என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நான் உன்னை அப்போது நேசித்தேன், இப்போதும் உன்னை நேசிக்கிறேன்.
    • தற்கொலை செய்து கொண்ட நாளில், 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை அறைக்கு வெளியே அவர் வைத்திருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 41 வயதான அனிமேட்டர்(ANIMATOR) ஒருவரின் தற்கொலையும், உருக்கமான கடிதமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வைல் பார்லேவில் உள்ள சஹாரா ஹோட்டலில் நிஷாந்த் திரிபாதி (41 வயது) கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தனது தற்கொலைக்கு மனைவி அபூர்வாவும், அத்தை பிரார்த்தனாவும் தான் காரணம் என குறிப்பு எழுதி அதை தான் பணியாற்றிய நிறுவனத்தின் இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

    அவரது தற்கொலை கடிதத்தில், 'இது அபூர்வாவுக்கானது- அன்பே.. நீ இதைப் படிக்கும் நேரத்தில், நான் போய்விட்டிருப்பேன். என்ன நடந்ததோ அதற்காக என் கடைசி தருணங்களில் நான் உன்னை வெறுத்திருக்கலாம். ஆனால் இந்த தருணத்திற்காக நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்.

    நான் உன்னை அப்போது நேசித்தேன், இப்போதும் உன்னை நேசிக்கிறேன். நான் உறுதியளித்தபடி இந்த அன்பு ஒருபோதும் குறையாது. நீயும் பிரார்த்தனா அத்தையும்தான், நான் சந்தித்த அத்தனை போராட்டங்களுக்கும், என் மரணத்திற்குக் காரணம் என்பது என் அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என் அம்மாவிடம் போகாதே. அவள் மனம் உடைந்துவிட்டாள்'.

    தனது தாய், சகோதரர் மற்றும் சகோதரிக்கு கடைசி செய்திகளை அனுப்பிய பிறகு, அவர் தனது மனைவி அபூர்வாவுக்கு இந்த கடைசி கடிதத்தை எழுதினார். காவல்துறை தகவலின்படி, அனிமேஷன் துறையில் பணியாற்றி வரும் நிஷாந்த், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியைச் சேர்த்தவர்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார். மேலும் தற்கொலை செய்து கொண்ட நாளில், 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை அறைக்கு வெளியே அவர் வைத்திருக்கிறார்.

    நீண்ட நேரமாகியும் அவர் ஹோட்டல் ஊழியர்களுக்கு பதிலளிக்காததால், மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தி அவரது அறைக்குள் நுழைந்தபோது, அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிஷாந்தின் தயார் அளித்த புகாரின்பேரில் மனைவி அபூர்வா மற்றும் அத்தை பிரார்த்தனா  மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    • வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று புறநகர் ரெயில் சேவை ரத்து.
    • தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிளாசன் அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்தபோது தோள்பட்டையில் காயம்.
    • காயம் தொடர்பாக ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளைமறுதினம் (மார்ச் 9-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- இந்தியா பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக நியூசிலாந்து விளையாடும்போது, தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் அடித்த பந்தை நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இந்த போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு ஐந்து நாட்கள் இருப்பதால் காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் காயத்தால் மேட் ஹென்றி இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அவரை விளையாட வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கேரி ஸ்டீட் கூறியதாவது:-

    மேட் ஹென்றிக்கு ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    தற்போதைய நிலையில் அவர் இடம் பெறுவது சிறிது தெரியாத நிலையில்தான் உள்ளது. அவர் கீழே விழுந்ததில் இருந்து தோள்பட்டையில் அவருக்கு வலி இருந்தது தெளிவாக தெரிந்தது. அவர் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

    லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து தோல்வியடைந்தாலும், மேட் ஹென்றி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஹென்றி விளையாடவில்லை என்றால் அது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமையும்.

    • அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.
    • சுமார் 25 நிமிடங்கள் அப்பெண் விமானத்தில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்.

    விமானத்தில் பெண் பயணி ஒருவர் ஆடைகளை கழற்றி கத்தியபடி நிர்வாணமாக 25 நிமிடங்கள் உள்ளேயே ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடந்த திங்கள்கிழமை, அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் 733 புறப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென கேபினுக்கு அருகில் சென்று, விமானத்திலிருந்து இறங்க வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

    ஆனால் விமான ஊழியர்கள் அதற்கு மறுக்கவே, அந்தப் பெண் தன் உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.

    அந்தப் பெண்ணின் செயல்கள் முழு விமானத்திலும் பரபரப்பை ஏற்படுத்தின. சுமார் 25 நிமிடங்கள் அப்பெண் விமானத்தில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்.

