என் மலர்
தலைப்புச்செய்திகள்
- முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
- உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார்.
செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் உச்சமாக ஓபன் ஏஐ உடைய பிரபல சாட்பாட் தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்த்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56). இவர் முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.
இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.
சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.
"உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.
இதன் விளைவாக எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.
- பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
- ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
ராகுல் காந்தியுடன் ராஷ்டீரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உடன் சென்றார்.
வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். யாத்திரையின்போது வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்தியின் பேரணியில் பிரியங்கா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமார், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து இருந்தனர்.
இதற்கிடையே ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
பீகாரில் உள்ள 20 மாவட்டங்களில் 1,300 கிலோ மீட் டர் தூரம் பயணம் மேற்கொண்ட அவரது யாத்திரை பாட்னாவில் நிறைவடைகிறது. இறுதி நாள் யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளைய பேரணி நிறைவில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவரும் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதான், உத்தரபிரதேச தலைவர் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் பாட்னா நிறைவு பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றி எரியும் அறிகுறிகள் இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.
- அந்த எஞ்சின் மட்டும் சட் டவுன் செய்யப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று 90 பயணிகளுடன் புறப்பட்டது.
அப்போது விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றி எரியும் அறிகுறிகள் இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.
இதனால் அந்த எஞ்சின் மட்டும் சட் டவுன் செய்யப்பட்டு விமானம் மீண்டும் டெல்லியில் அவசரமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாதுகாப்பு விதிமுறைகளின்படி விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பணியாளர்கள், பயணிகள் பாத்திரமாக இருப்பதாகவும் ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
- பூஞ்சில் மாவட்டத்தில், ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
- பயங்கரவாதிகளுடன் 2 துப்பாக்கிகளும், சில வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு- காஷ்மீரின் எல்லை மாவட்டமான பூஞ்சில் ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது அகமதாபாத்தை சேர்ந்த தாரிக் ஷேக் மற்றும் சேம்பர் கிராமத்தை சேர்ந்த ரியாஸ் அகமது ஆகிய பயங்விரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளும், சில வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
- இபிஎஸ் பிரசார பயணம் குறித்து பிரேமலதா விமர்சனம்.
- எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
இபிஎஸ் சுற்றுபயணத்திற்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்று உலகத்திற்கே தெரியும்.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.
நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் தொண்டர்களும், மக்களும் திரண்டு வருகின்றனர்.
எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார்.
அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.
அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இபிஎஸ்-ன் மாண்பு பாதிக்கப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் வெளியே ரத்தகரை இருந்துள்ளது.
- ரத்தம் தோய்ந்த ஆடைகளையும், கத்திரிகோலயும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி ரோஹணி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவரின் மனைவி பிரியா (34) . நேற்று (ஆகஸ்ட் 30) இவர்களின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரியாவின் தாய் குசும் சின்ஹா (63) ஆகஸ்ட் 28 அன்று அங்கு சென்றுள்ளார்.
நேற்று பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெறப்பட்ட பரிசுப்பொருட்கள் பற்றி காணவர் யோகேஷ் மனைவி பிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரிடையேயும் வாக்குவாதத்தை தீர்க்க குசும் முயன்றுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற தாய் வீடு திரும்பாததால் குசும் உடைய மகனும் பிரியாவின் சகோதரனுமான மேக் சின்ஹா போன் செய்துள்ளார்.
அப்போது இந்த வாக்குவதம் குறித்து மகனுக்கு குசும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதன் பின் வெகு நேரம் ஆகியும் தாய் வீடுதிரும்பாததாலும், போன் செய்தும் எடுக்காததாலும் மேக் சின்ஹா அங்கு சென்றுள்ளார்.
அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் வெளியே ரத்தகரை இருந்துள்ளது. இதை தொடர்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது குசும் மற்றும் பிரியா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதுதொடர்பாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த ஆடைகளையும், கத்திரிகோலயும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்து குழந்தைகளுடன் தப்பிச் சென்ற யோகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் திரைப்படம் உலகளவில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்ததற்கு துல்கர் சல்மானை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
- சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
சங்கர் ஜிவால் விடைபெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
- வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பாதிப்பிலிருந்து தமிழக ஏற்றுமதியாளர்கள் மீட்க நடவடிக்கை தேவை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் கவலைகளோடும் இருக்கும் நெசவாளர்கள். மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள். இயந்திரங்கள். ரசாயனங்கள். மின்னணுப் பொருட்கள். கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள். லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள். தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில், வங்கதேசம் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா இந்த அளவிற்கு வரியை விதிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாகவும், அதே நேரத்தில் 50 சதவீதம் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும்.
