என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.
- மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.
சென்னையில் தமிழ்நாடு புதுமை தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* நாகரிகமற்றவர்கள் என சொல்பவர்கள் தான் அநாகரிகமாக பேசுகின்றனர்.
* மொழிப்பிரச்சனையை திசை திருப்ப அவர்கள் தான் அமலாக்கத்துறை சோதனையை ஏவுகின்றனர்.
* மொழிப்பிரச்சனை, கல்விநிதி குறித்து பல மாதங்களாக பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது.
- தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த 10-ந்தேதி வரை ஏறுமுகத்தில் இருந்து, நேற்று முன்தினம் சற்று இறங்கியது.
தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது. நேற்று நிலவரப்படி, கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கும், சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ரூ.65 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,520
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-03-2025- ஒரு கிராம் ரூ.109
11-03-2025- ஒரு கிராம் ரூ.107
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
08-03-2025- ஒரு கிராம் ரூ.108
- பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
- தமிழ்நாடு பட்ஜெட் சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு.
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை, டைடல் பார்க் சந்திப்பு, கிண்டி பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் 100 பகுதிகளில் பட்ஜெட் நேரலை செய்யப்பட இருக்கிறது.
- இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
- பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.
தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,
முதல் மொழி: ஆங்கிலம்
இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்
இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?
வெளங்கிடும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர்.
- நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா நகர் 7-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் பாலமுருகன் (வயது 53) குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி சுமதி (வயது 47) சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார் (வயது 18), லிங்கேஷ் குமார் (வயது 16) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். 2-வது மகன் லிங்கேஷ் குமார் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
டாக்டர் பாலமுருகன் அண்ணாநகர் 13-வது மெயின் ரோட்டில் ஸ்கேன் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். மருத்துவ தொழிலில் முதலீடு செய்வதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கி இருந்தார்.
அவருக்கு ரூ.5 கோடி வரை கடன் இருந்ததாக தெரிகிறது.
கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர். ஆனால் டாக்டர் பாலமுருகனால் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த இயலவில்லை. வட்டி தொகையையும் அவர் கட்ட இயலாமல் திணறியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த குடும்பப் பிரச்சனையால் டாக்டர் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.
இந்த நிலையில் கடன் தொகையை பலரும் டாக்டர் பாலமுருகனிடம் திருப்பி கேட்டனர். இதனால் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளான டாக்டர் பாலமுருகன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தார்.
இதுபற்றி அவர் தனது மனைவி சுமதியிடம் கூறியதாக தெரிகிறது. அவரும் உயிரை மாய்ப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. மகன்களுடன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தம்பதிகள் திட்டமிட்டனர்.
அதன்படி டாக்டர் பாலமுருகன் தனது மனைவி சுமதி மற்றும் 2 மகன்களுடன் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டனர்.
வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு 4 பேரும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். டாக்டர் பாலமுருகன் ஒரு மின் விசிறியிலும், அவரது மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் மற்றொரு மின்விசிறியிலும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து இருந்தனர்.
வழக்கறிஞர் சுமதி தனது 2-வது மகன் லிங்கேஷ் குமாருடன் ஒரே மின் விசிறியில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது அருகில் உள்ள வீடுகளில் யாருக்கும் கேட்கவில்லை.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு டாக்டர் பாலமுருகனின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர் பக்கத்து வீடுகளில் இதுபற்றி தகவல் தெரி வித்தார். அவர்கள் வந்து அழைத்தும் டாக்டர் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. இதனால் அவர்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம் போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் டாக்டர் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இது பற்றி தகவல் பரவியதும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமங்கலம் போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- மராத்தியில் பேச வேண்டும் என்று எங்கு எழுதப்பட்டுள்ளது?
- மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமானதா?
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்த சம்பவம் அம்மாநிலத்தில் மொழி பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
வைரல் வீடியோவில்,பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம் ஏர்டெல் ஸ்டோரில் பணியாற்றும் பெண் ஒருவர் மராத்தி மொழி பேச மறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் அந்த ஊழியர், "நான் ஏன் மராத்தி மொழியில் பேச வேண்டும்? மகாராஷ்டிராவில் மராத்தியில் பேச வேண்டும் என்று எங்கு எழுதப்பட்டுள்ளது? என்னிடம் முறையாக பேசுங்கள்."