    ஒரு கட்டத்தில் விமானியின் அறைக் கதவை உதைக்க ஆரம்பித்தார். விமான ஊழியர்கள் அந்தப் பெண்ணை ஒரு போர்வையால் மூட முயன்றனர். ஆனால் அவர் அமைதியடையவில்லை. இறுதியில், விமானி விமானத்தை மீண்டும் தரையிறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    விமானம் மீண்டும் தரையிறங்கியவுடன் ஹூஸ்டன் போலீசார் அந்தப் பெண்ணைக் காவலில் எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர். இருப்பினும், அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயணிகளிடம் ஏற்பட்ட சிரமத்திற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டு, பயணிகளுக்கு 50 டாலர் பயண வவுச்சரை வழங்கியுள்ளது. 

    • ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.
    • 3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.

    இந்தி பேசும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை இந்தியில் கொடுத்துவிட்டு தான் இங்கு அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். அமித்ஷா செய்தவற்றை தெரிந்து கொண்டு தான் பின்னர் துரைமுருகன் பதில் கூற வேண்டும்.

    அமித்ஷாவை வரவேற்ற போஸ்டரில் சந்தான பாரதி படம் இடம்பெற்றதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட சர்ச்சையான போஸ்டர் பாஜகவினரால் ஒட்டப்பட்டது அல்ல.

    உரிய விசாரணை மேற்கொண்டால் சர்ச்சை போஸ்டரின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

    மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக எங்கும் மாணவர்களை வற்புறுத்தி கையெழுத்து பெறவில்லை.

    அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தான் வரிசைகட்சி நின்று கையெழுத்து போட்டுச்செல்கின்றனர். 3வது மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.

    ஆர்வமுடன் வரும் மாணவர்களை இங்கு வராதீர்கள் என்று எப்படி கூறுவது? 

    பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களை இழந்த பிறகு ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    • அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு நிலையான கேப்டனை பிசிசிஐ விரும்புவதாக தகவல்.

    தொடக்க வீரரான ரோகித் சர்மா மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார். ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. வருகிற ஏப்ரல் மாதம் வந்தால் 38 வயது பிறக்கும்.

    கடந்த வருடம் இறுதியில் நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா இதுவரை இல்லாத வகையில் மிகவும் மோசமான வகையில் 0-3 என இழந்தது.

    அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என இந்தியா தொடரை இழந்தது. இதனால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த இரண்ட தொடரிலும் ரோகித் சர்மா மோசமாக விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் தானாகவே ஆடும் லெவனில் இருந்து வெளியேறினார். இதனால் ரோகித் சர்மாவின் ஃபார்ம் மற்றும் கேப்டன் பதவி குறித்து விமர்சனம் எழுந்தது.

    ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் பிசிசிஐ, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உடன் இந்தியாவின் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது.

    அப்போது 2027 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றிற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியபோது அடுத்த இரண்டு மூன்று வருடத்திற்கு நிலையான கேப்டனுடன் செல்ல வேண்டிய அவசியம். இதனால் ரோகித் சர்மாவுடன் செல்ல முடியாது. இதனால் புதிய கேப்டனை தயார் செய்ய வேண்டும் என பிசிசிஐ முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.

    மேலும் ரோகித் சர்மாவிடம் உங்களுடைய எதிர்காலம் திட்டம் குறித்து முடிவு எடுக்கக் கூறியதாகவும் கேட்டுக்கொண்டதாக தகவல வெளியானது. ரோகித் சர்மாவும் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என தெரிவித்தாகவும் தகவல் வெளியானது.

    இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பிசிசிஐ அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டனாக நியமித்தது. சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக நியமித்தது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் ரோகித் சர்மா ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஃபார்ம் கவலை அளிப்பதாக இருந்தாலும் கேப்டன் பொறுப்பில் அற்புதமாக செயல்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.

    ஒருநாள், டி20, டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய நான்கு ஐசிசி தொடர்களிலும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    இந்த நிலையில்தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.

    அவர் தற்போது ஓய்வு பெறும் முடிவில் இல்லை. இன்னும் சில காலம் விளையாட விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆகவே, பிசிசிஐ அவரை ஒரு வீரரான விளையாட அனுமதித்தாலும் கூட, அடுத்த இரண்டு மூன்று வருடத்திற்கான திட்டத்தில் கேப்டனாக நீடிக்க பிசிசிஐ விரும்புவா? எனத் தெரியவில்லை.

    இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினாலும் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் திட்டத்தில் ரோகித் சர்மா இருப்பாரா? என்பது சந்தேகம்தான். இதனால் அவருடைய கேப்டன் பதவிக்கு ஆபத்து நீடிக்கத்தான் செய்கிறது.

