என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும்.

    இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர்மட்டத்துக்கேற்ப வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் நீர்வரத்து காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து 4 முறை வீராணம் ஏரி நிரம்பியது. அதனை தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பியது மற்றும் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக குறைந்தது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டனர்.

    தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2 அடியில் இருந்த கீழணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 9 அடியை எட்டியது.

    அதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

    இதன் மூலம் நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கீழணை, வீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். 

    • செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
    • தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோபி:

    அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

    மீண்டும் 2011 ஆம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். அதை த்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

    இப்படி அ.தி.மு.க.வின் மிக முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார்.

    இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார்.

    ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கிய போது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.

    கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம் வரும் 5-ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார்.

    மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2, 3 மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாட்டால் அ.தி.மு.க.வில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது. அவர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதற்கிடையே இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் வந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 36ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    29-08-2025- ஒரு கிராம் ரூ.131

    28-08-2025- ஒரு கிராம் ரூ.130

    • இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • இதற்கு முன்பு டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
    • 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரசீத் கான் படைத்தார்.

    இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3-ம் இடமும் 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4-ம் இடமும் 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5-ம் இடத்திலும் உள்ளனர். 

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
    • கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது.

    இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. பின்னர் ஜூலை 20-ந் தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது.

    பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்தது.

    இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயரத்தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 6-வது முறையாக இன்று காலை நிரம்பியது. அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் அணை 6-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    • இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது.
    • இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்தார். இதையொட்டி அவர் யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகத்தை பார்வையிட்டு அங்கிருந்து நெடுந்தீவு சென்றார்.

    நெடுந்தீவில் இருந்து கடற்படை ரோந்து கப்பல் மூலமாக இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் உள்ள கச்சத்தீவுக்கு அவர் சென்றார். அங்கு கச்சத்தீவை பார்வையிட்டார்.

    பின்னர் அங்கு கடற்கரையோரம் மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து சிறிது நேரம் பேசினார். தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் புறப்பட்டு வந்தார்.


    கச்சத்தீவு சென்ற இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே, அந்நாட்டு அதிகாரிகள், கடற்படையினருடன் ஆலோசனை நடத்திய காட்சி.

    இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக்கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடப்பதால் கச்சத்தீவை திரும்ப பெற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இலங்கை அதிபரின் கச்சத்தீவு வருகை பரபரப்பாக பேசப்படுகிறது.

    • 65 சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் விளையாடியுள்ளார்.
    • டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

    இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.

    2027 ஒருநாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக என தெரிவித்துள்ளார்.

    65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
    • சசிகாந்த் செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    உண்ணாவிரதம் இருந்த சசிகாந்த் செந்திலுக்கு கடந்த 30-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், 4 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போரட்டத்தை சசிகாந்த் செந்தில் நேற்று முடித்துக்கொண்டார்.

    காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சசிகாந்த் செந்தில் நேற்று இரவு உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தார்.

    இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மருத்துவமனைக்கு சென்று பழச்சாறு கொடுத்து நிலையில் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    • காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
    • திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என காரியாபட்டியில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

    இதனிடையே, கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. சேர்மனின் சகோதரர் ஓட்டி சென்ற காரை சுற்றி வளைத்து கண்ணாடியை உடைத்து அவர்களை அ.தி.மு.க.வினர் விரட்டி அடித்துள்ளனர்.

    முன்னதாக, திருச்சி அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

    • அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
    • மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், குருகிராம் சாலையில் தேங்கிய மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையின் பொது வெள்ளநீர் தேங்காமல் இருக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். 

    ×