாக நின்று ஆரவாரமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
    • முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    முதல் கட்டத்தில் 71 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 76 சதவீதம் என மொத்தத்தில் 73.69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட 2 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.


    வாக்கு எண்ணக்கை மையம் முன்பு அரசியல் கட்சியினர் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

    வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களில் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    காலை 8.30 மணியளவில் முன்னணி நிலவரம் வெளியாக தொடங்கியது. காலை 9.45 மணி நிலவரப்படி மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், தேசய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்தன.

    இதேபோல் மாநிலத்தில் உள்ள 86 நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 46 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    941 கிராம பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி 340 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மாநிலத்தில் உள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 7 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி முன்னிலையில் இருந்துவந்தன.

    • அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் கனமழை பெய்ததாலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் இன்று காலை முதல் 5 மாவட்ட பாசனத்திற்கு 1900 கனஅடி, கிருதுமால் நதி பாசனத்திற்கு 442 கன அடி, மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைகளுக்காக 69 கனஅடி என மொத்தம் 2319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கால்வாய் மூலம் 1900 கன அடி மற்றும் 7 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.94 அடியாக உள்ளது. நீர்வரத்து 1411 கன அடி. இருப்பு 4398 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.50 அடி. வரத்து 596 கனஅடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6244 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி என அதன் முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 15 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 15 கனஅடி. 

    ×