    எதுவாக இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிந்த பின் பிசிசிஐ முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியே வந்தபின்னர்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்த உறுதியான நிலை தெரியவரும்.

    இதற்கிடையே பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் பிரிவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா இடம் பிடிப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் மட்டுமே ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த இறப்புகளில், 66.4% பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்
    • எனது 10 வருட அனுபவத்திற்குப் பிறகு நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.

    இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளுக்கு சிவில் இன்ஜினியர்கள், ஆலோசகர்கள் மற்றும் அவர்கள் தயாரிக்கும் குறைபாடுள்ள 'விரிவான திட்ட அறிக்கைகள்' (DPR) தான் காரணம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குளோபல் ரோடு இன்ஃப்ராடெக் உச்சி மாநாடு & எக்ஸ்போவில் (GRIS) நிதின் கட்கரி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், 'இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்பான பல கடுமையான பிரச்சினைகளை நாம் எதிர்கொள்வது நல்லதல்ல.

    நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 80 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன, 1 லட்சத்து 80 ஆயிரம் இறப்புகள் நிகழ்கின்றன. இது உலகிலேயே மிக அதிகமாக இருக்கலாம். இந்த இறப்புகளில், 66.4% பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இழப்பை ஏற்படுத்துகிறது.

     

    இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீத இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் மிக முக்கியமாகத் திறமையான இளைஞர்களின் இழப்பு நமது நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். இந்த விபத்துகள் அனைத்திற்கும் மிக முக்கியமான குற்றவாளிகள் சிவில் இன்ஜீனியர்கள்.

    நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை. ஆனால் எனது 10 வருட அனுபவத்திற்குப் பிறகு நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். கட்டுமானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) உருவாக்குபவர்களே, அதில் ஆயிரக்கணக்கான தவறுகள் செய்கின்றனர்.

    இந்த அறிக்கைகளை வெளியிட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிறிய சிவில் தவறுகளும் மோசமான சாலை வடிவமைப்புகளும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தாலும், யாரும் பொறுப்பேற்பதில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.  

    • இது நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மோசடி.
    • உச்ச நீதிமன்றத்தின் முன், நாங்கள் இப்போது எங்கள் ஏலத்தை ரூ.8,640 கோடியாக உயர்த்துகிறோம்.

    ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பை தாராவி விளங்குகிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குடிசைப்பகுதியில் உள்ள வீடுகள் புறாக்கூண்டுகளை போல சிறிது சிறிதாக இருக்கும். குடிசை வீடுகள் என்றாலும் மாடிகள் இருக்கும்.

    ஒரு வீட்டில் பல அறைகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர். மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கு தாராவி தான் சொர்க்கப்பூமி என்று சொல்லலாம்.

    அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் துபாய் நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த டெண்டரை ரத்து செய்த மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக கூட்டணி, தாராவி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை அதானி குழுமத்துக்கு கொடுத்தது.

     

    இதை எதிர்த்து துபாய் நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதில் "மோசடி" நடந்ததாக செக்லிங்க் குழுமம் குற்றம் சாட்டியது. இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்காக நிபந்தனைகள் மாற்றப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியது.

    ஆனால் செக்லிங் நிறுவன மனுவை நிராகரித்த மும்பை உயர்நீதிமன்றம், அதானி குழுமத்துக்கு திட்டத்தை வழங்கும் மாநில அரசின் முடிவை கடந்த டிசம்பர் 2024 இல் உறுதி செய்தது. இதை எதிர்த்து செக்லிங் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதானி குழுமத்தின் தாராவி மறுசீரமைப்பு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும் அந்நிறுவனம் கோரியிருந்தது.

    இந்த மேல்முறையீடு மனு இன்று (மார்ச் 07) தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட செக்லிங்க் தரப்பு வழக்கறிஞர், "மறுசீரமைப்புக்கு குறைவான பணத்தை எந்த அரசாங்கமும் கேட்பதை நான் பார்த்ததில்லை. அதானிக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இது நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மோசடி. 2018 ஆம் ஆண்டில், அதானியின் ரூ.5,069 கோடி ஏலம் ஏற்கப்பட்டு, நாங்கள் (செக்லிங்க்) முன்மொழிந்த ரூ.7,200 கோடி ஏலம் நிராகரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன், நாங்கள் இப்போது எங்கள் ஏலத்தை ரூ.8,640 கோடியாக உயர்த்த தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

     

    அதானி குழுமத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மறு கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், சில ரயில்வே குடியிருப்புகள் ஏற்கனவே இடிக்கப்பட்டுவிட்டதாகவும், கோடிக்கணக்கான மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறினார். சுமார் 2000 பேர் கட்டுப்பாணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த திட்டத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என்று வாய்மொழியாக தெரிவித்தனர்.

