என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது.
    • அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

    சபையின் முதல் அலுவலாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களை பேச சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அழைத்தார்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- புதுவையில் எத்தனை மொழிகள் உள்ளது என தெரியுமா?

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- இருமொழி கொள்கைதான் வேண்டும். தமிழை எதிர்க்கிறீர்களா?

    அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது எப்போது தெரியுமா? காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது. இந்தியை திணித்ததும் காங்கிரஸ்தான். அவர்களோடுதான் கூட்டணியில் உள்ளீர்கள்.

    இதையடுத்து அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பேசினர்.

    இதனால் சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தொடர்ந்து மணி அடித்து சபையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.

    ராமலிங்கம் (பா.ஜ.க.): 3-வது மொழி விருப்ப பாடமாக உள்ளது. விரும்பும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம்.

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார்: கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொண்டால் அறிவு வளரும். தமிழகத்தில் தமிழ்நாடு என பெயர் வர யார் காரணம் என தெரியுமா?

    ராமலிங்கம்: தமிழ்நாடு என பெயர் வர சுந்தரலிங்கனார் உயிர் நீத்தார், அதனால்தான் தமிழ்நாடு என பெயர் வந்தது.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- தமிழக முதலமைச்சராக அண்ணாதுரை பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக தமிழ்நாடு என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இது 4 ஆண்டு பா.ஜ.க.காரருக்கு தெரியாது.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: புதுவையில் இருமொழி, மும்மொழி கொள்கை இல்லை, 4 மொழி கொள்கை உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழி உள்ளது.

    செந்தில்குமார்(தி.மு.க.): இது 22 மொழிகள் கொண்ட தேசம்.

    அனிபால்கென்னடி (தி.மு.க.): எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோம்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: காங்கிரஸ் ஆட்சியில்தான் மொழி போர் நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம்: இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் எப்படி வந்தது? அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எது? உங்கள் கட்சி தலைமையிடம் கேட்டுவிட்டு பேசுங்கள். புதுவை அரசின் கொள்கை மும்மொழி கொள்கைதான். முதலமைச்சர், கவர்னர் ஏற்றதால்தான் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் புதுவையில் மும்மொழி கொள்கைதான் அமலில் உள்ளது.

    எதிர்கட்சி தலைவர் சிவா: அமைச்சரின் அராஜக பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறினார். அவருடன் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர்.

    • எம்.எஸ். தோனி சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி சமீபத்தில் விமான நிலையம் வந்திருந்தார்.

    அப்போது, அவரிடம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றி பெற்றது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.எஸ். தோனி எந்த பதிலும் தெரிவிக்காமல், கையை தேவையில்லை என்பது போல் செய்கை காண்பித்து அங்கிருந்து கடந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்கு எம்.எஸ். தோனி பதில் அளிக்காமல் சென்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் பலரும் எம்.எஸ். தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த வீடியோவை பார்த்த பிறகு வருத்தமாக இருக்கிறது என கமென்ட் செய்துள்ளனர்.

    • தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது.
    • தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது.

    தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே த.வெ.க.வில் 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.

    • தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும்.
    • அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக தேசிய அளவிலான இலவச டெலிபோன் சேவையை பயன்பாட்டில் வைத்து உள்ளது.

    1800-233-555 என்ற இந்த எண்ணில் கியாஸ் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்ய வேண்டும்.

    இந்த கால்சென்டர்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தங்கள் கேள்விகளுக்கான பதிலை பெறும் வசதி உள்ளது.

    ஆனால் இப்போது அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி இந்தியில் மட்டுமே பேசுகிறார்.

    தொடர்பு கொண்டு பேசுபவர்களுக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றால் சிறிது நேரத்தில் தொடர்பு கொள்வதாக அறிவிக்கிறார்கள். ஆனால் தொடர்பு கொள்வதில்லை.

    இந்தியில் பேச தொடரலாம். மற்ற மொழிகளுக்கு இணைப்பில் காத்திருக்கவும் என்று வருகிறது. ஆனால் தொடர்பு கொள்வதில்லை.

    தமிழ் மட்டுமே தெரிந்த சாமானிய வாடிக்கையாளர்கள் இந்த மொழி பிரச்சனையால் தங்கள் புகார்களை பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

    இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.

    தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.

    தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.
    • வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

    வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.

    நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் விருந்தவனத்தில் வாழும் கைம்பெண்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி கொண்டாடியுள்ளனர். கைம்பெண்கள் ஹோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • கஞ்சா தமிழகத்திற்குள் வருவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டு தமிழக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஏற்கத்தகாதது.
    • தி.மு.க. அரசு எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கியும் போகாது. அடமானமும் வைக்காது.

    தமிழக உரிமைகளை தி.மு.க. அடகு வைத்ததாக கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கஞ்சா தமிழகத்தில் பயிரிடப்படுவதில்லை. வடமாநிலங்கள், வெளிநாடுகளில் பயிரிடப்படுகிறது.

    * கஞ்சா தமிழகத்திற்குள் வருவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டு தமிழக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஏற்கத்தகாதது.

    * அ.தி.மு.க. வை நான்கரை ஆண்டுகள் பா.ஜ.க.விடம் அடகுவைத்துவிட்டு ஆட்சி நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

    * தி.மு.க. அரசு எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கியும் போகாது. அடமானமும் வைக்காது.

    * எங்களுக்கு சொந்த புத்தி உண்டு. சொந்த காலில் நிற்கும் சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றும் திறமையும் உண்டு.

    * நாங்கள் விவாதத்திற்கு தயார் என எத்தனையோ முறை சொல்லி விட்டோம்.

    * இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் சாய் பல்லவி பங்கேற்றார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன், தண்டேல் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    படுகர் இனத்தை சேர்ந்த சாய் பல்லவி, கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தோடு காணப்படுகிறார்.
    • அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார்.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து, அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றனர்.

    இந்த வரிசையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அறிமுக வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தது பற்றி பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், "வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அகாடமி மைதானத்தில் அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார். அவரது பவர்-ஹிட்டிங் குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் எழுந்தன. வேறென்ன கேட்க முடியும்?"

    "அவரது பலத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அவருடன் ஒரு சகோதரர் போல் இருக்க வேண்டும். அவர் பங்களிப்பை வழங்க தயாராக காணப்படுகிறார். அவரை சிறப்பாக வைத்துக் கொள்வதே முக்கியமானது. டிரெசிங் ரூமில் நல்ல எண்ணோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் விளையாடுவார்."

    "தற்போது அவர் ஐ.பி.எல்.-இல் விளையாட தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவர் அடிக்கும் சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன. எதிர்காலம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்," என்று தெரிவித்தார்.

    • மே அல்லது ஜூன் மாதத்திற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
    • ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.2,000 கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிக்க புதிய திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கொண்டு வர உள்ளது.

    ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் இந்தி திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

    மே அல்லது ஜூன் மாதத்திற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

    ரூ.1,000 மாத கட்டண திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பர வீடியோ வைரலாகியுள்ளது.
    • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது.

    தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையின் மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்நிலையில் தெற்கு Vs வடக்கு மொழி பிரச்சனையை மையப்படுத்தி கேட்பரி டைரி மில்க் சாக்லேட் நிறுவனம் இந்தியில் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    அந்த விளம்பரத்தில், இந்தி பேசும் பெண்கள் மொட்டைமாடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில் குடியேறியுள்ள சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அவர்களுடன் இணைகிறார். அப்போது அந்த பெண்கள் இந்தியில் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் பெண் திணறுகிறார். இதனை உணர்ந்த ஒரு இந்தி பேசும் பெண் தனது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி உரையாடுகிறாள்.

    மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பரம் வெளியாகி வைரலாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. 1967 இல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணாதுரை, 1968 ஆம் ஆண்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.

    • மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.
    • மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.

    சென்னையில் தமிழ்நாடு புதுமை தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * நாகரிகமற்றவர்கள் என சொல்பவர்கள் தான் அநாகரிகமாக பேசுகின்றனர்.

    * மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.

    * மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது.
    • தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த 10-ந்தேதி வரை ஏறுமுகத்தில் இருந்து, நேற்று முன்தினம் சற்று இறங்கியது.

    தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது. நேற்று நிலவரப்படி, கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கும், சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ரூ.65 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,520

    11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160

    10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

    09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

    08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-03-2025- ஒரு கிராம் ரூ.109

    11-03-2025- ஒரு கிராம் ரூ.107

    10-03-2025- ஒரு கிராம் ரூ.108

    09-03-2025- ஒரு கிராம் ரூ.108

    08-03-2025- ஒரு கிராம் ரூ.108

    ×