வரி அதிகமான காரணத்தினால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும்.
இந்த வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மீனவர்கள் ஆகியோரின் வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.
இதனால் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள்.
இந்தக் கூடுதல் வரிவிதிப்பு அச்சுறுத்தல், சிறிது காலமாகவே இருந்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
வெளியுறவுக் கொள்கையில் ஒரு முன்முயற்சி எடுத்திருந்தால் இந்தச் சூழ்நிலையைத் தடுத்திருக்க முடியும் என்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.
'உலகளாவிய தெற்கின் குரல்' என்று ஒன்றிய அரசு பெருமையாகக் கூறிக்கொண்டாலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த உடனே இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க, எந்த அவசரத் திட்டமோ, நிவாரண நடவடிக்கைகளோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல், 'முதலீட்டு உச்சி மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய வெற்று விளம்பரங்களோடு தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள், 50 சதவீத வரி விதிப்பால் பாதி வழியில் துத்துக்குடிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் கவலை அளிக்கின்றன. ஏனெனில் இதில் பாதிக்கப்படுவது தமிழக ஏற்றுமதியாளர்கள் தான்.
எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆகவே, ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1. தொழில் துறை, தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய, தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய ஒன்றிய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.
- யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடி சீனா சென்றார். ஷாங்காய் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவர் இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து அதிபர் ஜி ஜிங் பிங் உடன் விவாதித்தார்.
இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியா-சீனாவின் நெருக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த இணக்கம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.
ஜூன் 2020 இல், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு தாக்குதல் நமது துணிச்சலான ஜவான்களில் 20 பேரின் உயிரை பறித்தது.
இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். லடாக்கில் சீனாவுடனான எல்லையில் தற்போதைய நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என ராணுவத் தலைவர் கோரினார்.
ஆனால் அதை மீட்டெடுப்பதற்கு பதிலாக சீனா தனது ஆக்கிரமிப்பை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு எதுவாக மோடி அதை சட்டபூர்வமாக்கினார்.
ஜூலை 4, 2025 அன்று, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுடனான சீனாவின் கூட்டணி குறித்து வலுவாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.
இதற்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அந்த கூட்டணியை அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது அரசு முறை பயணங்கள் மூலம் சீனாவின் நன்மைக்கு பணியாற்றி வருகிறது.
யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது நமது வடகிழக்கு பகுதிக்கு மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் மோடி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சீனாவிலிருந்து கட்டுப்பாடற்ற வகையில் குப்பை போல இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், நமது சிறுகுறு தொழில்களை (MSME-களை) தொடர்ந்து அழித்து வருகிறது.
மற்ற நாடுகளைப் போலல்லாமல், சீன இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடற்ற சுந்திரத்தை நாம் வழங்கி வருகிறோம்,
சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம், நமது அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மை ஆகியவற்றால் நமது 'புதிய இயல்பு' வரையறுக்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.
- மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பின் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் பரவலாக நடந்து வருகிறது.
அதன்படி இந்த வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதமும் நிலவி வருகிறது.
50சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் பெரிய சந்தையை கொண்டுள்ள அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கக்கூடும்.
சுதந்திர போராட்ட சமயத்தில் இந்தியரகள் கையில் எடுத்த சுதேசி இயக்கம், நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க வரிவிதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, சுதேசி பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து சமீப காலங்களில் மேடை தோறும் பேசி வருகிறார்.
அதன்படி அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்கொள்ள இத்தகு அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
உலகிலேயே அதிக (145 கோடிக்கும் அதிகமான) மக்கள் தொகை இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது அந்நாட்டுக்கு பேரிழப்பாகும்.
வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட் உடைய மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5% அதிகம்.
இந்தியாவில் பெப்சிகோவின் வருவாய், 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 8,200 கோடியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனம், சுமார் 4,000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பது அந்நிறுவனங்களின் மீதான அழுத்தமாக மட்டுமல்லாமல் அமெரிக்க பொருளாதரத்தின் மீதான மறைமுக தாக்கமாக மாறக்கூடும்.
- திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
- சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் நேற்று அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சசிகாந்த் செந்திலின் இதய துடிப்பில் மாற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.