    ஆனாலும் இந்தத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் ஒரே ஒரு எஸ்க்ரோ கணக்கிலிருந்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மகாராஷ்டிரா அரசுக்கும் அதானி குழுமத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி, அடுத்த விசாரணையை மே 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

    • கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன.
    • மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.

    ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஃபடா' (FADA) தெலுங்கானா தவிர்த்து நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 13 லட்சத்து 53 ஆயிரத்து 280 இருசக்கர வாகனங்கள், 94 ஆயிரத்து 181 ஆட்டோ, 3 லட்சத்து 3 ஆயிரத்து 398 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 65 ஆயிரத்து 574 டிராக்டர்கள், 82 ஆயிரத்து 763 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் என மொத்தம் 18 லட்சத்து 99 ஆயிரத்து 196 வாகனங்கள் பதிவாகியுள்ளன.

    கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன. ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 17.12 சதவீதம் வாகனங்கள் குறைவாக பதிவாகி உள்ளன. இதேபோல கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதத்தில் 20 லட்சத்து 46 ஆயிரத்து 328 வாகனங்கள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 7.19 சதவீதம் சரிந்திருக்கிறது.

    ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நாடு முழுவதும் பதிவான வாகனங்களின் விவரத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேசமயத்தில் மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.

    ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், ''நாங்கள் நடத்திய முந்தைய ஆய்வின்படி பிப்ரவரி மாதம் வாகனங்களின் பதிவு குறைவாக இருக்கும் என்று கணித்திருந்தோம். அதன்படியே அனைத்து பிரிவுகளிலும் வாகனங்களின் பதிவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தற்போதைய தேவையை சிறப்பாக சீரமைத்து, இலக்கை அடையும் வகையில் மார்ச் மாதத்தில் வாகனங்களின் பதிவு மேம்படும் என்று கருதுகிறோம்'' என்றார்.

    • ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
    • தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிப்பு.

    வேலைக்கு லஞ்சம்- சிபிஐ வழக்கு விசாரணையை எதிர்த்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ராஜேந்திர பாலாஜியை விசாரிக்கும் இசைவாணையை தமிழ்நாடு ஆளுநர் வழங்கினாரா ? இல்லையா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கிடையே, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது, இருப்பினும் உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.

    மேலும், முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநரின் இசைவாணைக்கு காத்திருக்கிறோம் எனவும் தமிழக அரசு தெரிவத்துள்ளது.

    அப்போது, வழக்கு தொடர ஆளுநர் இசைவாணை இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் தமிழக அரின் கடிதம் தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆளுநரின் செயலர் என்ன கூற விரும்புகிறார் எனத் தெரிய வேண்டும் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தர தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளேன்.

    ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதிகோரிய தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • நிதிஷ் குமார் என்.டி.ஏ. தலைவராக நேற்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார். நாளையும் இருப்பார்.
    • தேஜஸ்வி யாதவ் அவருடைய தந்தை லாலு பிரசாரத் யாதவால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே.

    பீகார் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் போட்டியிடும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) தலைவர்களும், பாஜக தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    ஆனால் சட்டமன்ற தேர்தலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) புதுமுகத்தை முன்னிறுத்தும் என பீகார் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் (வயது 47) அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் பாஜக தலைவரும், பீகார் மாநில துணை முதல்வருமான சம்ரத் சவுத்ரி, நிதிஷ் குமார்தான் அடுத்த முறையும் முதல்வராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சம்ரத் சவுத்ரி கூறியதாவது:-

    1996-ல் இருந்து பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழி நடத்தி வரும் நிதிஷ் குமாருடன் பாஜக உள்ளது. ஆகவே, நிதிஷ் குமார் நேற்றும் தலைவராக இருந்தார். இன்றும் தலைவராக இருக்கிறார். நாளையும் தலைவராக இருப்பார்.

    நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் (வயது 47) அரசியலுக்கு வருவது நிதிஷ் குமாரின் தனிப்பட்ட முடிவு. இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உள்கட்சி விவகாரம். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் பாஜக அவர்களுடன் நிற்கும்.

    தேஜஸ்வி யாதவ் அவருடைய தந்தை லாலு பிரசாரத் யாதவால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே. ஒருநாள் நாள் லாலு பிரசாத் யாதவ் தேஜ் பிரசாத் யாதவ் அல்லது மிசா பாரதி என்னுடைய அரசியல் வாரிசு என அறிவிக்கும்போது, தேஜஸ்வியை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு சம்ரத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • 1 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்த நிறுவனத்தால், சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    அதன் பிறகு ஆறே மாதங்களில், இத்திட்டம் அமைப்பதற்கு முதலமைச்சரால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.

    ×