"நான் ஏன் மராத்தியில் பேச வேண்டும்? நீங்கள் தான் மகாராஷ்டிராவை வாங்கியுள்ளீர்களா? மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமானதா, நான் எங்கு வேலை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று நீங்கள் எனக்கு கூறுகின்றீர்களா? பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை, மீறி செய்தால் நான் காவல் துறையை தொடர்பு கொள்வேன்," என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த வாடிக்கையாளர், "நீங்கள் என் பிரச்சனையை தீர்க்கவில்லை, மேலும் என்னிடம் சரியாகவும் பேச மறுக்கின்றீர்கள்," என்று கூறியுள்ளார். ஏர்டெல் ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் இடையே மொழி விவகாரம் குறித்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ளூர் மொழியை ஊக்குவிப்பது அவசியம் என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சித்ரா வாக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மகளிர் அணி தலைவராகவும் இருக்கும் சித்ரா வாக், " ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால், அவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை தெரியவில்லை எனில், அவர்கள் அதனை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அல்லது மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
- மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
- மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், சென்டிரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் மெட்ரோ ரெயில் சேவையை 3 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்பம் முதலே மெட்ரோ ரெயில் சேவைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது.
இதனால் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் 47 கிலோ மீட்டர் தொலைவில் என 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 3-வது வழித்தடத்தில் 19 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை வரையிலான 4-வது வழித்தடத்தில் 18 உயர்மட்ட நிலையங்களும், 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும், 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.
இதற்கிடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் (விமான நிலையம் அமையவுள்ளது) வரையில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து வழித்தடம் நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவனம் இறங்கியது.
பூந்தமல்லி-பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே முடிவு செய்யப்பட்டு அதற்கான கள ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்றுமுன்தினம் (11-ந்தேதி) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபாலிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக அரசிடம் வழங்கியுள்ள திட்ட அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரையில் வழித்தடம் அமைகிறது.
இந்த வழித்தடத்தின் மொத்தம் நீளம் 52.94 கிலோ மீட்டர் ஆகும். மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. திட்டத்தின் மொத்த செலவு ரூ.15 ஆயிரத்து 906 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது.
- இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இருமொழிக்கொள்கையே போதுமானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
ஆகவே, மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது என்பது தான் நம்முடைய தமிழ்நாட்டு அரசின், தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு ஆகும்.
ஆனால், பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் இந்தியை படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைத்துவிடும், இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குகிற உள்நோக்கத்தோடு பா.ஜ.க.வினர், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்வதை அம்பலப்படுத்துகிறோம். அதை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.
- ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் தான் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இன்றைய திட்டம் தாமதமாகி உள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நாசா விண்வெளி வீரர்களான ஆனி மெக்லைன், நிகோல் ஏயர்ஸ், ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த தகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோமோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி விட்டனர். மேலும், இந்த ராக்கெட்டும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய திட்டப்படி ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19-ம் தேதி பூமிக்கு திரும்பியிருப்பர். தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகி உள்ளது.
- நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
- ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுவார். வரும் நிதியாண்டான 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிப்பார்.
2021-ம் ஆண்டு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்பு உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் அளிக்கப்படும் உதவித்தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இலவசமாக பெண்கள் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? போன்ற கேள்விகளை பெண்கள் மத்தியில் பட்ஜெட் எழுப்பியுள்ளது.
இந்த பட்ஜெட் உரையை சட்டசபையில் 2 மணி நேரம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு படிப்பார். அவர் படிக்க படிக்க அந்த தகவல்கள் நேரலையில் வெளியிடப்படும். அவையில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் பட்ஜெட்டை எம்.எல்.ஏ.க்கள் வாசிப்பார்கள். பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து முடித்ததும் அவையின் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் நடத்தப்படும். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? என்பது உள்பட அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் வெளியிடுவார்.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மறுநாளில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் வேளாண்மை பட்ஜெட் 15-ந் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும்.
அப்போது சட்டசபையில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். 4 அல்லது 5 நாட்கள் இந்த விவாதம் நடைபெற்று, எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு நிதித்துறை அமைச்சர் பதில் அளித்து பேசுவார். அதன் பின்னர் சில நாட்கள் இடைவெளி விடப்பட்டோ அல்லது தொடர்ச்சியாகவோ சட்டசபை நடைபெறும். அப்போது ஒவ்வொரு அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடத்தப்படும்.
அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் தேதிகளில் அந்தந்த துறைக்கான விவாதம் நடத்தப்பட்டு, அன்றே அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பின்னர் துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அந்தத் துறைக்கு நிதி ஒதுக்கப்படும்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
2025-2026-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வரும் 21-ந் தேதியன்று அவைக்கு அளிக்கப்படும்.






