search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Anbumani Ramadoss"

  • மாறாக வணிக வளாகம், அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது.
  • இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 40 துறைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

  சென்னை கோயம்பேட்டில் இயங்கிவந்த புறநகர்ப் பேருந்து நிலையம் வண்டலூர் - கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாறாக வணிக வளாகம், திரையரங்குகள், அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது.

  சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றா நோய்ப் பேராபத்து வெள்ளச் சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு, நீர்ப்பற்றாக் குறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்குத் தீர்வாக கோயம்பேடு பசுமைப் பூங்கா அமையும். கோயம்பேடு, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மெட்ரோ ரெயில் மற்றும் மாநகரப் பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும்.

  இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன. அதுபோன்ற நல்வாய்ப்பு சென்னையில் இல்லை.

  சென்னை பூங்காக்களில் 20 ஏக்கர் பரப்பிலான செம்மொழிப் பூங்கா மற்றும் 15 ஏக்கர் பரப்பிலான அண்ணாநகர் கோபுரம் பூங்கா ஆகியன மட்டுமே பொது மக்கள் முழு அளவில் பயன்படுத்தத்தக்க பெரிய பூங்காக்கள் ஆகும்.

  முதலமைச்சர் வெளியிட்ட சென்னை மாநகராட்சியின், சென்னைக் காலநிலைச் செயல் திட்டத்தில் சென்னை மாநகரின் பசுமைப் பொது வெளியை அதிகரிப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட வேண்டும். சென்னைப் பெருநகரில் புதிய பூங்காக்கள் உருவாக்கு வதற்குப் போதுமான இடம் இல்லாத நிலையில், 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையமும், 6.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள புறநகரத் தனியார்ப் பேருந்து நிலையமும் இடம் மாற்றப்பட்டுள்ளது ஒரு நல்வாய்ப்பு ஆகும். இவற்றில் மொத்தமுள்ள 42.8 ஏக்கர் நிலத்தில், மாநகரப் பேருந்து நிலையத்திற்கான சுமார் 5 ஏக்கர் போக மீதமுள்ள பகுதியைப் புதிய பூங்காவாக உருவாக்க வேண்டும். இதன் மூலம், சுமார் 50 முதல் 60 ஏக்கர் அளவிலான பரப்பில் ஒரு பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்.

  இதன்முலம், கடந்த 60 ஆண்டுகளில், சென்னையில் இருந்த ஏராளமான நீர்நிலைகளும் பசுமைப் பகுதிகளும் அழிக்கப்பட்டதுதான் வரலாறு என்பதை மாற்றி, ஒரு பெரிய பசுமைப் பூங்காவைப் புதிதாக அமைக்கும் சாதனையை தமிழ்நாடு அரசு படைக்க முடியும்.

  இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது.
  • திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

  தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறை யல்ல. இதற்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரு தடுப்பணைகளை கட்டியுள்ள கேரள அரசு, கடந்த 2018-ம் ஆண்டில் மூன்றாவது தடுப்பணையைக் கட்ட திட்டமிட்டது. அதைக் கண்டித்து அணைக்கட்டி என்ற இடத்தில் 2021-ம் ஆண்டு எனது தலைமையில் பா.ம.க. மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகு தான் பவானி தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.

  கர்நாடகத்தில் பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொண்டது. கூட்டணி கட்சியான காங்கிரசின் நலனைக் கருதி, மேகதாது அணை குறித்த அக்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்த திமுக அரசு, இப்போது இன்னொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது. திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

  கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்.
  • ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

  ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஒன்பதாவது உயிர் ராமையா ஆவார். கடந்த 14-ஆம் தேதி தான் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதிநிறுவன பணியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த மூன்றாவது நாளில் அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு உயிர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

  எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • கட்டுமானப் பணிகளின் நலனுக்காக என்று கூறி மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட 26 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசு மீண்டும் திறக்க தீர்மானித்துள்ள 26 மணல் குவாரிகளும் காவிரி பாசன மாவட்டங்களில் தான் அமையவுள்ளது. அவற்றில் 20 மணல் குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டவை ஆகும்.

