என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா-சீனா"

    • சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.
    • இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.

    இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

    இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்துவைக்க கூரைகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கூரைகள் திறக்கப்பட்டவுடன் ஏவுகணைகளைச் சுட அனுமதிக்கிறது. இதன்பின் எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க கூரைகள் மீண்டும் மூடப்படும்.

    இந்த பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    இந்த வடிவமைப்பைக் கொண்ட ஒரு மாதிரி வளாகம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள கார் கவுண்டியில், இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

    • சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்களை உயிருடன் உருகச் செய்யும் மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி பேசுகையில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.

    சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் ஒரு சர்ச்சைக்குரிய எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அப்போது சீனா இந்திய வீரர்களை உருக்க ஒரு மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது" என்று தெரிவித்தார்.

    பெயரை குறிப்பிடவில்லை எனினும், இது 2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். 

    • பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.
    • யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது.

    7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடி சீனா சென்றார். ஷாங்காய் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவர் இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து அதிபர் ஜி ஜிங் பிங் உடன் விவாதித்தார்.

    இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியா-சீனாவின் நெருக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த இணக்கம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.

    ஜூன் 2020 இல், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு தாக்குதல் நமது துணிச்சலான ஜவான்களில் 20 பேரின் உயிரை பறித்தது.

    இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். லடாக்கில் சீனாவுடனான எல்லையில் தற்போதைய நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என ராணுவத் தலைவர் கோரினார்.

    ஆனால் அதை மீட்டெடுப்பதற்கு பதிலாக சீனா தனது ஆக்கிரமிப்பை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு எதுவாக மோடி அதை சட்டபூர்வமாக்கினார்.

    ஜூலை 4, 2025 அன்று, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுடனான சீனாவின் கூட்டணி குறித்து வலுவாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.

    இதற்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அந்த கூட்டணியை அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது அரசு முறை பயணங்கள் மூலம் சீனாவின் நன்மைக்கு பணியாற்றி வருகிறது.

    யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது நமது வடகிழக்கு பகுதிக்கு மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் மோடி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    சீனாவிலிருந்து கட்டுப்பாடற்ற வகையில் குப்பை போல இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், நமது சிறுகுறு தொழில்களை (MSME-களை) தொடர்ந்து அழித்து வருகிறது.

    மற்ற நாடுகளைப் போலல்லாமல், சீன இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடற்ற சுந்திரத்தை நாம் வழங்கி வருகிறோம்,

    சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம், நமது அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மை ஆகியவற்றால் நமது 'புதிய இயல்பு' வரையறுக்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    • இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

    அமெரிக்கா இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் காட்சிகள் மாறி வருகின்றன.

    ஜூன் 2020 இல் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பகையை மறந்து இந்தியா சீனாவுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளது.

    வரும் ஆகஸ்ட் 31 அன்று சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டுக்கு பிரதமர் மோடி பயணப்படுகிறார். இதற்கிடையே நிறுத்திவைக்கப்பட்ட இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சூழலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, வாங் யி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து முக்கியமாக எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிப்பார். பின்னர், இருதரப்பு பிரச்சினைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக அஜித் தோவல் டிசம்பரில் சீனாவுக்குச் சென்று வாங் யியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடன் வெடித்த மோதலில் சீனா தங்களுக்கு உதவியதாக பாகிஸ்தான் தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.
    • சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்

    ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்று சீனா அதிகாரபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்ட கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசுகையில், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனா தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை நடத்தும். SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக சீனா, பிரதமர் மோடியை வரவேற்கிறது.

    அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியுடன், தியான்ஜின் உச்சிமாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் சங்கமமாக இருக்கும்.

    SCO அதிக ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தை சீனா விமர்சித்தது. "நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்" என இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong தெரிவித்திருந்தார். 

    • ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை.
    • இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதம்.

    பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.

    மேலும், இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    அப்போது, மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடனும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சருடனும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ரஷிய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி" என தெரிவித்தார். அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.

    இதேபோல் சீன நிதி அமைச்சர் லான் போனுடன் இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார்.

    மேலும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

    • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது
    • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது, எப்போதும் இருக்கும். கற்பனையான பெயர் சூட்டல்களால் இந்தியாவின் பகுதியை ஒரு போதும் சீனா சொந்தம் கொண்டாட முடியாது" என்று தெரிவித்தது.

    மேலும், சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

    • எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.
    • எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    பீஜிங் :

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப் படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும்கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.

    இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுவரை 17 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின. ஆனாலும் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. சீனப்படையினர் அங்கு அத்துமீறி கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதும், அவர்களை இந்தியப்படையினர் துரத்தியடிப்பதும் தொடர்கதையாக நீளுகிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கில் உள்ள சீன ராணுவ தலைமையகத்தில் இருந்தவாறு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப்படையினரின் போர் தயார் நிலையை நேற்று காணொலிக்காட்சி வழியாக திடீரென ஆய்வு செய்தார். அப்போது எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதி தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது சீன ராணுவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சீனப்படையினரிடம் விசாரித்தார். இதற்கு சீனப் படைவீரர் ஒருவர் பதில் அளிக்கையில், "நாங்கள் தற்போது 24 மணி நேரமும் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

    அவர்களது அன்றாட பணி நிலைமை பற்றி ஜின்பிங் கேட்டதோடு, விருந்தோம்பல் தன்மையற்ற நிலப்பரப்பில் சாப்பாட்டுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கின்றனவா என பரிவுடன் விசாரித்து அறிந்தார்.

    இதையொட்டி சீன அரசு தரப்பு ஊடகம் கூறுகையில், "எல்லையில் உள்ள படைவீரர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வருகிற ரோந்துப்பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றி அதிபர் ஜின்பிங் கேட்டறிந்தார். சீனப்படை வீரர்கள் எல்லைப் பாதுகாப்பின் மாதிரிகள் என பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சிகளில் ஈடுபடவும், புதிய பங்களிப்புகளை வழங்கவும் ஊக்கம் அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்துள்ளது.
    • கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    கிழக்கு லடாக், அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கால்வான் பகுதியில் 2020-ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா-சீனா இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவ வீரர்களை குவித்து வந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.

    இருநாட்டுக்கும் எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படாததால் எல்.ஏ.சி. எனப் படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு ராணுவ வீரர் களும் அவரவர் பகுதியில் ரோந்து சென்று வந்தனர்.

    இருநாட்டினரும் தொடர்ந்து ராணுவ வீரர்களை நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் குவித்ததால் அங்கு எப்போது வேண்டு மானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் இருந்து வந்தது.

    இதற்கு தீர்வு காண 4 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதில் உடன்பாடு ஏதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

    ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர்.

    அப்போது எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன் படி இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.

    சீன ராணுவமும் கிழக்கு லடாக் பகுதியில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது. இந்திய ராணுவமும் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை சூழல் உருவாகியுள்ளது.

    அந்த பகுதியில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும் சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×