  மீண்டும், மீண்டும் மணல் குவாரிகளைத் திறப்பது தமிழ்நாட்டை, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தர பாலைவனமாக மாற்றிவிடும்.

  தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று கூறி மதுவின் விற்பனையை அதிகரிப்பதும், கட்டுமானப் பணிகளின் நலனுக்காக என்று கூறி மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மக்கள் நல அரசுக்கு அழகல்ல. தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
  • 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் கழன்று சாலையில் ஓடியது. முன்புற சக்கரம் இல்லாமல் தடுமாறிய நகரப் பேருந்தை அதன் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால், அதில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணியர் தப்பினார்கள். சக்கரம் தனியாக கழன்று ஓடும் நிலையில் மிகவும் அலட்சியமாக அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

  தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும், விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டார். அதற்கு முன் பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை அமைந்தகரை பகுதியில் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.

  அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டதாகவும், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில் மே 4-ஆம் தேதி வரை 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பழுதுகள் மே 6-ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அதன்பின் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது என்றால் அரசுப் பேருந்துகள் பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? என்ற வினா எழுகிறது.

  அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவதும், பேருந்துக்கு வண்ணம் பூசி விட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டதாகவும் பொய்க்கணக்கு காட்டும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான்.
  • உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

  உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான். தாம் பெற்ற வலிகளையும், வேதனைகளையும் தமது குழந்தைகள் பெறக்கூடாது, தாம் பெறாத பெருமைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்ற சிந்தனை அன்னையைத் தவிர எவருக்கும் வராது.

  எப்படிப் பார்த்தாலும் தியாகத்தின் திருவிளக்கு அவர்கள் தான். உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அவர்களை மனதில் குடியமர்த்தி எந்நாளும் வணங்குவோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான்.
  • செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செவிலியர் நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

  என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு, பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான். ஆனால், அதற்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வி.
  • முன்னேற்றத்திற் கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  அனைவருக்கும் முன்னேற்றம் என்ற மயக்கும் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அ.தி.மு.க.வின் 57 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

  தனிநபர் வருமானத்தில் மாநில சராசரிக்கும் குறைவாக உள்ள 24 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பதிலிருந்தே சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

  இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், சென்னை பொருளாதாரப் பள்ளியின் தலைவருமான முனைவர் சி. அரங்கராஜன், சென்னை பொருளாதாரப் பள்ளியின் இயக்குனர் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இணைந்து தமிழக பொருளாதாரம் குறித்த 69 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

  அதில் 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ் நாட்டின் சராசரி தனிநபர் வருவாயான ரூ.2,36,783-ஐ விட 19 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாக குறிப்பிட்பட்டிருக்கிறது. 13 மாவட்டங்கள் மட்டுமே சராசரியை விட அதிக வருமானம் ஈட்டியுள்ளன.

  சென்னையை ஒட்டி யுள்ள தொழிற்சாலைகள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டம் தான் ரூ.3,64,337 ஆண்டு வருமானத்துடன் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் ரூ.1,07,731 வருமானத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

  வட மாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது என்ற உண்மையை உணர்ந்து அந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

  வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு வசதியாக இந்திய

  அரசியலமைப்புச் சட்டத்தில் 371 (கே) என்ற புதிய பிரிவைச் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடி கீழே சென்று விட்டது.
  • பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  காவிரி பாசன மாவட்டங்களின் எந்தப் பகுதியிலும் கடந்த இரு மாதங்களில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. கடுமையான வறட்சி காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடி கீழே சென்று விட்டது. அதனால், உழவர்கள் அதிக குதிரைத்திறன் சக்தி கொண்ட நீர் இறைப்பான்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், கூட அவற்றின் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் எடுக்க முடிகிறது.

  பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்; உழவர்களை பாதுகாக்கும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.